Wednesday, August 5, 2015


சின்னதாய்
ஒரு சிங்கப்பூர்
விஸிட்

--- குறுநூல் ---


சித்ரன் ரகுநாத்
சின்னதாய் ஒரு சிங்கப்பூர் விஸிட்
சித்ரன் ரகுநாத்


உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.


அட்டைப் படம் / மின்னூலாக்கம் : சித்ரன் ரகுநாத்


மின்னஞ்சல்
chithranji@gmail.com

இணையத்தில்

முன்னுரை

2008-ல் எனக்கு வாய்த்த சிங்கப்பூர் பயணத்தின்போது நான் பார்த்த விஷயங்களை சிறு சிறு குறிப்புகளாக ‘இன்று’ என்கிற வலைத் தளத்தில் எழுதினேன். இது என் முதல் வெளிநாட்டுப் பயணம் என்பதால் பின்னொரு நாளில் அந்த இனிய அனுபவங்களை நினைவு கூற வழிவகை செய்யும் வகையில் சும்மா டயரிக் குறிப்புகள் போலத்தான் எழுதிவைத்தேன். ஆனால் பின்னாளில் வாசகர்களால் அதிகம் தடவைகள் பார்வையிடப்பட்ட  பதிவுகளாக இவை இருப்பதைக் கவனித்தேன்.
இதை குறுநூலாக்கும் யோசனை எழுத்தாளர் திரு.சொக்கன் மூலம்தான் வந்தது. அவருக்கு என் நன்றிகள்.
சிங்கப்பூர் என்னும் அழகிய நாட்டுக்கு முதல் முறை செல்ல நினைப்பவர்களுக்கு ஒரு சின்ன அறிமுகமாக மட்டுமே இந்த நூல் இருக்கும்.
நண்பர் தனபால் பத்மநாபன் இல்லாமல் இந்தப் பயணம் சாத்தியமாகி இருக்காது. அவருக்கும் என் நன்றிகள்.

சித்ரன் ரகுநாத்

1. பசுமை நகரம் சிங்கப்பூர்



சிங்கப்பூர் ஒரு கான்க்ரீட் காடு என்றுதான் நான் ரொம்ப நாளாய் நினைத்திருந்தேன். சாங்கி ஏர்போர்ட்டில் விமானம் தரை இறங்கும்போது ஜன்னல் வழியே அந்தரத்திலிருந்து பார்த்ததும் அந்த நினைப்பை மாற்றிக்கொண்டுவிட்டேன். தரை இறங்கும்போது ‘ஜோ’ என கொட்டிக்கொண்டிருந்த மழையில் நகரின் பசுமை இன்னும் தூக்கலாய் தெரிந்தது. ஒரு சதுர அடி நிலம் சும்மா கிடந்தால் அதிலும் புல் வளர்த்து விடுவார்கள் போல எங்கெங்கும் பசுமை.
இறங்கினவுடன் ஒரு மறக்க முடியாத அனுபவம். கூட வந்த நண்பர், கூட்டிப்போக வந்த நண்பர் என இருவரும் பேச்சு சுவாரஸ்யத்தில் என்னை மறந்துவிட்டு விமான நிலைய டெர்மினல் இரண்டில் ஸ்கை ட்ரெயின் ஏறி மறைந்துவிட நான் திகைத்து நின்றேன். நானோ ஊருக்கு புதுசு. தொடர்பு எண்கள், என் பாஸ்போர்ட் எல்லாமே நண்பரிடம் இருந்தது. ஆனால் பாருங்கள், சிங்கப்பூரில் நீங்களே நினைத்தாலும் தொலைந்து போய்விட முடியாது என்கிறபடிக்கு எல்லா இடங்களிலும் தெளிவாய் Sign Board-கள் அம்புக்குறி போட்டு வீடு வரை கூட்டிச் சென்று விடுகின்றன. ஆகவே நான் தொலையாமல் நண்பர்களுடன் இரண்டே நிமிடங்களில் சேர்ந்தேன்.
அப்புறம் துரிதக் கடவு ரயில் (MRT) மூலம் இந்த கோடியிலிருக்கும் ஏர்போர்ட்டிலிருந்து அந்தக் கோடியிலிருக்கும் பூன்-லேக்கு ஒரு நீண்ட பயணம். நீண்ட என்றால் சும்மா ஒரு மணி நேரம்தான். மொத்தமே 718 சதுர கி.மீ அளவுள்ள சின்ன ஊர் சிங்கப்பூர். சீனத்தோட்டம், ஏரிக்கரை என்றெல்லாம் தமிழ்ப் பெயர்களில் ரயில் நிலையங்கள் கடந்தன. MRT ரயில்களில் ஜன்னல்கள் பெரிது என்பதால் வெளியில் தெரிந்த வனப்புமிகு சிங்கப்பூரின் முதல் தரிசனம் ரம்மியமாக இருந்தது.
ரயிலில் ஊனமுற்றோர்க்கான இருக்கை என்று பொதுவாய் குறிப்பிடாமல் கொஞ்சம் யோசித்து மனதை புண்படுத்தாமல்  “Please offer this seat to someone who needs it more than you do” என்று எழுதி வைத்திருந்ததை பார்த்ததிலிருந்து விரிந்தது சிங்கப்பூரின் ஆச்சரியங்கள்.


