''அம்மா...
எனக்கு இன்னும் நினைவிருக்கிறது அந்த நாள்
எனக்கு வயது 10
அது ஒரு பெளர்ணமி தினம்
என் உலகம் உங்களுக்கு மட்டும் தானே தெரியும், அம்மா
நான் உங்கள் மடியில் படுத்திருக்கிறேன்...
திடீரென நள்ளிரவில் என் கால் முட்டியில் விழுந்த கண்ணீர் துளிகள்
என்னை திடுக்கிட்டு எழ வைத்தன
குழந்தையின் வலிகளை தாய் மட்டும் தானே உணர முடியும் அம்மா!''
...
...
'உங்கள் அன்பும், உங்கள் பாதுகாப்பும், உங்கள் நம்பிக்கையும் எனக்கு பலம் தந்தன
இந்த உலகத்தை அச்சமின்றி எதிர்கொள்ள வைத்த தாயே,
இறுதித் தீர்ப்பு நாளில் நாம் மீண்டும் சந்திப்போம், என் அம்மா''!
‘தாய்’ என்னும் தலைப்பில் தன் தாய் பற்றி அப்துல் கலாம் அவர்கள் எழுதிய கவிதை. அவரது ‘அக்னி சிறகுகள்’ புத்தகத்திலிருந்து...
ஆகஸ்ட் மாத நம் அகல் இதழ் சுதந்திர தின சிறப்பிதழாக உங்கள்
பார்வைக்கு. வழக்கமான பகுதிகளுடன் இவ்விதழில் பல புதிய பகுதிகள்.
- கமலி பன்னீர்செல்வம் அவர்களின் ‘நட்பு சூழ் உலகு’
- ரஃபீக் ராஜா அவர்களின் ‘குறும்படப் பரிந்துரை’
- ராஜ ராஜேந்திரன் அவர்களின் ‘என் நூலகத்திலிருந்து’
- ஸ்ரீ ராஜேந்திரன் அவர்களின் ‘பசுமை (புரட்சி) முயற்சி’
- மா. தொல்காப்பியன் அவர்களின் ‘அன்னப் பார்வை’
- துவரம் பருப்பு அவர்களின் ‘அண்ணாச்சி (மளிகை) கடை’
கவிதைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களின் கவிதைகள் இந்த இதழில் வெளியாகியுள்ளன. ஏழு கவிதைகள் இவ்விதழிலும், எட்டு கவிதைகள் அடுத்த இதழிலும் வெளிவரும்.
கவிதைப் போட்டியில் பரிசு பெற்றவர்கள் விவரம் :
- SK மகேஷ்வரன் – ஐநூறு ரூபாய் பணப் பரிசு மற்றும் புத்தகங்கள்
- சாயா சுந்தரம் - ஐநூறு ரூபாய் பணப் பரிசு மற்றும் புத்தகங்கள்
- சீதரன் - புத்தகங்கள்
- பத்மா கிரம் – புத்தகங்கள்
- ஸ்ரீ. ராஜேந்திரன் – புத்தகங்கள்
- சீதா – புத்தகங்கள்
- சாந்த குமார் – புத்தகங்கள்
மேலும் பரிசு பெற்றவர்களின் விவரம் மற்றும் அவர்களது கவிதைகள் அடுத்த இதழில் வெளியாகும். வெற்றி பெற்றவர்களுக்கும், பங்கேற்ற அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்து.
சிறுகதைப் போட்டிக்கு நண்பர்கள் தங்கள் கதைகளை அனுப்ப வேண்டிய கடைசி தேதி 28/08/2015
பாமரன் அவர்களின் படைப்பு அடுத்த இதழில் வெளியாகும்.
SK மகேஸ்வரனின் சஸ்பென்ஸ் தொடர் அடுத்த இதழில் ஆரம்பமாகிறது. ‘அவனுடைய தஞ்சை’ அடுத்த இதழில் வழக்கம் போல் வெளிவரும்.
நண்பர்கள் தங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி
நண்பர்கள் அனைவருக்கும் எங்கள் உள்ளம் கனிந்த இனிய சுதந்திர தின நல்வாழ்த்து.
வந்தே மாதரம்.
ஆன்மீகம் – இஷா மாலா
பார்த்தசாரதி பெருமாள் கோயில்
வேதத்தை வேதத்தின் சுவைப்பயனை விழுமிய முனிவர் விழுங்கும்
கோது இல் இன் கனியை நந்தனார் களிற்றை குவலயத்தார் தொழுதேத்தும்
ஆதியை அமுதை என்னை ஆளுடை அப்பனை ஒப்பவரில்லா
மாதர்கள் வாழும் மாடமாமயிலைத் திரு அல்லிக்கேணி கண்டேனே.
பொருள்: வேதமே வடிவாய் இருப்பவனை, வேதச்சுவையின் பயனாக இருப்பவனை, செம்மையாய் வாழும் ரிஷிகள் உண்ணும் குற்றமற்ற கனி போன்றவனை, நந்தகோபரின் வீரச்செல்வனை, உலகத்தார் பணிந்து துதிக்கும் ஆதிநாயகனை, அமிர்தமானவனை,
என்னை அடிமை கொண்டவனை, ஒப்பற்ற மங்கையர் வாழும் மாடங்கள் நிறைந்த மயிலாப்பூரின் பகுதியான திருவல்லிக்கேணியில் கண்டேன்.
திருமங்கையாழ்வார் தனது பெரிய திருமொழி இரண்டாம் பத்து, மூன்றாம் திருமொழியில் பத்து பாடல்களை திருவல்லிக்கேணி குறித்து அருளிச்செய்துள்ளார் .
மேற்சொன்னது அதில் இரண்டாம் பாட்டு.
எட்டாம் நூற்றாண்டின் இந்து வைஷ்ணவக்கோயில்களில் ஒன்று, ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோயில்.
வைணவர்களின் 108 திவ்விய தேசங்களில் (61-வது திவ்ய தேசம்) ஒன்றான இந்த கோவில், கோபுரங்களும் மண்டபங்களும், நுட்பமான சிற்பக் கலைகளும் கொண்டதாக, சென்னையில் உள்ள திருவல்லிக்கேணியில் உள்ளது. இத்தலத்து எம்பெருமான் மகாபாரதப் போரின் போது பார்த்தனுக்கு (அர்ஜுனன்) தேரோட்டிய (சாரதி) வடிவில் காட்சி அளிக்கிறார். ஏழு முனிவர்கள் (பிருகு, மரீசி, ஆர்த்தி, மார்க்கண்டேயா, சுமதி, சப்தரோமா மற்றும் ஜாபாலி) இங்கே தவம் புரிந்த தலம்; எனவே இது பிருந்தாரண்ய ஸ்தலம் என்றும், பஞ்ச வீர ஸ்தலம் என்றும் அறியப்படுகிறது.
பொதுவாக எல்லாக் கோயில்களிலும் ஒரு மூலவர் மட்டுமே காணப்படும். ஆனால் இத்திருக்கோயிலின் பெருஞ்சிறப்பு இங்கு மூலவர் என்னும் அந்தஸ்தோடு ஐந்து மூர்த்திகள் அருள்பாலிக்கின்றனர் இதனால் இத்திருக்கோயில் பஞ்சமூர்த்தி ஸ்தலம் என்றும் கூறப்படுகிறது.
இத்தலத்து மூலவரின் பெயர் வேங்கட கிருஷ்ணர் என்ற போதிலும் உற்சவராகிய பார்த்தசாரதியின் பெயரிலே பிரபலமாகி, அவ்வாறே குறிப்பிடப்படுகிறது. போர்க்களத்தில் இருந்ததன் விளைவாக எம்பிரானின் திருமுகத்தில் அம்பு பட்ட வடுக்களைக் காணலாம் என்பர். தான் அளித்த வாக்குப்படி, ஆயுதமேந்தாமல் சங்கொன்றை மட்டுமே கரங்கொண்டு காட்சிதரும் கிருஷ்ண பரமாத்மாவாக இங்கு எழுந்தருளியுள்ளார்.
தேரோட்டியாகப் பணி புரிந்ததால் இங்கு பெருமாளுக்கு மீசை இருப்பதைக் காணலாம். இது வேறெங்கும் இல்லாத அபூர்வக் காட்சியாகும். இதனால் மீசைப் பெருமாள் என்றொரு திருநாமமும் உண்டு. ஆயினும், வைகுண்ட ஏகாதசி திருவிழாக் காலத்தில் பகல் பத்து வைபவத்தின் ஆறாம் நாள் துவங்கி பத்தாவது நாள் வரையில் மீசையில்லாத பெருமாளாக அலங்காரம் செய்விக்கின்றனர்.
இவர்களில் வேங்கடகிருஷ்ணன் மற்றும் ஸ்ரீ ராமபிரான் நின்ற திருக்கோலத்திலும், ரங்கநாதர் புஜங்க சயனத்திலும், தெள்ளிய சிங்கர் மற்றும் தேவப்பெருமாள் (கருடன் மீது) வீற்றிருந்த கோலத்திலும் காட்சி தருகின்றனர். வேங்கடகிருஷ்ணனும், ரங்கநாதனும் கிழக்கே திருமுக மண்டலம் காட்ட, தெள்ளிய சிங்கர் திருமுகம் மேற்கு நோக்கியிருக்க, ஸ்ரீ ராம பிரான் தெற்கு நோக்கிய திருமுக மண்டலத்துடன் காட்சி தருகின்றனர்.
இக்கோயில் முதலில் 8ம் நூற்றாண்டில் பல்லவ மன்னனான ராஜா முதலாம் நரசிம்மவர்மன் மூலம் கட்டப்பட்டது. இக்கோவிலில் திருமாலின் அவதாரங்களில் மூன்று அவதாரங்கள் உள்ளன. (நரசிம்மர், ராமர், மற்றும் கிருஷ்ணர்.) பழமையான கட்டமைப்புகளில் ஒன்றாக விளங்கும் இக்கோவிலில் வேதவல்லித் தாயார், ரங்கநாதர், ராமர், கஜேந்திர வரதராஜர், நரசிம்மர், ஆண்டாள், ஆஞ்சநேயர், ஆழ்வார்கள், ராமானுஜர் ஆகியோருக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன. உடன் யோக நரசிம்மர் மற்றும் கிருஷ்ணருக்கும் தனிச் சன்னதிகள் காணப்படுகின்றன. தாயாரின் திவ்ய நாமம் வேதவல்லி என்பதாகும்.
திருமாலை மருமகனாக அடையத் தவமிருந்த பிருகுமுனிவரின் குடிசையின் அருகில் மஹாலட்சுமி ஒரு சிறு குழந்தையாகத் தோன்றியதாகவும், அவளுக்கு வேதவல்லி என்று பெயரிட்டு பிருகு முனிவர் தன் மகளாக வளர்த்தார் என்றும் கூறுவர். ஸ்ரீ ரங்கநாதப் பெருமானாக எம்பெருமான் வந்து வேதவல்லித் தாயாரை மணந்த மாசி மாத வளர்பிறை துவாதசி இன்றளவும் திருக்கல்யாண தினமாகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
இக்கோயில் வைகானச ஆகமத்தினையும், தென்கலையையும் பின்பற்றுகிறது. இக்கோவிலின் கோபுரங்களிலும், மண்டபத் தூண்களிலும் தென் இந்திய கட்டிடக் கலையை வலியுறுத்தும் ஏராளமான சிற்ப வேலைபாடுகள் காணப்படுகின்றன.
மூலவர் வேங்கட கிருஷ்ணர், அதிரூப சௌந்தர்யத்துடன், நின்ற கோலத்தில் ருக்மிணி பிராட்டி, பலராமன், சத்யகி, அனிருத்தன், பிரத்யும்னன் என குடும்ப சமேதகராக காட்சி தருகிறார். இந்த பெருமாள் எதிரிகளை வெற்றி கொள்ளும் ஆற்றலை வழங்குவதாக ஐதீகம்.