அப்புறம் டாக்ஸிக்கு வரிசையில் காத்திருக்கும் மக்கள். அபார்ட்மெண்ட் கட்டிடத்தின் நம்பர் சொன்னாலே அழகாய் கொண்டுபோய் வாசலில் இறக்கிவிடும் ட்ரைவர் என சிங்கப்பூரின் இயக்கத்தில் ஒருவித ஒழுங்கு தெரிந்தது. முதல் முறை இந்தியாவிலிருந்து இங்கே வருகை புரிபவர்களுக்கு ‘நம்மூர் இப்படி இல்லையே’ என்ற எண்ணம் முகத்திலறைவது தவிர்க்க இயலாததுதான்.

2. அநியாய சுத்தம் – ஒழுங்கு

சிங்கப்பூரில் நாங்கள் தங்கிய வீடு ஜூராங்-மேற்கில் பதிமூன்றாவது மாடியில் இருந்ததால் அங்கிருந்து அதன் தொழிற்சாலைப் பகுதிகள், துறைமுகம் எல்லாம் ஒரு panoramic view-ல் காணக்கிடைத்தது. (எந்தக் கட்டிடத்திலும் மொட்டை மாடியியிருந்து வேடிக்கை பார்க்க யாருக்கும் அனுமதி கிடையாதாம்.).
மரத்திலிருந்து ஒரு இலை உதிர்ந்தாலும் கூட பதறியடித்து ஒரு லாரி வந்து மெஷின் போட்டு உறிஞ்சி எடுத்துக்கொண்டு சென்றுவிடுகிறது. ரோடுகள் அத்தனை சுத்தம். எங்கேயும் ஹோர்டிங்குகள், விளம்பரப் பலகைகள், அரசியல் கட் அவுட், சினிமா போஸ்டர்கள்  கிடையாது. எல்லா இடங்களிலும் தள்ளு முள்ளு இல்லாமல் மக்கள் பஸ்ஸுக்கும் டாக்ஸிக்கும் அநியாயத்துக்கு வரிசையில் காத்திருந்து ஏறுகிறார்கள்.
ஆட்டோக்கள் இல்லாத சிங்கப்பூர் நகரம் மிகுந்த ஆறுதல். ஆனால் எங்கு போனாலும்  கால் வலிக்கிற அளவுக்கு எஸ்கலேட்டர்களில் ஏறி இறங்க வேண்டியிருந்தது. துரித ரயிலில் இடைவிடாது பயணிகளுக்கான தமிழ், ஆங்கில அறிவிப்புக் குரல்கள். நிரந்தரக் குடியுரிமை பெற்று தினசரி இதில் பயணிப்பவர்களுக்கு இந்தக் குரல்கள் அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாத ஒரு இனிய அவஸ்தையாகிவிடும் என்று தோன்றுகிறது.
முக்கியமான எல்லாப் பொது இடங்களிலும் லேசாய் நிமிர்ந்து பார்த்தால் “This area is under camera surveilance” என்று ஒரு சின்ன அறிவிப்பும் சில கண்காணிப்புக் கேமராக்களும் நம்மை முறைக்கின்றன. ஊருக்குத் திரும்பி வரும்வரை ஒன்றிரண்டு பேர்களைத் தவிர போலீஸ்காரர்கள் அதிகமாய் கண்ணில் படவில்லை. நகரில் பராமரிப்புப் பணிகள் நடக்கிற எல்லா இடங்களிலும் சுற்றிலும் மூடி மறைத்து, தமிழ் உட்பட நான்கு மொழிகளில் சீராக ஒரே மாதிரி அபாய அறிவிப்புப் பலகை வைக்கிறார்கள்.
சீனர்கள், மலேசியர்கள், சிங்கப்பூர் மக்கள் – இவர்களுக்கிடையேயான முக வித்தியாசம் புரியவில்லை. சிங்கப்பூர் கல்வித் துறையில் பணிபுரியும் திரு பூபதி தியாகராஜன் அவர்களிடம் பேசும்போது தன்னால் அந்த வித்தியாசத்தை அறிய முடியும் என்றார். அவர் இருபத்தியைந்து வருடங்களாக சிங்கப்பூரில் இருக்கிறார்.
நாங்கள் (நானும் நண்பர் தனபால் பத்மநாபனும்) சிங்கப்பூரில் இருந்தபோது Mas Selamat bin Kastari என்கிற ஒரு பயங்கரவாதி சிறையிலிருந்து தப்பிப் போயிருப்பதாகவும், தகவல் தந்தால் சன்மானம் என்று எங்கு பார்த்தாலும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. (அதற்கப்புறம் ஒரு வருடம் கழித்து மலேசிய போலீஸாரால் கைது செய்யப்பட்டிருக்கிறான்.)