தவிர பிற சன்னதிகளில் ஸ்ரீ வேதவல்லி தாயார், ஸ்ரீரங்கமன்னார் (ரங்கநாதர், ஸ்ரீ ராமர் ஸ்ரீ கரிவரதர் (வரதராஜர் சுவாமி), துளசிங்கப் பெருமாள் நரசிம்மர், ஸ்ரீஆண்டாள், ஸ்ரீ ஆஞ்சநேயர், ஆழ்வார்கள், ராமானுஜர் , மணவாள மாமுனிகள் மற்றும் வேதாந்தாச்சாரியர் ஆகியோரும் காட்சி தருகின்றனர்.
இங்கே பார்த்தசாரதி மற்றும் நரசிம்மருக்கு தனித்தனியே கொடி மரங்கள் மற்றும் நுழைவாயில்கள் (முறையே கிழக்காகவும் – பார்த்தசாரதிக்கு, மேற்காகவும் - ஸ்ரீ ந்ருஸிம்ஹருக்கு வாசல்கள் கொண்டு தனித்தனி கோயில்கள் போல் திகழ்கின்றன. இங்கே கோபுரங்களும் மண்டபங்களும் தென்னிந்தியக் கோவில் கட்டிட கலைக்கே உரிய நுட்பமான சிற்பக் கலையால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
சுவாமி விவேகானந்தர் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாளைப் பற்றிக் கூறியவை இத்திருக்கோயில் முகப்பில் கல்வெட்டில் வடிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.
கோவிலுக்கு எதிரே கிழக்குப்புறமாக அழகிய பெரிய தெப்பக்குளம் உண்டு. திரு+அல்லி+கேணி= திருவல்லிக்கேணி. அல்லி மலர்கள் நிரம்பப் பெற்றதால் இப்பெயர் பெற்றதாகக் கூறுவர். அதனையடுத்து ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவிலும் தனியாக உண்டு.
நான்கு மாடவீதிகளும் அக்ரஹாரங்களும் பொலிவான நல்ல வடிவமைப்புடன் கூடியவை. பெரும்பாலான நாட்களன்று இங்கு சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, தயிர் சாதம் மற்றும் வடை வழங்கப்படுகிறது. வைகுந்த ஏகாதசி சமயத்தில் (பகல் பத்து / இராப் பத்து) ஒருநாள் பகவானுக்கு திருப்பதி வேங்கடாசலபதியை போல அலங்காரம் செய்யப்படுகிறது, அன்று மட்டும் திருப்பதி லட்டு இங்கு வழங்கப்படுகிறது!
தரிசனம், சேவைகள் மற்றும் உற்சவங்கள்:
இக்கோவிலில் தென்கலை வைணவ பாரம்பரியமும் வைகம ஆகம முறையும் கடைப்பிடிக்கப்படுகிறது. இங்கு சித்திரைத் திங்களின் போது ஸ்ரீ பார்த்தசாரதி ஸ்வாமிக்கும், ஆனி மாதத்தில் ஸ்ரீ அழகியசிங்கருக்கும் பெரிய அளவில் பிரம்மோற்சவங்கள் நடைபெறுகின்றன. அதனுடன் ஸ்ரீ ராமானுஜர் (ஏப்ரல்/மே), ஸ்ரீ மணவாளமாமுனிகள் மற்றும் மற்ற ஆழ்வார்களுக்கும் ஆச்சாரியர்களுக்கும் பிரம்மாண்ட அளவில் உற்சவங்கள் நடைபெறுகின்றன.
வைகுண்ட ஏகாதசி மற்றும் சித்திரை திங்களின் போது இங்கு ஏராளமான பக்தர்கள் குவிகின்றனர். இச்சமயத்தில் இங்கு உள்ள மண்டபங்களில் நிறைய கதா காலக்ஷேபங்கள் (புராண கதை சொல்லுதல்) நடைபெறுகின்றன. வைணவ முனிவர்களான 12 ஆழ்வார்களில் மூவர் (பேயாழ்வார், திருமழிசை ஆழ்வார் மற்றும் திருமங்கையாழ்வார் ) இக்கோவில் தெய்வங்களின் மேல் பாடல்களை இயற்றி இருக்கிறார்கள். இதர பல ஆச்சாரியார்களும் பாடல்களை இயற்றி இருக்கிறார்கள். அவற்றில் குறிப்பிட தகுந்தவர்கள் ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள், ஸ்ரீ முத்துஸ்வாமி தீட்சிதர், பாரதியார் ஆவர்.
சென்னையின் நடுநாயகமாக விளங்கும் இக்கோவிலுக்கு கிழக்கே மெரீனா கடற்கரையை கொண்ட வங்காள விரிகுடாவும், மேற்கே மயிலையும், வடக்கு தெற்காக முறையே சேப்பாக்கம், ராயப்பேட்டையும் உள்ளது. எல்லா இடங்களிலிருந்தும் சுலபமான போக்குவரத்துக்கான வழித்தடங்கள் அமையப் பெற்றது.
காலை ஆறுமணிக்கு சுப்ரபாத பூஜை முதல் இரவு ஒன்பது மணிவரை திறந்திருக்கும். அர்த்தஜாம பூஜைக்கு பிறகே நடை சாத்துகிறார்கள். மூலவருக்கு சில சிறப்பு பூஜைகளின் இடைவேளைகளில் கொஞ்சம் நிறுத்தி நடை சாத்துவது உண்டு. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கிய புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்த நிலையில் சம்ப்ரோஷணம் எனப்படுகின்ற குடமுழுக்கு 12.6.2015 வெள்ளிக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது.
கோவிலின் சிறப்புகள்:
- இத்தலத்து தெள்ளிய சிங்கர் என்னும் திருநாமங்கொண்ட நரசிம்மர் கல்வி கேள்வி மற்றும் அனைத்து வித்தைகளிலும் தேர்ச்சியும், பண்டிதமும் அருளி, கலங்கிய மனதினை தெளிவாக்கவும் பயம் நீக்கி எதிரிகளை வெற்றி கொள்ளவும் அருள்புரிபவர்.
- பார்த்தசாரதிப் பெருமாளை இறைஞ்சுவோர் திருமணத் தடைகள் நீங்கப் பெறுவர்.
- சந்தான பாக்கியமும், ஐஸ்வர்யமும் அருள்பவர் இவர். தேரோட்டியான இவர் நம் வாழ்க்கைத் தேரை செவ்வனே ஓட்டி அருள்பவரும் கூட.
- குடும்பத்துடன் கிருஷ்ணர் காட்சியளிக்கும் இத்திருக்கோயில் உற்றார், உறவினருடனான மனச் சங்கடங்கள், பகைமை ஆகியவற்றை நீக்கி குடும்பத்தில் ஒற்றுமையை வளர்க்கும் என்பது நம்பிக்கை.
- சத்ருக்களை வெல்லவும், எடுத்த காரியத்தைத் தடையின்றி முடிக்கவும் இக்கோயில் பெருமாளை வணங்குவது நன்மை பயக்கும்.
பரித்ராணாய ஸாதூனாம்
விநாஸாயச துஷ்க்ருதாம்
தர்ம சம்ஸ்தார்ப நார்தாயம்
சம்பவாமி யுகே யுகே…
வன்முறை அதிகமாகும் பொழுது தர்மங்கள் அழிய நேரும் போதெல்லாம் யுகங்கள் தோறும் நான் அவதரிக்கிறேன்...
ஓம் நமோ நாராயண...
சுதந்திரம் – ஷாரா சித்தாரா
சுதந்திரம். அரும்பாடுபட்டு அடிபட்டு மிதிபட்டு அவமானப்பட்டு தேசத் தலைவர்களால் பெறப்பட்ட விடுதலை யாவருக்கும் உரியதாம். யாவருக்கும் என்பதில் தான் இங்கே சிக்கல். அறுபத்தி எட்டு வருடங்களில் ஒரு சமுதாயம், ஒரு நாடு, என்ன என்ன பெற்று இருக்கிறது? எதைப் பெற வேண்டும், எதை இழந்து இருக்கிறது என்பது அந்த நாட்டின் இத்தனை ஆண்டு கால ஆட்சி, மக்களின் பொருளாதார நிலை போன்ற காரணிகள் பற்றிய நீண்ட ஒரு விவாதம் அவசியம்.
பொருளாதார ரீதியில் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்து விட்டது. கல்வி, மருத்துவம், தொலைத்தொடர்பு வளர்ச்சி, நாட்டின் கட்டமைப்பில் அசாத்திய வளர்ச்சியினை அடைந்துள்ளது இந்தியா.
ஒரு மதசார்பற்ற குடியரசு, 68 ஆண்டுகளில் இத்தகு வெற்றி பெற்றது மற்ற நாடுகளின் முன்பு இந்தியாவின் பெருமையை உயர்த்தியுள்ளது.
இந்தியாவின் வளர்ச்சியின் வேகம் மற்ற நாடுகள் மத்தியில் இந்தியாவிற்கு பெரும் மரியாதையும், கொஞ்சம் அச்சத்தையும் தந்து இருக்கிறது என்பது தான் உண்மை.
சரித்திர அடையாளங்கள் மூலமும், நாகரீக வளர்ச்சியின் பிறப்பிடமாகவும் இந்தியா இருக்கிறது. பல்வேறு படையெடுப்புகள் வந்த பின்பும் தனது நிறத்தை இழக்காமல் இருக்கிறது இந்தியா.
கட்டிட மற்றும் சிற்பக் கலைகளில் ஒரு முன்னோடியாக திகழ்ந்த இந்தியா, அணு ஆராய்ச்சியில் சிறந்து விளங்கிய இந்தியா, பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் இந்தியா, அறிவியல் வளர்ச்சியில் உலக நாடுகளை பிரமிக்க வைக்கும் வண்ணம் உள்ளது.
உண்மையான சுதந்திரமாக எதை சொல்வோம் நாம்? பொருளாதார வளர்ச்சியையா? அல்லது பொருளாதார முன்னேற்றத்தையா?
பொருளாதார வளர்ச்சி என்பது தனி நபர் வருமானம் மற்றும் ஒட்டு மொத்த தேச வருமானத்தை சார்ந்தது.
பொருளாதார முன்னேற்றம், மக்கள் வாழ்வியல் சார்ந்தது. கல்வி, சுகாதரம், வாழ்க்கை தரம் ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்து உள்ளது. மக்கள் பாதுகாப்பு இதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.
பெண்களின் பார்வையில் சுதந்திர தினம் :
- கல்வி - அனைத்து துறைகளிலும் இப்போது மாணவிகள் நிறைய படிக்க வருகிறார்கள் ஆனால் விரும்பிய படிப்பை, விரும்பிய இடத்தில் படிக்க பெரும் தடையாக குடும்பமும், சமூகமும் உள்ளது.
- வேலை- இதுவும் அதே மாதிரி தான். இன்னமும் பெண்பிள்ளை சம்பாரித்து நாம் வாழக் கூடாது என்ற எண்ணம் விரவி கிடக்கிறது.
- திருமணம் - விருப்பபட்ட வாழ்வை அமைத்து கொண்டாள் என்ற காரணத்துக்காக ‘கௌரவ’? கொலை செய்யும் சாதிய வெறியர்களோதான் நாம் வாழ்ந்து வருகிறோம்.
- பாதுகாப்பு - ஒரு பெண் பகலில் கூட பாதுகாப்பாக உலா வர முடியவில்லை என்று சொல்ல முடியாது. எத்தனையோ பெண்கள் பாதுகாப்பாகத்தான் இருக்கிறார்கள். எனினும் நிர்பயாவை மறக்க முடியவில்லை. பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது.
சுதந்திரமாக கருதப்படுவது இங்கு பேச்சு மற்றும் கருத்து சுதந்திரமும் தான். தஸ்லிமா நஸ்ரினை புறக்கணித்த நாடு சன்னி லியொனை இரு கரம் கூப்பி மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டது தான் முரணாகப்படுகிறது.
கற்பு கலாசார லேபிள் (அதுவும் பெண்களுக்கு மட்டும்) ஒட்டுபவர்களால் சுதந்திரமாய் சிந்திக்க கூட முடியவில்லை.
ஒரு சமுகத்தில் பெண்கள் வாழும் முறை, வசதிகள், பங்களிப்புகள், இவையே ஒரு நாட்டின் மதிப்பைப் பலமடங்கு உயர்த்துகிறது. 33 சதவிகித இட ஒதுக்கீட்டை எதிர்த்து பேசிய யாராவது மனப்பூர்வமாக நிர்பயாவிற்கு குரல் கொடுத்தார்களா?
மாத விடாய் ஒரு அசுத்தம். பாவம் செய்ததால் வரும் அவஸ்தை என்று தானே பெண்பிள்ளைகளிடம் சொல்லி வளர்க்கிறோம். இது இயற்கை என்று புரியாத எத்தனை சிறுமிகள் மனரீதியாக பாதிக்கப்படுகிறார்கள்?
சமீபத்தில் ஒரு பிரச்சனை வந்தது. பாராளுமன்றத்தில், திருமணத்திற்கு பின்னர் ஒரு கனவன் மனைவியை வன்புணர்வு செய்வது குற்றமாக கருதக் கூடாது என்று. எத்தனை அபத்தமான விஷயம் இது? திருமணம் ஆகிவிட்ட ஒரே காரணத்துக்காக அவளது விருப்பங்களும், மறுப்புகளும் தவிர்க்கப்படுகின்றனவா ? இதில் என்ன சுதந்திரம் ஒரு பெண்ணிற்கு தரப்படுகிறது?
நீதி யாவருக்கும் பொருந்தும். அது போலத் தான் சுதந்திரமும், ஆண்/பெண் என அனைவருக்கும் பொருந்தும். அது வரை ஆண்களுக்கு சுதந்திர தின நல்வாழ்த்து.
டூன் கார்னர் – லதா ரகுநாதன்
நம் அகல் மின்னிதழிற்கு நண்பர்கள் தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி :
அமுதாவின் சிந்தனைகள் – அமுதா சுரேஷ்
காதல் போயின் வாழ்தல்
நண்பன் ஒருவன், ஒரு பெண் கடையில் வேலை செய்து கொண்டிருக்கும் நேரத்தில், அவளின் காதலனால் கொல்லப்பட்ட வீடியோ பதிவை அனுப்பி வைக்க, தெரியாமல் அதைப் பார்த்துத் தொலைத்து, மனம் கசந்துபோனது.
காதல் என்றில்லாமல், பல திருமண உறவுகளும் கூட இந்த மனநிலையைத்தான் கொண்டிருக்கிறது, தன்னுடன் வாழ வராத கணவனைக் குடும்பத்துடன் எரித்துக் கொன்ற பெண், தன்னுடன் வாழ வராத மனைவியைக் குழந்தையுடன் கொலை செய்த ஆண், காதலிக்கும் மகளைக் கொலை செய்த தந்தை, காதலுக்காகப் பெற்றோரை கொலை செய்த பிள்ளைகள் என்று செய்திகள் வந்த வண்ணம்தான் உள்ளன
இந்தக் காதல் என்றால் என்ன? ஒருவரை பிடித்திருத்தல் என்பது என்ன? அவர் நலமுடன் வாழ நினைப்பது, அதுதானே காதல், அன்பு எல்லாம்?
இந்தப் பிள்ளைகள் எல்லாம் ஏன் தோல்வியில் துவண்டு போகிறார்கள்? ஒருவர் ஏமாற்றினால், பிடிக்கவில்லை என்று அறிந்தால் ஏன் அதை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவிக்கிறார்கள், ஏன் ஓர் உயிரை சிதைக்கும் அளவுக்குத் துணிகிறார்கள்? எனக்குக் கிடைக்காதது வேறு யாருக்கும் கிடைக்கக் கூடாது என்ற மனநிலை.
இங்கே காதலும் உறவுகளும் மனதுடன் சம்பந்தப்பட்டது, மனதில் ஏற்பட்ட பிரிவை, சரி செய்ய முடியா விட்டால், அதை ஏற்றுக் கொண்டு சரி செய்வதோ பிரிவதோ குடும்பச் சூழ்நிலையைப் பொறுத்து அமைய வேண்டும்,
இந்திய திருமணப் பந்தங்கள், குழந்தைகள் என்ற ஆணி வேரினால் கட்டப்பட்டிருக்கிறது, கருத்து வேறுபாடு ஏற்படினும், மனமொத்து வாழும் தம்பதிகளை விட, குழந்தைகளின் வருங்காலம் கருதிச் சேர்ந்து வாழ்பவர்களே அதிகம், குழந்தைகள் ஒரு காரணம் என்றால், சமூகம், பணம், செல்வாக்கு,பெற்றோர், உறவினர்கள், மிரட்டல், மரியாதை, சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுத்தல் என்று பல காரணங்களாலும் உறவு நீடிக்கிறது. எந்த குழந்தைகளுக்காக இந்த உறவு காக்கப்படுகிறதோ, உண்மையில் பல வேளைகளில், இப்படிச் சகித்துக்கொண்டு வேறுபாட்டுடன் வாழும் தம்பதிகளின் குழந்தைகளின் மனநலம் பெரிதும் பாதிக்கப்படுகிறது.
தொலைக்காட்சி, திரைப்படம், இணையம் என்று குழந்தைகள் எதையும் எளிதில் கற்றுக்கொள்ள வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன, ஆனால் அவர்கள் எதைக் கற்றுக்கொள்கிறார்கள் என்பதைத்தான் நாம் தீர்மானிக்க வேண்டி இருக்கிறது.
காதல் ஒரு கெட்டவார்த்தை என்ற ரீதியில் குழந்தைகளுக்குப் போதித்து விட்டு, குடும்பத்துடன் காதல் சார்ந்த திரைப்படங்களுக்கே குழந்தைகளை அழைத்துச் சென்று காண்பிப்பது, பெரியவர்களுக்கு மரியாதையைத் தர வேண்டும் என்று போதித்து விட்டு, வீட்டில் இருக்கும் பெரியவர்களைப் பெருசு, கிழவி என்ற ரீதியில் பேசுவது, உறவுகளை மதிக்க வேண்டும் என்று போதித்து விட்டு, வீட்டுத் தொலைக்காட்சியில் எல்லா உறவுகளும் சதி செய்யும் என்ற ரீதியில் மனம் சிதைக்கும் தொலைக்காட்சித் தொடர்களைக் குழந்தைகளுடன் பார்ப்பது... போதனைகளும் நடத்தையும் வேறு வேறு என்றால், குழந்தைகளின் மனநலம் குற்றவாளியின் மனநலம் போல் ஆகும். விதையைப் பொறுத்தே வளர்ச்சி!
கொலைகளுக்கான, தற்கொலைக்கான காரணங்கள் பலவாக இருக்கலாம், ஆனால் இவற்றிக்கான அடிப்படைக் காரணம், எதையும் தாங்கிக் கொள்ள முடியாத மனது.
காதல் காதல் காதல், காதல் போயின் சாதல் சாதல் சாதல் என்று புனையப்பட்ட நம் சமூகம். ஒருவர் ஏமாற்றப்பட்டால், ஏமாற்றியவரைக் கொல்லுதல் என்று பொருள் கொண்டதோ?
விதைக்கும் நிலம் மலடானால், அதில் மாற்று யோசிக்கும் சமூகம், காதல் வளர்த்த மனம் ஏமாற்றபட்டால், மாற்றி மனதைத் தேற்ற ஏன் கற்றுக் கொடுக்கத் தயங்குகிறது? திருமணம் என்றாலும் கூட எதற்காகவோ சகித்துக்கொள்ளும் நிலை இருந்தாலும், எந்தக் கட்டாயமும் இல்லாத, உள்ளார்ந்த அன்பினால் நம்பிக்கையினால் அமைந்த காதல் தோற்றுப் போகுமென்றால், ஏதோ ஒரு புறம் அந்த அன்புப் பொய்த்துப் போனதென்றுதானே அர்த்தம்? பொய்த்துப் போன ஒன்றை வலுகாட்டயமாகத் திணிப்பதால் அது மீண்டும் காதல் ஆகுமா? மீண்டும் உறவு மலருமா?
இருவர் காதலித்தால் தான் அது காதல், அமரக்காவியம் என்றாலும் தோற்றுப்போயின் அமைதியாய் இருக்க வேண்டும். எத்தனையோ இருக்கிறது வாழ்க்கையில். பெற்றவர்கள், அவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமை இருக்கிறது. குறைந்தபட்ச அன்பும் இல்லாத வறியவர்கள், பெற்றவர்கள் இல்லாத பிள்ளைகள் இருக்கிறார்கள். நம்மைச் சுற்றி எத்தனையோ உயிர்கள் இருக்கிறது. ஏமாற்றத்தைச் சகித்துக்கொண்டு எத்தனையோ மனிதர்கள் வாழ்கிறார்கள். வீடில்லாமல் உணவில்லாமல் சரியான ஆடையில்லாமல் வீதியில் பிச்சைக் கேட்கும் மனிதர்களும், குப்பையில் இருப்பதை எடுத்து கஷ்ட ஜீவனம் செய்யும் உயிர்களும் கூட வாழத்தான் நினைக்கிறார்கள், யாரையும் கொன்று, தானும் சாக விரும்பவில்லை.
அது வேறு இது வேறு என்று நினைக்கலாம் உண்மைதான், உடலால் வாழ்தல் வேறு உள்ளத்தால் வாழ்தல் வேறு, உண்மையான காதல் என்றும் பிரியாது. காதலுக்குக் காரணமே இருக்கக் கூடாது, இருந்தாலும் ஒத்தக் கருத்தில்லாமல் காதலித்தாலும் ஒருவருக்கு ஒருவர் அப்படியே ஏற்றுக் கொள்ளும் மனப்பாங்கு இருந்துவிட்டால் அதில் பிரிவு வருவதில்லை!
அட இந்தக் காதலைச் சுற்றி என்னதான் நிகழ்கிறது?
அதீதமாய்க் காதலிக்கும் யாரோ ஒருவர் தங்களை மாற்றிக்கொள்வதில் தான் பெரும்பாலும் காதல் வாழ்கிறது, இப்படி எதுவுமே இல்லாமல், காரணமாய் வரும் காதல் காரணம் தீர்ந்து போனதும் நீர்த்துப் போகும் அல்லது முறிந்துப் போகும்! காரணம் பணம் என்றால், பணம் இல்லாவிட்டால் காதல் மரித்துப்போகும், காரணம் காமம் என்றால், தீர்ந்ததும் இதுவும் முறிந்துப் போகும், திரைப்படம் போலவே, ஒரு பாடலில் வாழ்க்கை மாறிவிடுவது போல், திருடன் திருந்தி நல்லவன் ஆவது போல், திரையில் மயங்கி, ஒருவரை திருத்திவிடலாம் என்று காதலித்தாலும் அது முறிந்து விடும். இப்படியே பல உண்டு. யாரையும் காதலிக்க எதுவும் காரணமாய் இருக்கக் கூடாது ஆனால் கண்மூடித்தனமான கற்பனையோ நம்பிக்கையோ காதல் ஆகாது!
சரி இந்தக் காதல் உடைந்தால் என்ன செய்ய வேண்டும்?
எப்படி இருந்தாலும் தீர்க்க முடியாத பிரிவு என்று வந்துவிட்டால், அது உடைந்த கண்ணாடித்தான். கண்ணாடியைச் சிதைப்பதோ இல்லை ஓட்ட வைப்பதோ இல்லை வதைப்பதோ வேண்டாத வேலை!
இழந்ததற்கு நீதி வேண்டும் என்று நினைத்தால் அதற்கான வழிமுறைகளைத் தேட வேண்டும். உடல் தேவைக்காக ஒருவன் ஒருத்தியை ஏமாற்றினால், பணத்திற்காக ஒருத்தி ஒருவனை ஏமாற்றினால் சட்டத்தை நாட வேண்டும் (சமூகமும் பத்திரிகைகளும் பெண்ணைக் கீழ்த்தரமாக விமர்சிக்கும் போக்கை மாற்றிக் கொள்ளும் நிலையும் வர வேண்டும்) அதை விடுத்து ஆசிட் வீச்சும் கொலைகளும் இழந்தக் காதலை நரகக்தில் கூடச் சேர்க்காது!