ரெஸ்டாரன்டில் காபி, டீ கேட்டால் அரை அடி உயர தம்ளரில் ஸ்ட்ராவுடன் தருகிறார்கள். குறைந்தது ஒரு மணி நேரம் குடிக்கலாம். பரவலாய்க் காணப்படும் food court-களில் வறுத்துத் தொங்கவிடப்பட்ட பிராணிகளின் லிஸ்டையும் (அதில் ஓணான் சாயலில் ஒரு வஸ்து காணப்பட்டது), மூக்கைத் துளைக்கும் வாடையையும் தவிர்த்து மக்டொனால்டில் பன் ரொட்டி வகையறாக்களை சாப்பிட்டுத் தொலைக்க வேண்டியிருந்தது. மற்றபடி Nativity-யுடன் சாப்பிட விரும்புபவர்களுக்கு சரவணபவன், கோமளவிலாஸ், ஆனந்தபவன், அஞ்சப்பர் என்று ரவுண்டு கட்டி ஹோட்டல்கள் உள்ளன – லிட்டில் இந்தியா என்கிற இடத்தில்.
3. லிட்டில் இந்தியா


லிட்டில் இந்தியா-வுக்குள் நுழைந்ததும் சிங்கப்பூரின் முகம் சரேலென்று மாறிவிடுகிறது. தென்னிந்திய உடைகள். கடைகள். தமிழில் பெயர் பலகைகள். சென்னையின் ஒரு பகுதிக்குள் நுழைந்ததுபோல் ஒரு nativity உணர்வு வந்துவிடுகிறது. வார நாட்களில் சோம்பலாய்க் காணப்படும் தெருக்கள், வார இறுதியில் திருவிழா மாதிரி ஆகிவிடுகிறது. சிங்கப்பூர் வாழ் இந்தியர்கள், அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களை பார்க்க கூடுகிற கூட்டம்தான்.  Money Transfer அலுவலகங்களில் ஊருக்குப் பணம் அனுப்ப வரிசை நீளமாய்க் காத்திருக்கிறது. அர்ஜூனரு வில்லு அரிச்சந்த்ரன் சொல்லு.. என்று ஒலி பெருக்கியில் பாடல் முழங்குகிறது.
லிட்டில் இந்தியா ஆர்கேட் என்ற ஒரு கட்டிடத்தில் முக்குப் பிள்ளையார். நிறைய இந்திய உணவு விடுதிகள். அது தவிர துணிக்கடைகள், கலைப்பொருள்கள், அரிசி, பருப்பு, வெங்காயம், தக்காளி, கரம் மசாலா என்று எங்கும் இந்திய மயம். இந்திய மணம்.
லிட்டில் இந்தியாவின் மிக முக்கிய கவர்ச்சி செராங்கூன் ரோட்டிலுள்ள முஸ்தபா ப்ளாஸா. இது ஒரு 24 மணி நேர ஷாப்பிங் காம்ப்ளக்ஸ். எளிதில் புரிய வைக்க இதை சிங்கப்பூரின் சரவணா ஸ்டோர்ஸ் என்று சொன்னால் முதலாளி கோபித்துக்கொள்வாரா என்று தெரியவில்லை. ஆனால் அதைவிட 10 மடங்கு இருக்கிற இந்த மெகா ஸ்டோரில் சிங்கப்பூர் விசா தவிர மற்றவை எல்லாம் கிடைக்கும் என்று யாரோ சொன்னார்கள். இது ஒரு மிகப்பெரிய ஷாப்பிங் கடல்.
இது தவிர முஸ்தபாவிலிருந்து பொடி நடை தூரத்தில் நரஞ்சன் ஸ்டோர் (எல்லோரும் ஏன் இதை நிரஞ்சன் என்று அழைக்கிறார்கள் என்று புரியவில்லை) என்று ஒரு சீக்கியரின் கடையில் கொஞ்சம் சல்லிசாக மொபைல் ஃபோன்கள், டிஜிட்டல் கேமராக்கள் இத்யாதிகளின் விற்பனை தூள் பறக்கிறது. ஆக லிட்டில் இந்தியாவை சிங்கப்பூரின் இந்திய இதயம் என்று சொல்லலாம்.