ஓர் ஆண் பெண்ணைக் காதலிக்கிறான், அப்பெண்ணை மட்டுமே திருமணம் செய்து கொள்கிறான். ஒரு பெண் ஆணைக் காதலிக்கிறாள், அவன் குடும்பத்தையே திருமணம் செய்து கொள்கிறாள். அவனுக்காகத் தன்னை மாற்றிக் கொள்கிறாள். முன்னதில் ஆண் கொடுத்து வைத்தவன், பின்னதில் பெண் நிர்ப்பந்திக்கபட்டவள். பெண்ணுக்காக ஆண் மாறினால் அந்த ஆண் அவளை அதீதமாய்க் காதலிக்கிறான் என்று அறிக. ஆணும் பெண்ணும் பரஸ்பரம் புரிந்துக்கொண்டு அவரவர் சுயத்தை இழக்காமல், காலத்தின் சூழலின் பொருட்டு ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ்கிறார்கள் என்றால் அங்கே காதல் கடைசி வரை வாழ்கிறது தெரிந்துக்கொள், என்று காதலைப் பற்றி என் தந்தை எடுத்துக் கூறியது நினைவுக்கு வருகிறது. எப்படி இருந்தாலும் வாழ்வதுதானே காதல்?
சரியான புரிதலில் சரியான மனப்பக்குவத்தில் இருக்கும் பருவத்தில் வரும் காதலே நீடித்து நிற்கும், அடுத்தவரின் தயவில் வாழ்க்கையை நடத்தும் நிலையில், கல்வியில் கருத்தைப் பதிக்க வேண்டிய வயதில் வரும் காதல் தேவையில்லாதது. அப்படியே வருவதாயினும், சுயமாய் நிற்கும் வரை, காதலாய் அது நீடித்திருக்குமானால் பெற்றவர்கள் சரியான வழியைக்காட்டி ஆதரிக்கலாம்.
காதல் காதல் காதல் காதல் போயின் சாதல் சாதல். பிறகு கொல்லுதல், ஆசிட் வீசுதல், வன்கொடுமை செய்தல், இகழ்தல் என்று இருக்கும் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது, காதல் என்றால் அன்பு செய்தல் மட்டுமே. இந்த உண்மையான காதலைத் தெரிந்து கொள்ள நீங்கள் திரைப்படத்தை, புத்தகத்தை, அல்லது நாடகத்தை என்று எதையும் காண வேண்டாம். முதியோர் இல்லத்தைச் சென்று பாருங்கள். பெற்று வளர்த்து ஆளாக்கிய பிள்ளைகள், வேண்டாத ஒரு பொருளைப்போல் பெற்றவர்களை ஒத்துக்கி வைத்தாலும், “எங்கே இருந்தாலும் எம்புள்ளைங்க நல்லா இருக்கணும்” என்று சொல்லும் அந்தக் காதலில் காதலைக் கற்றுக்கொள்ளாமல் நீங்கள் வேறு எதில் காதலைக் கற்றுக்கொள்வீர்கள்?
பெற்று வளர்த்து ஆளாக்கியப் பிறகு, இறுதிக் காலத்தில் நீங்கள் ஒதுக்கி வைக்கும்போது அவர்களுக்கு வராத அந்தக் கோபம், யாரோ ஒருவர் பெற்று ஆளாக்கிய பெண்ணிடம், சிறிதுகாலமே பழகி, பிறகு அவள் ஏமாற்றிவிட்டாள் என்று அவளைக் கொல்வதற்கும், உங்களை இத்தனை நாள் ஆளாக்கிய பெற்றவர்களின் உணர்வுகளைக் கொஞ்சம் கூடப் புரிந்துக்கொள்ளாமல், சிறிதுக் காலமே பழகி உங்களை ஏமாற்றிய ஒருவருக்காக, உங்களை நீங்களே மாய்த்துக் கொள்வதற்கும் பெயர், காதலா?
காதல் என்பது தாய்மை உணர்வு கொண்டு இருக்க வேண்டும். தந்தையின் அரவணைப்பு இருக்க வேண்டும். உறவுகளின், உணர்வுகளின் சங்கமமாய் இருக்க வேண்டும்.
காதல் என்பது வாழ்தல்.
வாழ்தலுக்குக் காதல் அவசியம்.
காதல் போயினும் வாழ்தல் அவசியம்!!!
கவர் ஸ்டோரி – சுபஸ்ரீ மோகன்
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பது எப்படி
சில ஆண்டு சீன வாழ்கையில் நான் வியந்த விஷயம் எப்படி சீனா எல்லா துறைகளிலும் சிறந்து விளங்குகிறது. இந்த கேள்வியை எப்பொழுதும் எனக்கு நானே கேட்டு கொள்வேன். இந்தியாவும் இந்த அசுர வளர்ச்சி அடைய முடியுமா? சீனா இந்த நிலையை அடைய குறுக்கு வழிகளோ அல்லது மந்திர கோலினாலோ இந்த பிரம்மாண்டத்தை எட்டவில்லை.
என்னுடைய அனுபவங்கள், நான் வியந்த விஷயங்கள் முக்கியமாக ஒரு மந்திர சாவி இந்தியாவிற்கு தேவையாய் இருக்கிறது. அது கிட்டிய உடன் இந்தியாவும் அசுர வளர்ச்சியை எட்டி விடும்.
முதலில் அடிப்படை வசதிகள் :
பாமர மக்களின் பொருளாதரா தேவைகளை வேறு எந்த நாட்டையும் விட சீனாதான் சிறப்பாக தீர்த்து வைத்திருக்கிறது. சீனாவில் நான் போயிருந்த சில இரண்டாம், மூன்றாம் தர வரிசை நகரங்களில் கூட அங்கிருக்கும் விமான நிலையம் மற்றும் தரை வழி சாலைகள் மாபெரும் உயர்ந்த கட்டிடங்கள் எல்லாவற்றையும் பார்த்து வியந்தேன். இரண்டாம் தர வரிசை நகரங்கள் இந்த அளவு நவீனமாக இருக்குமென்று கனவினிலும் நினைக்கவில்லை.
ஒவ்வொன்றையும் எந்த அளவு திட்டமிட்டு செயல்படுத்தி இருக்கிறார்கள் என்பது இங்கு வந்த பின் தெரிந்தது. சீனாவில் ஒரு மீனவ குப்பம் 30 ஆண்டுகளில் உலக தரத்தில் மாநகரம் (சென்சேன்) ஆனது எல்லோரும் அறிந்த விஷயம்.
இந்தியாவிலும் நாம் அதிகமாக கவனம் செலுத்த வேண்டிய விஷயம் நகரின் உள்கட்ட அமைப்பு. சாலைகள், நெடுஞ்சாலைகள், பள்ளிக்கூடங்கள், மருத்துவ மனைகள், சுற்றுலா மற்றும் வியாபார தலங்கள் எல்லாம் மேம்பாடு அடைய எல்லாவற்றிலும் புதிய எளிய முறைகளையும், ஒழுங்கு முறை, சுத்தம், பராமரிப்பு, நேரம் தவறாமை போன்றவற்றையும் கடைபிடிக்க வேண்டும். இதனால் வேலை வாய்ப்புகள் பெருகும். மக்களிடம் அதிக பணம் இருந்தால் நாட்டின் சேமிப்பும் உயரும். அன்னிய நாட்டினரிடம் நம் நாட்டின் மதிப்பு வளரும்.
உற்பத்தியில் கவனம் :
அமெரிக்கர்கள் எப்போதும் சொல்வது உண்டு. கடவுள் உலகை படைத்தாலும் மத்த பொருள்கள் எல்லாவற்றையும் படைத்தது சீனா. இது இன்று உலகளவில் சீன பொருள்கள் பொம்மை முதல் ராக்கெட் வரை ஒவ்வொரு இடத்திலும் தன் ஆக்கிரமிப்பை செலுத்தி உள்ளது . இது சீனாவின் மிக நவீனமான இயந்திரங்களும் மற்றும் உற்பத்தி திறனும் தான் இதற்கு காரணம். சீனாவின் ஜி.டி.பி மொத்த உள்நாட்டு உற்பத்தி எண் உற்பத்தி துறையில் தான் அதிக அளவு உள்ளது. இந்தியா உற்பத்தி துறையில் பின் தங்கியுள்ளதால் இதில் அதிகமாக கவனம் செலுத்த வேண்டும். அதிக அளவு வேலை வாய்ப்பை தரக்கூடிய பொருள்களை உற்பத்தி செய்து உலக சந்தையில் இடம் பிடிக்கும் தொழில் நிறுவனங்கள் உருவாக வேண்டும். ‘மேக்கிங் இந்தியா’ என்று வாய் சொல்லில் மட்டுமல்லாமல் செயல் படுத்தவும் வேண்டும்.
வியாபாரம் செய்ய எளிதான முறை :
எனது இந்திய நண்பர் ஒருவர் சீனாவில் ஆடைகள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி செய்யும் சொந்த தொழில் ஒன்றை வழி நடத்தி வந்தார். இதற்குமுன் அவர் இதே தொழிலை இந்தியாவில் செய்திருந்தார். அவரிடம் சீனாவில் தொழில் செய்ய எளிதாக உள்ளதா என கேட்டேன். வாடிக்கையாளர்கள் கேட்பதுபோல் துல்லியமான பொருள்களை அனுப்பும் தேதியை அவரால் கொடுக்க சீனாவில் எளிதாக முடியும் என கூறினார். இதற்கு காரணம் சீன அரசின் ஒத்துழைப்பு மற்றும் செயல் திட்டங்கள் தான் காரணம் என கூறினார். இந்த தகவலை (அனுப்பும் தேதி) இந்தியாவில் முன்கூட்டியே சொல்வது மிக கடினம். இந்தியாவில் அதிகாரத்துவம் மற்றும் விதி முறைகள் அதிகமாக இருப்பதால் தொழில் செய்வதற்கு சாதகமான சூழ்நிலை இருப்பதில்லை என வருந்தினார். எனவே மேல்நாட்டு தொழிலதிபர்கள் இங்கே முதலீடு செய்வதில் தயங்குகிறார்கள். எனவே வெளிநாட்டு முதலீடு அதிகரிக்க இந்தியா தொழில் செய்யும் விதிமுறைகளை எளிதாக்க வேண்டும் மற்றும் அரசாங்க அதிகாரிகள் ஒத்துழைப்பும் அவர்களுக்கு கிட்ட வேண்டும்.
திறன் வளர்ச்சி : சீனாவின் கல்வி அறிவு கிட்டதட்ட 100 சதவிகிதத்தில் உள்ளது. அங்கு தொழிலாளர்களின் உற்பத்தி திறன் மிக அதிகமாக உள்ளது. கல்வி மற்றும் உழைக்கும் திறன் அதிகமாக இருப்பதால் இந்த மக்களால் பொருளாதார வளர்ச்சிக்கு அதிக அளவு பங்களிக்க முடிகிறது. இந்தியாவைப்போல் வளர்ந்து வரும் நாடுகளுக்கு கல்வி மற்றும் திறன் மிக அவசியம். சீனாவின் உழைக்கும் வர்க்கத்தைபோல் இந்தியாவும் கடினமான உழைப்புக்கு தயாராக இருக்க வேண்டும். தகவல் தொழில்நுட்ப துறையில் இந்தியாவின் சாதனைகள் உலக பிரசித்தமானது. இதற்கு காரணம் இந்த துறையில் இந்தியாவின் கல்வி மற்றும் உலகத் தர திறன் தான். இதே திறனை மற்ற துறைகளிலும் இந்தியா அடைய வேண்டும்.
சேமிப்பு : ஒரு நாட்டின் பொருளாதார வளர்சிக்கு சேமிப்பு மிக அவசியம். தனிமனிதனின் சேமிப்பு இருந்தால் அவன் அரசாங்கத்தின் மேல் சார்ந்து இருக்க வேண்டிய அவசியமில்லை. இதனால் அரசாங்கமும் மற்ற திட்டங்களுக்கு அதிக பணம் செலவு செய்ய முடிகிறது. சேமிப்பை ஊக்குவிக்க இந்திய அரசாங்கம் பல சலுகைகளை தந்துள்ளது. நமது நாடு ஒரு வல்லரசாக வேண்டும் என்ற கனவு இருக்கிறது. இந்த கனவு நினைவாக மேல் குறித்த நடவடிக்கைகளை இந்திய அரசு செயல் படுத்த வேண்டும். இதற்கு மக்களின் பங்கும் இன்றியமையாதது என்பதை நாம் உணர்ந்து செயல்பட்டால் இது சாத்தியமே. சேமிப்பு என்பது நாம் எல்லோரும் செய்ய கூடியது. சேமிப்பினால் நமக்கு பாதுகாப்பு மற்றும் நாட்டிற்கும் நன்மை உண்டு. கிராமங்களில் மகளிர் சுய உதவி குழுவினால் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது ஆனாலும் இன்னும் தீவிரமாக, அதிகமாக பெண்களை சிறு தொழில்களில் ஊக்குவித்து கைவினைப் பொருள்களின் ஏற்றுமதியை பெருக்க செய்ய வேண்டும்.
கிராமப்புற கலைகளை ஊக்குவிக்க வேண்டும். கிரமப்புறத்தில் நடக்கும் சில நிகழ்ச்சி, கூத்து கலைகளை முறைப்படுத்தி சுற்றூலா வளர்ச்சி திட்டத்திற்கு இந்த இந்த கிரமங்கள், இந்த சில குறிப்பிட்ட கலைகளில் சிறந்து விளங்குகிறது என்பதை முன்னிலைப் படுத்தி விளம்பரப் படுத்தி அன்னிய செலவாணியை கவர்ந்திழுக்கலாம். இதே தான் நவீனமாக சீனா செய்கிறது.
வரி கட்டுதல் :
வருமான மற்றும் விற்பனை வரிகளை நாம் சரியாக கட்ட வேண்டும். இது நாட்டின் பொருளாதார உயர்வுக்கு வழி வகுக்கும். ஆனால் வரி கட்டிய கட்டண ரசீதை கேட்டு வாங்க வேண்டும். வரி ஏய்ப்பு செய்யாமல் வ்ருமான வரியை கட்டுவதன் அவசியத்தை மக்கள் உணர வேண்டும். அரசியல் வாதிகளும் தன் பொறுப்புணர்வை உணர்ந்து நாடுமுன்னேற வழி வகுக்க வேண்டும். லஞ்ச லாவண்யம் இல்லாமல் ஒவ்வொரு துறையும் தனது கடமைகளை சரி வர செய்ய வேண்டும்.
உழைப்பு மற்றும் உற்பத்தி திறன் :
இதில் மக்கள் பங்கு கண்டிப்பாக உள்ளது. நேரம் தவறாமை மற்றும் கடினமான உழைப்புத்தான் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய காரணம். சிறு கைத்தொழில் செய்பவர்கள், சிறு முதலீட்டாளர்கள் என அனைத்து தரப்பினரையும் ஊக்குவித்தால் அது தொழில் உற்பத்திக்கு பெருமளவு உதவும்.
கிராமப்புரங்களில் குடும்ப கட்டுப்பாட்டு திட்டம் பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும். இதனால் மக்கள் தொகை ஒரு கட்டுப்பாட்டுக்குள் வரும். சீனாவில் ஒரு குழந்தை தான்.
இலவசங்களை மக்கள் எதிர்பார்க்காமல், உழைப்பு, ஊதியம் அதில் தான் சந்தோஷமே. இலவசத்தில் அல்ல. இலவசங்களே ஊழலை வளர்க்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். சில அரசியல் கட்சிகள் மக்களை வாக்கு வங்கிகளாக பார்ப்பதால் இலவச சலுகைகளை அதிகமாக பயன் படுத்துகிறார்கள்.
ஒவ்வொருவரும் தனது நாட்டின் மேல் தேசபக்தியுடன் இருக்க வேண்டும். நமது தேச தலைவர்கள் தாய் நாட்டிற்கு செய்த தியாகங்களெல்லாவற்றையும் குழந்தைகளுக்கு கற்பிக்க வேண்டும். கட்டாய பாடமாக 6 முதல் 10 வரை ராணுவ கல்வி முறை பயிற்சி அவசியம். அப்பொழுது தான் படிக்கும் பொழுதே ஒழுக்கத்தையும், தன் பணிகளை சிறப்பாக செய்ய வேண்டும் என்று ஒரு கட்டுப்பாடும் குழந்தைகளுக்கு வரும். இதனால் ஒவ்வொருவரும் தனது தாய் நாட்டிற்கு எதிராக துரோகம் செய்யும் மனப்பான்மையும், பணத்திற்கு விலை போகும் நிலையும் தடுக்கப்படும். சில திட்டமிடல்கள், செய்யும் வேலைகளில் சில ஒழுங்கான வழிமுறைகள், தவறுக்கு உடனே தண்டனைகள், ஒவ்வொருவருக்கும் தேச பற்று இதெல்லாம் பின்பற்றினால் இந்த இலக்கை அடைய கண்டிப்பாக நம்மால் முடியும்.
மாத சம்பளம் வாங்குபவரோ, தொழிற்சாலைகளை நிறுவி உற்பத்தி துறையில் ஈடுபடுபவரோ, வியாபாரியோ, வணிக முகவர்களோ, பெட்டிக்கடை வைத்திருபவரோ யாராக இருப்பினும் அவர்கள் செய்யும் பணியில் செய் நேர்த்தியும், தனித்துவமும், பொருளாதார முன்னேற்றம் குறித்த பார்வையும் இருக்குமேயானால் எல்லாம் வசப்படும்.
முயன்றால் முடியாது இல்லைதானே.
கட்டுரையாளர் சுபஸ்ரீ மோகன் அவர்கள் தம்முடைய சீன நாட்டு பயண அனுபவங்கள் குறித்து தனியாக புத்தகம் ஒன்று ‘சீனா’- அண்ணன் தேசம் என்னும் தலைப்பில் எழுதியுள்ளார்.
இந்நூல் ஒரு விகடன் பிரசுர வெளியீடு.
அகல் பார்வை
புத்தகங்கள் வாசிப்பு என்பது மக்களிடையே குறைந்து போய் தற்போது மீண்டும் மக்களிடையே ஆர்வம் அதிகமாகி இருப்பதாக பல்வேறு புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன (‘தரமான’ சின்னத் திரை நெடுந் தொடர்களுக்கு நன்றி) இதற்கு Face Book ஒரு முக்கிய காரணம் என்றால் மிகையல்ல.
அதே Face Book என்னும் சமூக வலைத்தளம் மூலம் நண்பர் ஒருவர் பலதரப்பட்ட தமிழ் புத்தகங்களை அனைவரிடமும் கொண்டு சேர்க்கும் ஒரு அரிய பணியை செய்து வருகிறார். பொதுவாக பல்வேறு தொழில்களையோ அல்லது மாத சம்பளத்திற்கு ஒரு நிறுவனத்தில் வேலை பார்ப்பது என்பது போன்ற பொருள் ஈட்டும் காரணிகளில் மனிதன் இயங்குவது சாதாரணமான ஒன்றே. ஆனால் தான் செய்யும் தொழில் ஒரு போற்றுதலுக்குரிய சேவையாக இருப்பது சிலருக்கே சாத்தியம்.
Face Book ல் இயங்கும் நண்பர்கள் பலருக்கு இவரைத் தெரிந்திருக்கும். அவர்கள் சிரிப்புடன் ஆமோதிப்புடன் இதைத் தொடர்ந்து படியுங்கள். தெரியாதவர்கள் இனி தமிழ் புத்தகங்கள் எனில் இவரைத் தொடர்பு கொள்ளுங்கள்.
சென்னையில் வசிப்பவர்கள் எனில் சம்பந்தப்பட்டவர்களின் இடத்திற்கே வந்து புத்தகத்தை தந்து விடுவார். தமிழகத்தின் பிற பகுதிகளிலோ வேறு மாநிலத்திலோ வசிப்பவர்கள் எனில் கூரியர் அல்லது VPP மூலமாகவோ அனுப்பி வைக்கிறார். அந்நிய தேசத்தில் வசிக்கும் தமிழர்களுக்கும் அவர்கள் விரும்பும் தமிழ் புத்தகங்களை தபால் மூலம் அனுப்பி வைக்கிறார்.
அகல் சிறுகதைப் போட்டி நடத்திய போதும் சரி அதற்கு முன்பாக Face Book நண்பர்கள் நடத்திய சிறு கதைப் போட்டியின் போதும் சரி புத்தகப் பரிசு பெற்ற நண்பர்களுக்கு புத்தகங்களை மொத்தமாக வாங்கியது இவரிடமே.
நண்பர்களே இனி உங்கள் வீட்டு புத்தக ஷெல்ப், நண்பரது பங்களிப்புடன் மிளிரட்டும்.
நண்பர் பெயர் : கதிரேசன் சேகர் (Kathiresan Sekar)
அலைபேசி எண் : 8489401887
நம் அகல் கவிதைப் போட்டிக்கும், சிறுகதைப் போட்டி 2 க்கும், பரிசு பெறப் போகும் நண்பர்களுக்கான புத்தகங்கள், மொத்தமாக இவரிடமிருந்து தான்.
நன்றி.
என் நூலகத்திலிருந்து – ராஜ ராஜேந்திரன்
அகல் வாசகர்களுக்கு என் அன்பான வணக்கங்கள்.
‘என் நூலகத்திலிருந்து’... என்று இந்தப் பகுதியை எழுத வாய்ப்பளித்தமைக்கும், அழகான இந்தத் தலைப்பைத் தேர்ந்தெடுத்ததற்கும், அன்புத் தோழர் சத்யாவிற்கு நன்றிகளும், அன்பும்.
புத்தக மதிப்புரைகளைப் பொறுத்தவரை, தேனை நாக்கில் தடவி, வேப்பஞ்சாறை புகட்டும் நம் அம்மாக்களின் ஆதி கால உத்தியை மட்டுமே நான் கையாளுவேன். அதாவது கதைப் போக்கில் தென்படும் சில பிரதான / சுவையான அம்சங்களிலிருந்து மேற்கோள்கள் காட்டி படிப்பாசையை வாசகர்களுக்குத் தூண்டும் உத்தி.
என் விமர்சனத்தில் மிக ஆழமான பார்வையெல்லாம் இருக்காது. இலக்கியத் தரமான தமிழ் வார்த்தை விளையாட்டுகளும் நானறியேன். நாவலின் மையக்கருத்தை எளிதாக நீங்கள் புரிந்துக்கொண்டு, அந் நாவலை வாசித்துவிட வேண்டும் என்கிற பேராவலை உங்களுக்குள் தூண்டிவிட முயற்சிப்பது மட்டுமே என் வேலை. அதற்காக பொய்யெல்லாம் சொல்ல மாட்டேன், ஆனால் என் கருத்துக்களுடன் நீங்கள் தாராளமாக முரண்படலாம். முரண்பட்டால்தான் புதுப்புது கருத்துக்களும், சிந்தனைகளும் உருவாகும் என்பதால் என்றுமே மாற்றுக்கருத்தை வைக்கத் தயங்க வேண்டாம். இனி நான் சில வருடங்களுக்கு முன்பு வாசித்த ’வெட்டுப் புலி’ எனும் நாவல் பற்றி பார்ப்போம்.
செந்தமிழில் ஆரம்பித்துவிட்டாலும், பேச்சுத் தமிழில் சில சேதிகளைச் சொல்லும்போதுதான் நம்மிடையே இன்னும் கொஞ்சம் இணக்கம் அதிகரிக்கும் என்பதால், இனி கொஞ்சம் தளர்வான தமிழில் தொடர்கிறேன்!
சினிமாக்களில் டைம்மிஷின்னு பளிச் பளிச்ன்னு கலர் கலரா கண்ணடிக்கிற மெஷின் ஒண்ணக் காட்டுவாங்க. அதுல ஏறி உட்கார்ந்து, தலைலெ எதையோ செருகிக்கிட்டு ஒரு பொத்தான அமுக்கினவுன்ன, சுய்ய்ய்ய்ங்ன்னு அந்த மெஷின் சுத்தும், நாம் நினச்ச வருஷத்துக்கு முன்னயோ, பின்னயோ போயிடுவோம். ஒருவேள முன்ன போயிட்டோம்ன்னா நம்ம முப்பாட்டன், முப்பாட்டி, அவங்க வாழ்ந்த வீடு, அவங்க வாழ்ந்த வாழ்க்கைமுறை, அப்ப இருந்த சமூக நிலை... இதையெல்லாம் பாப்போமல்லவா?