4. செண்டோஸா

சிங்கப்பூரின் சுற்றுலா மையங்களான ஜூராங் பறவைகள் பூங்கா, விலங்கியல் பூங்கா, Esplanade இன்னபிற இடங்களை லேசாய் ஒதுக்கிவிட்டு சென்டோஸா பற்றி சொல்லிவிடுகிறேன். சென்டோஸா, சிங்கப்பூரை ஒட்டியுள்ள ஒரு தம்மாத்துண்டு தீவு. பசுமைப் போர்வையொன்றை போர்த்திக்கொண்டு மிக அமைதியாய் கிடக்கும் சென்டோஸாவுக்கு சிங்கப்பூர் மெளண்ட் பேபரிலிருந்து கேபிள் காரில் போகலாம். அல்லது ஹார்பர் ஃப்ரண்ட்-லிருந்து விவோசிடி ஸ்டேஷன் மோனோரயில் மூலம் பயணிக்கலாம். சாலை மற்றும் கடலில் படகுப் போக்குவத்து என்று வேறு சில பயண மார்க்கங்களும் உண்டு.
மழை பெய்கிற அன்று சென்டோஸா செல்வது உசிதமல்ல என்று சொன்னார்கள். சென்டோஸா போனபிறகு மழை பெய்தால் என்ன செய்வது? அதுதான் நடந்தது. ஆனால் மழையில் நனைந்த சென்டோஸா-வின் அழகு நிச்சயம் மற்ற நாட்களில் பார்க்கக் கிடைக்காது.
சென்டோஸாவை சுற்றிப்பார்க்க ஒரு நாள் முழுவதும் வேண்டும். தீவுக்குள்ளேயே இருக்கும் மூன்று பேருந்து சேவைகள் (சிவப்பு, நீலம் மற்றும் மஞ்சள் லைன்ஸ்) விரும்புகிற இடத்துக்கு கொண்டுபோய் விட்டுவிடுகிறது.
எங்களுக்குக் கிடைத்த நேரத்தில் Under Water world மற்றும் Dolphin Lagoon மட்டுமே பார்க்க முடிந்தது. வாட்டர் வேர்ல்ட்டில் ஒரு இருபதடி தரைக்கு கீழே படி இறங்கினால் தலைக்கு மேலே ஒரு மெகா சைஸ் பரந்த கண்ணாடி தொட்டிக்குள் சிறியதும் பெரியதுமாய் நிறைய மீனினங்களும் நீந்துகின்றன. அது தவிர ஒரு பொதுவான அக்வேரியத்தில் கலர் கலராய் கடல் ஜீவராசிகள். வாட்டர் வேர்ல்டு ரொம்ப எதிர்பார்த்த அளவு இருந்ததா என்று கேட்டால் சொல்லத் தெரியவில்லை. ஆனால் சென்டோஸா-வின் ஒரு கவர்ச்சிகரமான அம்சம் என்று நிச்சயம் சொல்லலாம்.