ஆனால், இதெல்லாமே வெகு புனைவு(Fantasy) அதாவது வரம்பு மீறிய கற்பனைகள் மட்டுமே. அறிவியலால் கூடச் சாத்தியப்படாதது. ஒளி வேகத்துல பயணம் செஞ்சா சாத்தியம், கீத்தியம்ன்னு விஞ்ஞானிங்க யாராவது வருவாய்ங்க, இதோ இத நீங்க வாசிச்சிக்கிட்டிருக்கும் போதே முன்னால போச்சே சில விநாடிகள் அதுகிட்டக் கூட நம்மால போக முடியாது. இருப்பினும்... தரமான நாவலால் உங்களை அப்படி சில பல ஆண்டுகளுக்கு முன்னாலும், பின்னாலும் அழைத்துப் போக முடியும்.
அப்படிப்பட்ட மாயாஜாலங்கள் நிறைந்த நாவல்தான் வெட்டுப்புலி. ஆசிரியர் தமிழ்மகன். தமிழ்மகன் பல ஆக்கங்களை அளித்துள்ளார். விகடன் குழுமத்தில் பணி புரிகிறார். நான் இப்போதுவரைக்கும் வாசித்த இவருடைய ஒரே நாவல் வெட்டுப்புலி மட்டுமே. ஆண்பால் பெண்பால், வனசாட்சி போன்ற அவருடைய பிற நாவல்களும் பரவலான வரவேற்பை பெற்றவைகளே. குறிப்பாக வனசாட்சி நாவல் இலங்கை தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்ய அடிமைகளாகவோ, கூலிகளாகவோ சென்ற மலையகத் தமிழர்களின் வாழ்வுமுறைகளை அழகுற விளக்குவது என்று நண்பர்கள் சொல்லியிருந்தனர், விரைவில் வாசிக்க வேண்டும்.
வெட்டுப்புலி என்றவுடன் காட்டில் புலியை வேட்டையாடச் செல்லும் கதை என்று கருதி விட வேண்டாம். போன தலைமுறை வரை நம் வீட்டு சமையலறைகளில் மிகப் பரிச்சயமாக இருந்த வெட்டுப்புலி தீப்பெட்டிதான் கதை நாயகன்!
சிறுத்தையோ, புலியோ ஒண்ணு பாயும். எதிரே வேட்டியை உயர்த்திக் கட்டிய ஓர் ஆள், கதிர் அரிவாளைத் தூக்கி அதைத் தாக்க தயாராயாயிருப்பதைப் போன்ற ஒரு காட்சி இருக்கும். ’வெட்டுபுலித் தீப்பெட்டிய மட்டும் கொடுய்யா’ என்றெல்லாம் வெற்றிலைப்பாக்கு கடைகளில் அது மிகப் பிரபலமாயிருந்த பொழுதுகள் தமிழகத்தில் இருந்திருக்கிறது!
பத்திரிக்கை ஒன்றில் வேலை பார்க்கும் நிருபனின் நண்பர் எதேச்சையாய், இந்தத் தீப்பெட்டியில சிறுத்தைகிட்ட சண்டை போட்டது எங்க தாத்தா தெரியுமா? ன்னு சொல்ல, அதை அந்தப் பத்திரிகை நண்பன் கிண்டல் செய்கிறான். “இல்ல மச்சான் சீரியஸா எங்க தாத்தாவோட தாத்தா யாரோதானாம், எங்கப்பா அடிக்கடி சொல்வாரு, ஆனா தீப்பெட்டிக் கலாச்சாரம் குறைஞ்சிடுச்சில்ல. அதனால இதப் பத்தில்லாம் இப்ப பேசுறதே இல்ல”
பத்திரிகைகாரருக்கு ஒரு பொறி. ஒருவேளை உண்மைதானோ இது? நாம ஏதோ காட்டுல புலியவேட்டையாடப் போனவன வரைஞ்ச பழைய காலப் போட்டோன்னுல்ல நினச்சிக்கிட்டிருந்தோம், சரி இது யாரு, என்ன கதைன்னு தேடிப் போனா என்ன?ன்னு ஒரு ஐடியா.
ஆனா நண்பன் உணர்ச்சிவசப்பட்டு எங்க தாத்தாவோட தாத்தான்னு சொல்லிடறானே ஒழிய, அந்தப் பரம்பரையைச் சார்ந்த மனிதர்கள் எங்கெங்கெல்லாம் சிதறிக் கிடக்கிறார்கள் என விசாரித்து தேடிப் போகும் செயல் ஒரு பெரிய சிக்கான நூற்கண்டைச் செம்படுத்துவது போல் இருக்கிறது.
சிக்கு நூற்கண்டில் ஒரு நுனி கிட்டிவிட்டால், அதைப்பற்றிக் கொஞ்சம் மெனக்கிட்டால், முழுச் சிக்கலையும் தீர்த்துவிடுவோமல்லவா? அது போல அந்தச் சண்டைச் சம்பவத்தை ஆராய பயணம் மேற்கொள்கிறான் நாயகன். விசாரித்து அந்தச் சம்பவம் நடந்த அம்பத்தூரைத் தாண்டிய ஒரு குக்கிராமத்தை அடைகிறான். ஒரு காலத்தில் அது செழிப்பான நெல் விளைந்த பூமியாக இருந்திருக்கிறது. எண்பது தொண்ணூறு வருடங்களுக்கு முன்னால் நடந்த சம்பவம் அது என்பதால், மிகவும் கடினப்பட்டே அவ் வீட்டை அவன் கண்டுபிடிக்கிறான், அவர் கதையைச் சொல்வதற்கென்றே ஒரு ஜீவன் இன்னும் உயிரோடு இருக்கிறது. அவர் கதையைச் சொல்ல ஆரம்பிக்க, நாவல் ஒரே தாவாய் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்துக்கு போகிறது. (1901 - 1925)
நம்பமாட்டீங்க, அம்பத்தூர் எல்லாம் சென்னைப் பட்டணத்திலிருந்து மிகத் தூரத்தில் இருந்த குக்கிராமமாத்தான் இருந்திருக்கு. முறையான போக்குவரத்து வசதிகள் கிடையாது. காடு, வயல், ஆறு, மேடு, பள்ளம் ன்னு எல்லா இயற்கைத் தடைகளும் ஏராளமா இருந்ததால, அப்பல்லாம் இந்த ஊர் வயல்கள்ல குள்ளநரிகள், கீரிகள், பாம்புகள், மான்கள், சமயங்களில் சிறுத்தைப் புலிகளெல்லாம் நடமாடுமாம், அதனால இவைகளையெல்லாம் கடந்து சென்னைப் பட்டணத்துக்குப் போறதே சவால்தான்.
ரெட்டி, பூர்வீகச் சொத்தான நெல் வயல உழறதுக்காக, தன் நாயோட ஒரு விடியற்காலைல போறாரு. வயல்ல ஏதோ ஒரு சலசலப்பு. நாய் விடாம அந்த இடத்தப் பாத்து குரைக்குது. ரெட்டி கைப்பிடில இருந்த கயிற அறுத்துக்கிட்டு அங்கத் தாவ துடிக்குது. ரெட்டி உஷாராயிட்டாரு. ’நெற்கருத அறுக்க ஏதோ திருடன் வந்திருக்கான், வசமாச் சிக்கிட்டான்’னு தன்னொட கதிர் அரிவாள இடுப்புல இருந்த உருவப்போன சமயம், பெரிய உறுமலோட பாயுது சிறுத்தைப் புலி. ’சிறுத்தைப்புலிங்க ஊருக்குள்ள நடமாட்டம்’ங்கிறத ரெட்டி கேள்விப்பட்டிருக்காரேயன்றி பார்த்ததெல்லாம் இல்ல, அதும் இத்தத் தண்டிக்கு அதோட அந்தச் சீற்றமான உறுமல்லயே வேட்டி நனஞ்சு போயிரும் போல, ஆனா ரெட்டி வளத்த நாய் அதுக்கு பயப்படல. தன்னோட எஜமானன் மேல பாஞ்ச அந்தச் சிறுத்தைய அது குறுக்கால போய் விழுந்து தடுத்துடுச்சி. சிறுத்தைய ஆக்ரோஷமா கடிக்கப் பாயுது. நெசம் என்னன்னா அந்தச் சிறுத்தை ருசிக்க வந்ததே இந்த நாயத்தான். சிறுத்தைப்புலிகளுக்கு நாய் செம விருப்பமான உணவு. நல்ல உப்புச்சுவையோட அமோகமாக இருக்கும். ஆனா இந்த நாய் அநியாயத்துக்கு இப்படியா பாஞ்சு கடிக்கும்?
சிறுத்தைக்கு கடும் கோபம். திரும்பவும் கடிக்கப் பாஞ்ச நாய, தன்னோட முன்னங்கையால ஓங்கி ஒரு அடி விட்டுச்சு. நாய் சுருண்டு விழ, ஒரே பாயா பாஞ்சு அது வயித்த கொத்தா கடிச்சி தூக்குச்சு. ஆனா கழுத்துல சத்தக்குன்னு ஒரு வெட்டு விழுந்துச்சு. சாதாரண வெட்டல்ல அது. வலி. ஆவேசமா திரும்பிய புலி, ரத்தம் சொட்டிட்டுருந்த அரிவாளோட இருக்கிற ரெட்டிய பாக்குது. ’நாயத் தூக்கிட்டு போகவா, இல்ல நம்மள வெட்டுன இந்த நாயத் தூக்கிட்டு போகவா’ ன்னு சிந்திக்கிறதுக்குள்ள இன்னொரு கடி கால்ல... அது நாய், நாய இன்னொருமுறை ஆக்ரோஷமா கடிச்சது புலி, ஆனா மீண்டும் முதுகுல இன்னொரு வெட்டு. இம்முறை வலி தாங்க முடியல சிறுத்தையால. நாய விட்டுட்டு ரெட்டி மேல பாஞ்சது, ஆனாலும் அதுக்கு இப்ப உயிர் முக்கியம், அதனால ரெட்டியத் தள்ளி விட்டுட்டு வயலுக்குள்ள புகுந்து தப்பிச்சி ஓடிருச்சி. குத்துயிராக் குருதி வெள்ளத்துலக் கிடந்த நாயத் தூக்கிக்கிட்டு, வீட்டுக்கு ஓடி வராரு ரெட்டி. தன் உயிரைக் காப்பாத்தின சீவன சாக விடக்கூடாதுன்னு அவருக்கு பேராச. ஆமாம், நாய் செத்துப்போச்சு. அதுக்கு விசேஷ இறுதி மரியாத கொடுத்து அடக்கம் செய்றாரு ரெட்டி.
இப்படி ஆரம்பிக்கிற கதை அப்படியே அங்கிருந்து அடுத்தடுத்த வருடங்களுக்கு பயணிக்குது. பல கதை மாந்தர்கள் வர்றாங்க. ரெட்டி கூட்டுக்குடும்பமா வாழறாங்க. அவர், அவர் தம்பி, அவங்க பசங்க வாழ்க்கை, அப்போதைய சமூகச் சூழல், அப்போதைய அரசியல், அப்போதைய பொழுது போக்குகள், அப்போதைய சாதி ஏற்றத் தாழ்வுகள், விடுதலைப் போருக்கான பெரிய உத்வேகங்கள்ன்னு நம்மை அந்தக் காலத்துக்கே கையோடு கூட்டிட்டு போய்டறாரு ஆசிரியர்.
பெரியவர்களெல்லாம் உழவை விரும்பிச் செய்ய, வாரிசுகள் தங்கள் வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ள பல்வேறு தொழில்களுக்கும், அரசு/ தனியார் வேலைகளுக்கும் செல்ல ஆரம்பிக்கின்றனர். சிறுகச் சிறுக விவசாயச் சிக்கன வாழ்வு போய், லக்ஸரி வாழ்க்கை படர்கிறது!
நாடகத்துலருந்து சினிமா பிரபலமாக ஆரம்பிக்கிற வருடங்கள்ல ஓர் எண்ணெய் வியாபாரி, கிராமத்துல ஒரு டூரிங் கொட்டாய் போடலாம்ன்னு ஆசைப்படறாரு, ஆனா அவர் டிக்கெட்ட விக்க படுறப் பாட்டக் கேட்டா சகிக்க முடியல. எல்லார்க் கையிலயும் காசு புரள முடியாம இருந்த காலம் அல்லவா அது ? டூரிங் டாக்கிஸ்க்கு வந்த ஜனங்க வரிசைல நிக்கிறாங்க. வரிசைக்கிட்ட போய் சொல்றாரு, “விதை வச்சிருக்கவன், பயிற வச்சிருக்கவன் எல்லாம் ஓடிறணும், ஓரணா கைல காசா வச்சிருக்கவன் மட்டும் வரிசைல நிக்கணும், கேட்டுக்கிட்டீங்களா?”
பெரியார் திருச்சிக் கூட்டத்தை முடிச்சிக்கிட்டு சென்னைக்கு கார்ல திரும்பறாரு. பக்கத்துல மணியம்மை. திருச்சியக் கடக்கறப்ப கூட்டமா கருப்புச் சட்டைங்கள போட்டுக்கிட்டு நடத்துக்கிட்டிருக்கிற ஒரு கும்பல பெரியார் பார்க்கறாரு. உற்சாகமா, ”பார்த்தியா மணியம்மை, நம்ம கொள்கைகளால எவ்வளவு இளைஞர்கள் இந்த சின்ன ஊர்ல கூட மாறியிருக்காங்க?”
“அட நீங்க வேற, எல்லாம் கேரளாவுல ஏதோ சபரிமலையாமே, அதுக்கு விரதம் இருக்கிற பக்தி கூட்டம்ங்க அது, அங்க முத முறையா போறவங்க கருப்புச் சட்டை போட்டுக்கிட்டுத்தான் போகணுமாம்”
பெரியார் முகத்தில் ஈயாடவில்லை, ”சரி விடு நமக்கு இன்னும் வேலை அதிகமிருக்குன்னு சொல்லு” என்று கண்ணயர்ந்தார்ன்னு ஒரு காட்சி வருது.
பராசக்தி, மனோகரா, மலைக்கள்ளன் படங்களுக்குப் பிறகு திராவிடக் கருத்துக்களால் பெரும்பாலான இளைஞர்கள் ஈர்க்கப்பட்டு, திமுக காங்கிரஸ்க்கு மாற்றுச் சகதியாக... (புள்ளிய விட்டுட்டேனோ?) வளர்ந்துகொண்டிருந்த பொழுது. தொழிற்சங்கங்கள் எவ்வாறெல்லாம் கட்சிகளின் பெயரில் அரசு நிறுவனங்களுக்குள் நுழைந்தன, இதனால் விளைந்த நன்மைகள், தீமைகள் (தீமைகள்தான் அதிகம் என்பது போல் காட்டியிருப்பார் ஆசிரியர்) எல்லாவற்றையும் அழகாக எடுத்துக்காட்டியிருப்பார். கட்சியின் பெயரால் அதிரடி ஸ்ட்ரைக், சொற்பொழிவு, குடி, கூத்தி எனச் சீரழியும் ஒரு யூனியன் தலைவரின் கிளைக் கதையும், அவனுடைய உடைந்த மண வாழ்வைப் பற்றியும் சொல்வதன் மூலம் கழக அடிமட்டத் தொண்டர்களின், குடும்பத்தைப் பாரா கட்சிப்பக்தி பற்றியும், அந்தக் கட்சிக் கலாச்சாராம் தந்தக் குடிப் பழக்கத்தால் விளையும் நாசங்களை நாசூக்காகக் காட்டியிருப்பார் ஆசிரியர்.
கிளைக்கதையாக, சினிமா எடுக்க ஆசைப்பட்டு, ஆந்திராவிலிந்து நடிக்க வரும் நாடக நடிகை மற்றும் அவள் தாயின் அழகில் மயங்கிச் சீரழியும் ஒரு இளம் தயாரிப்பாளரின் வாழ்வு பற்றியும் சொல்லியிருக்கிறார். இறுதிவரை சினிமா எடுக்க முடியாமல் எல்லாக் காசும் கரைந்து நிராசையாகி, அடுத்தவேளை உணவுக்காகவே கையேந்தி கோயிலில் பிச்சையெடுக்கும் அளவுக்கு போவது போல் காட்டி, சிற்றின்பம் எப்படியெல்லாம் அக்கால வாழ்க்கையில் ஒரு முக்கிய அம்சமாக இருந்து பலரை நாசமாக்கியிருக்கிறது என்று தெளிவுறுத்தியிருப்பார்.
கதை அந்த வெட்டுப்புலியைத் தேடிச் செல்லும் பத்திரிக்கையாளரின் நிகழ்காலத்திற்கும், கதைகளை கேட்கும்போது இறந்த காலத்திற்கும் பயணிக்கும். இந் நாவல் மூலம், நாம் 2015ல் இருந்துக்கொண்டு 2009 வரைக்குமான நிகழ்வுகளை பார்க்கிறோம், பிறகு அங்கிருந்து 1915 போகிறோம், அப்படியே 1935, தியாகராஜ பாகவதர், பி யு சின்னப்பா, 1945, உலகப்போர்கள், இந்திய விடுதலை, ராஜாஜி, இந்தியக் குடியரசு, நேரு, காமராஜர், கழகங்கள் வளர்ச்சி, பெரியார், அண்ணா, கருணாநிதி, இந்திராகாந்தி, எமர்ஜென்சி, எம்ஜிஆர், கமல்ஹாசன், ரஜினிகாந்த், ஜெயலலிதா, பாலச்சந்தர், பாரதிராஜா, பாக்கியராஜ், மணிரத்னம், வைகோ, விடுதலைப்புலிகள், இறுதியாக ஏர்போர்ர்ட்டில் நாயகன் காணும் ஊழல் செய்திராத அப்பழுக்கற்ற 2005ன் கனிமொழி என எல்லோரும் வருகிறார்கள்.
இவங்க யாரையும் வலிந்து திணிக்காமல் கதை நிகழும் காலத்திற்கேற்ப, களத்திற்கேற்ப உள்ளே புகுத்தி, ஒரே நாவலில் இலக்கியப் பிரியர்களுக்கும், அரசியல் பிரியர்களுக்கும், சினிமா பிரியர்களுக்கும், வரலாற்றுப் பிரியர்களுக்கும் விருந்து படைத்திருக்கிறார் ஆசிரியர். நாவலில், அடுத்த முறையும் ஒரு சிறுத்தை வருகிறது. அடிபட்டு ஓடிப்போன அதே சிறுத்தைப் புலியா எனத் தெரியாது. ஆனால் இம்முறை சின்னரெட்டி அதை துணிந்துத் தாக்கிக் கொல்கிறார். பேப்பரில் எல்லாம் செய்தி வருகிறது. அந்தச் சாகஸத்தை படமாய் வரைந்து போட, அதை ஒரு தீப்பெட்டிக் கம்பெனி பயன்படுத்திக்கொள்ள ரெட்டியிடம் அனுமதி கேட்கிறது, கொஞ்சம் சன்மானத்துடன். இந்தக் கதையைக் கேட்கப்போய், நமக்கு ஒரு நூற்றாண்டு வரலாறே கிட்ட(கேட்ட வரலாறுதானே அன்றி ஆசிரியர் தன்னிஷ்டத்துக்கெல்லாம் வரலாறை வளைக்கவில்லை) இன்பமான வாசிப்பனுபவம் கிட்டுகிறது.
இங்கு ஒரு சின்ன விளக்கம். இந்த நாவலை வாசிக்கும்போது, நாவல் பயணிக்கும் காலகட்டம் பற்றித் தெரிய நீங்கள் சற்றே மெனக்கிட வேண்டும். ஏனெனில் கதை பாகவதரைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும் போதே, மணிரத்னம் பற்றி நாயகனும், நண்பரும் விவாதிப்பது போல காட்சி வரக்கூடும், குழம்பத் தேவையில்லை. நம் நினைவுத் திறனை சோதித்துப் பார்க்கும் ஆசிரியரின் உத்தி அது! இதே வரிசையில் ஆழி சூழ் உலகு, புலிநகக் கொன்றை போன்ற டைம்மிஷின் நாவல்களைச் சொல்லலாம். டைம்மிஷின் எல்லாம் வெறும் கற்பனையல்ல, இப்படியும் அதில் பயணம் செய்யலாம் என்று நிருபிக்கும் வகை நூல்தான் வெட்டுப்புலி.
முன்னுரைல பெரியாருக்கும், காந்திக்குமிடையே நடந்த ஒரு வாக்குவாதத்தப் பத்தி ஆசிரியர் சொல்றாரு. பெரியார் காங்கிரஸ் தலைவரா இருந்திருக்காரு, தெரியுமில்ல? காந்திக்கு வெள்ளைக்காரன நாட்டை விட்டு விரட்டணும்ன்னு ஒரே கொள்கைதான். ஆனா, பெரியார் என்ன நினச்சார்ன்னா இந்த சமூக ஏற்றத் தாழ்வு, சாதி முறைகள், அனைவருக்கும் கல்வி இதையெல்லாம் வெள்ளைக்காரன் சட்டமாக்கி சமூகம் கொஞ்சமா திருந்தனவுன்ன சுதந்திரம் கிடச்சா போதும், அதுவரைக்கும் இந்தக் கொள்கைகள வெள்ளைக்கார நிர்வாகம் நிறைவேற்ற போராடுவோம்ன்னு காந்திக்கிட்ட சொல்றாரு. காந்தி ஒரே வார்த்தைல அத மறுக்கிறாரு. போராட்டத்த நீர்த்துப் போகச் செய்துவிட வேண்டாம், நாம எல்லோருடைய ஒரே இலக்கா இப்ப இருக்க வேண்டியது வெள்ளைக்காரன் இல்லாத நமக்கே நமக்கான நம்ம இந்தியா, நாம் ஆளற இந்தியா. அது மட்டும் கைகூடினா, நம்ம நாட்ட நாம திருத்திக்கலாம்.
பாத்தா சிலருக்கு பெரியார் சொன்னது தப்பு மாதிரி தெரியும், காந்தி சொன்னது ரொம்பத் தப்பு மாதிரி சிலருக்குத் தெரியும். ஆனா நெசம் எதுன்னா ரெண்டு பேருமே நாட்டைப் பத்தி சிந்திச்ச தியாகிங்க. இதனால ரெண்டு பேருக்கும் பிணக்கு வந்தாலும், நமக்கு லாபம்தான். ஒருத்தர் நாட்டு விடுதலையையும், ஒருவர் நாட்டு மக்களின் சமூக விடுதலையையும் பத்திச் சிந்திச்சிருக்காங்க. இரண்டுமே சாத்தியமாச்சுன்றதுதான் பேருண்மை!
உங்களுக்கு வரலாறு பற்றிய ஆர்வமிருந்தால், நிச்சயம் இந்த நாவல் மிக ஈர்க்கும். சற்றே அங்கும், இங்கும் கதை பயணிக்கும் பாதையை மட்டும்
பகுத்தறிந்து உள்வாங்கி விட்டோமென்றால் கதை முடிக்கும்போது பேரின்ப நிலையை அடைவோம், அதுதான் இந்த நாவலின் வெற்றி !!!
வெட்டுப் புலி - ஆசிரியர் தமிழ்மகன்.
உயிர்மை பதிப்பகம்.
முதல் பதிப்பு 2009.
E Book (PDF) வகைகளாகவும் கிட்டும் என நம்புகிறேன்.
இதுவரை இந்த எளியோனுடன் பயணித்ததற்கு மிக்க நன்றிகள் _/\_
MAXWEL GENERATORS PVT LTD
PROMPT DELIEVERY/ EFFECTIVE SERVICE
We are one of the leading Sales & Service Provider for all make and model DIESEL GENERATING SET.
SERVICES WE PROVIDE:
- NEW GENERATORS SALES
- GENERATOR SERVICE
- SPARES
- POWER ON HIRE
- AMC
MAXWEL GENERATORS PVT LTD
115/40, Madhvavaram High Road, Perambur, Chennai-11
www.maxwelgenerators.com
91 44 25581996 / 9840253833 / 9445001947/9087001947
EMAIL : maxwelgenerators@gmail.com
சிறுகதை – ஜெயராமன் ரகுநாதன்
”பெருமாளும் சக்கரையும்.....”