அ.வா.வே-க்கு வெளியே ஆறு டாலர் கொடுத்தால் இரண்டு மலைப் பாம்புகளை கழுத்தில் போட்டுக் கொண்டு புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம்.
அப்புறம் டால்பின் லகூன் சென்று ரொம்ப நேரம் காத்திருந்து, டால்பின்கள் ஒரு சின்னப்பெண் சொல்வதையெல்லாம் கேள்வி கேட்காமல் செய்வதைப் பார்த்தோம். ஸிலோஸா என்ற இரண்டு கிலோமீட்டர் நீள கடற்கரை இன்னொரு அழகான இடம். தீவுக்குள்ளேயே தங்குவதற்கு அழகான ரிசார்ட்கள் எல்லாம் உண்டு.
சென்டோஸா-வில் Songs of the sea, Merlion என்று இன்னும் நிறைய விஷயங்களை பார்க்காமல் திரும்பியது வருத்தம்தான். அடுத்த முறை அதிர்ஷ்டம் இருக்கிறதா பார்ப்போம். இங்கேயிருக்கிற மற்ற டூரிஸ்ட் அட்ராக்ஷன்களைப் பற்றி விவரமாகத் தெரிந்து கொள்ள http://en.wikipedia.org/wiki/Sentosa#Attractions துணைபுரியும்.
அதே மாதிரி சிங்கப்பூரின் முக்கிய லாண்ட் மார்க்கான ’மெர்லயன்’ நான் பார்க்கத் தவறிய அம்சங்களில் ஒன்று.

5. சந்திப்புகள்
இந்தப் பயணத்தின்போது ஒரு சில நண்பர்களைச் சந்திக்க வாய்த்தது அருமையான அனுபவம். திரு பூபதி தியாகராஜன் அவரது காரில் ஏதோ ஒரு குடியிருப்புப் பகுதிக்குள் இருந்த ஒரு தோசைக்கடைக்குக் கூட்டிப் போனது, சிங்கப்பூர் ஒலி எஃப்.எம்-ல் பணி புரிந்துகொண்டிருந்த பொன்.மகாலிங்கம் அவர்களின் வீட்டில் கிடைத்த ஒரு நல்ல விருந்தோம்பல். திருமதி. கானா கோபால் மற்றும் திரு. அருண் மகிழ்நன் அவர்களோடு இனிய ரெஸ்டாரண்ட் சந்திப்புகள். சன் டெக் சிட்டியில் பணிபுரியும் திரு பாலாஜி அவர்களுடன் தீவிரமான ஒரு காஃபி உரையாடல். மேலும் மீடியா கார்ப்பில் பணி புரிந்துகொண்டிருந்த திரு மணிமாறன், திரு அருண் நெல்லையன் என மறக்கமுடியாத இன்னும் சில நண்பர்களின் உபசரிப்புகள் என சிங்கப்பூர் ஒரு பயணம் மறக்கமுடியாத பயணமாக அமைந்துவிட்டது.
-o-

No comments:

Post a Comment