“மணி எட்டாச்சு! இன்னுமா கடை திறக்கல?”
“தெர்லங்க! உன்னும் காணம்!”
டல்லாஸ் டீ கடையின் சமோசா போடும் ஆசாமி அலட்சியமாகப் பதில் சொன்னார்.
இப்பவே இரண்டு முறை போய்ப் பார்த்துவிட்டேன். வீட்டில் அப்பா இருப்புக் கொள்ளாமல் காத்திருப்பார். எந்த நேரமும் சாஸ்திரிகள் வந்துவிடலாம். நேத்து சாயங்காலம் ஒட்டன்சத்திரம் கடையில் எல்லாத்தையும் வாங்கினேன் ஆனால் வெத்தலையை மறந்துவிட்டேன். சரி, காலை நம்ம பெருமாள் கடையில வாங்கிக்கலாம்னா இப்படி படுத்தறான் இன்னிக்கு.
எங்க தெருவுக்கு கடைசியில், அதான் கார்ப்பரேஷன் ஸ்கூல் கேட் வருமே, அதன் எதிரே சற்றுத்தள்ளி, அந்த ஆயுர்வேத டாக்டர் செண்பகம் வீட்டுக்கு அடுத்த முக்குக்கடைதான் பெருமாள் கடை. அதை ஒட்டி காமராஜ் அவின்யூவின் செகண்ட் ஸ்ட்ரீட் ஆரம்பித்துவிடும். பெருமாள் கடையை ஒட்டி வலது புறம் செகண்ட் ஸ்ட்ரீட்டில் வரிசையாக கடைகள். ஆனால் ஒன்றிலும் வெத்தலை இருக்காது.
முதலில் கனகா காபி ஒர்க்ஸ்.
இதன் போர்டு எழுதும்போது, அது நடந்து ஆகியிருக்கும் நாப்பத்தைந்து வருஷம், அப்போதே லுங்கி அணிந்த பெயிண்ட்டர், கன என்று எழுதிவிட்டு காகாபி ஒர்க்ஸ் என்று எழுதினது பல வருஷங்களுக்கு அப்படியே இருந்து சில வருடங்களுக்கு முன்னால் மறுபடி போர்டு எழுதும்போதுதான் சரி செய்யப்பட்டது. அப்போதெல்லாம் அதன் ஓனர் என்று ஒரு தாட்டியான தெலுங்குப் பெண்மணி உட்கார்ந்திருப்பார். முகத்தில் நல்ல பணக்காரக்களை இருக்கும்.
“ருக்கு! அவோ ஒவ்வொரு நாளும் வெங்கடகிரி, போச்சாம்புள்ளி, நெகமம்னு என்னமா மினுக்கறா தெரியுமா”
அம்மா பேசிக்கேட்டிருக்கிறேன். ஒரு வார்த்தை பேசிக்கேட்டதில்லை. அமைதியாகத் தெலுங்கு புஸ்தகம் படித்துக்கொண்டு கல்லாவில் உட்கார்ந்திருப்பார். புஸ்தி மீசை வைத்த பரமசிவம் தான் கடையில் எல்லாம். அவர் அந்த பட்டர் பேப்பர் கவரில் காப்பி பொடியை கொட்டி, அந்த காக்கி கலர் ஸ்டிக்கர் போட்டு ஒட்டி, மேஜையில் அப்படி இப்படி என்று புரட்டி நம் கையில் கொடுத்துவிட்டு “ஆறு ரூவாய்” என்பார். தெலுங்கு ஆண்ட்டி வாங்கிப் போட்டுக்கொண்டு புன்னகை போல ஒன்றைக் கோடி காண்பித்துவிட்டு மறுபடி தெலுங்கு புஸ்தகம். சில வருஷங்களுக்கு முன்னால் அந்தப் பெண்மணியிடமிருந்து பரமசிவமே கடையை வாங்கிவிட்டார்.
அதற்கு அடுத்த கடை லாண்டிரி.
வாரத்தில் நான்கு நாட்கள் மூடியிருக்கும். எப்போது திறப்பான் என்றே தெரியாமல் மர்மமாக திறந்து விட்டுப்போவான் லாண்டிரி ராஜு. திறந்திருக்கும் நேரமெல்லாம் அயர்ன் பண்ணிக்கொண்டே இருப்பான். பக்கத்தில் ரேடியோவில் சினிமா பாட்டு அலறிக்கொண்டிருக்கும்.
அதை விட்டால் அடுத்தது ஏர் கண்டிஷன் ரிப்பேர் கடை. வாசல் முழுக்க நாலைந்து ஏர்கண்டிஷனர்கள் பிரித்து போடப்பட்டு நிர்வாணமாக கிடக்கும்.
அதை அடுத்து நிற்கக்கூட இடமில்லாத மிக்ஸி ரிப்பேர் கடை. ஓனர் மொட்டை ஒரு சேட். ஆனால் சுத்தமாக த்தமிழில் திட்டுவான். அவனுடைய ஒல்லியான மச்சுக் கிழவி சாயல் அம்மாவின் தமிழ்ப்புலமை இன்னும் ஸ்லாக்கியம்.
கடைசியாக மார்த்தாண்டன் ஸ்டோர் என்னும் மளிகைக்கடை. எப்போதும் சாமான் கள் கச்சமுச்சாவென்று போடப்பட்டிருந்தாலும், “நாட்டாரே! ஒரு கிளினிக் சாம்பூ (ஆம் ஷாம்பூ இல்லை) சாச்சே கொடு!” என்று கேட்டால் தேடாமல் எடுத்துத் தருவார்.
இந்த வணிகர் குழாத்தில் பெருமாள் கடைதான் பழமையானது. அறுபத்திரெண்டில் நாங்கள் இந்த வீட்டிற்கு வந்தபோதே இருந்தது. நான் ரெண்டாம் க்ளாஸ்! பெருமாள் அப்போது இளைஞர். நல்ல உயரமாக இருப்பார். நடுவில் லுங்கி போல குறுக்கு விட்டத்தில் தைத்த வேஷ்டி கட்டி வலை முண்டா பனியனுடன் இருப்பார். சில சமயம் காலையில் நான் மணி சலூனுக்குப்போகும்போது தன் கடை திறக்க வருவார். அகல காரியர் வைத்த சைக்கிளில் வந்து முன் பக்கமாக காலை எடுத்து இறங்கும் கலையை கசடறக் கற்றிருந்தார்.. அவர் போட்டிருக்கும் சந்தனக் கலர் சட்டை அப்போதுதான் இஸ்திரி பண்ணினது போல முறுகலாக இருக்கும். அதை ஜாக்கிரதையாகக் கழட்டி வைத்துவிட்டு வேஷ்டி பனியனுடன் கடையில் உட்காருவார்.
“என்ன தம்பி பட்டாபிஷேகமா?”
வெட்கத்துடன் சலூனுக்குள் ஓடுவேன்.
வாழைப்பழம், வெத்தலை, பாக்கு, சிகரெட், கடலை பர்பி, உருண்டையான புளிப்பு மிட்டாய், தேங்காயில் செய்த ரோஸ் கலர் பர்பி, ஒல்லியான முறுக்கு, பொறை, ஏன் பீடி கூட கிடைக்கும். இந்த ரோஸ் நிற பர்பி மட்டும் ஏனோ அம்மா வாங்கித்தரவே மாட்டாள்.
“டேய்! பெருமாள் கடையில போய் அம்பது பைசாவுக்கு புளி வாங்கிண்டு வா”
”அஞ்சு பைசாவுக்கு மாட்ச்சஸ் வாங்கிப்பேன்!”
அம்மா விரட்டினால் லஞ்ச பேரம் பேசுவேன். 60 களில் இந்த மாட்ச்சஸ் என்னும் வஸ்துவை சேர்க்கும் ஹாபி இல்லாதவர்கள் சபிக்கப்பட்டவர்கள். இது அமெரிக்க டாலரைவிட அதிக செலாவணி மதிப்பு பெற்றிருந்தது.
”எங்கிட்ட த்ரீ ஸ்டார் ரெண்டு இருக்கே!”
சுப்பையா பீத்திக்கொள்வான். ஒரே ஒரு தரம் எட்டு இடமும் குளிர்ந்து இருந்ததால் என்னுடைய சீட்டா ஃபைட்டுக்கு த்ரீ ஸ்டார் ஒன்று தந்தான். கில்லியில் கடுகு அடிக்கிறேன் என்று பெட் கட்டி அரிவாள் மாட்ச்சஸ் வென்றேன். அம்மாவிடம் பெருமையாகக் காண்பிக்கப்போய் சுளுக்கு எடுத்துவிட்டாள்.
“இப்பவே பெட் கட்டி ஆடறியா? உருப்டாப் போலத் தான்! இப்ப மாட்ச்சஸ் கட்டுவே, அப்புறம் பைசாவா? இனிமே வீட்ட விட்டு வெளையாடப் போறேன்னு சொல்லு பார்ப்போம், காலை ஒடச்சுடறேன்!”
சரியான மண்டகப்படி.
அதோட பெட் கட்டற ஆட்டமெல்லாம் ஸ்கூலோட நிறுத்தினேன்!
கில்லி ஆட்டத்தில் நான் விற்பன்னன். பாட்ரிக்ஸ், அப்புறம் பெசன்ட் ஸ்கூல் பையங்களுக்கெல்லாம் காண்ட்ராக்ட்டில் வெளையாடி இருக்கிறேன் என்பதை சொல்லிக்கொள்ள தன்னடக்கம் தடுக்கிறது. அதுக்கான ஃபீஸ் தரித்திர பக்ஷம் ஒரு பன்னீர் சோடா, அதுக்கு மேல ஒரு சில மாட்ச்சஸ், அவ்வளவுதான், மேலே கேட்கத் தெரிந்திருக்கவில்லை.
அந்த மாட்ச்சஸ் வாங்க பெருமாள் கடை ஹேதுவான இடம். வித விதமாக தீப்பெட்டிகள் வைத்திருப்பார். ஸ்வான், படாரா, அருணா, ரவிராஜ், காளீ என்றெல்லாம் பிராண்டுகள் இருக்கும். பெருமாள் எனக்காக எடுத்து வைத்துத் தருவார்.
“என்ன தம்பி! சிசர்ஸ் மாட்ச்சஸ் வந்திருக்கே, தரட்டுமா? பயப்படாத, சிகரெட் இல்ல, மாட்ச்சஸ் தான்!”
என்னுடைய பூணலுக்கு வாழைப்பழத் தார் பெருமாளே வீட்டுக்கு கொண்டுவந்து போட்டார். அப்போதே கூட அவர் பையன் வருவான். சின்னதாக சொப்பு மாதிரி இருப்பான். எதற்கோ அவனை சக்கரை என்று கூப்பிடுவார்கள். உண்மைப் பெயர் இன்று வரை தெரியவில்லை. ‘இவன் ஸ்கூலுக்கே போக மாட்டான் போல’- எப்போதும் கடையிலேயெ இருப்பான்.
“சக்கர! ஆயாவுக்கு உப்பு கொடு!”
படு லாவகமாக பொட்டலம் கட்டுவான். ஒரு முறை ரகசியமாக சக்கரையிடமே ஒன்றிரண்டு மாட்ச்சஸ் லவிட்டியிருக்கிறேன்.
அம்மா இறந்த வருஷமோ அல்லது அடுத்த வருஷமோ, அப்போதிலிருந்தே சக்கரை கடை மானேஜ்மெண்ட்டுக்கு வந்துவிட்டான். தினமும் சில மணி நேரம் பெருமாள் கடைக்கு வந்துவிட்டுப் போவார். மர ஸ்டூலில் நேர்த்தியாக முதுகு வளைக்காமல் உட்கார்ந்திருப்பதை நானே பார்த்திருக்கிறேன்.. பழைய கஸ்டமர்களுடன் ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசுவார். என்னுடைய CRM லெக்சரில் பெருமாள் கடை உதாரணத்தைக்கூட சொல்லுவேன்.
காத்திருந்த என்னைப்போலவே இன்னும் ஏழெட்டு பெண்கள் வந்து விஜாரிக்க ஆரமித்துவிட்டனர்.
”என்ன லேட்டாவுதே, இன்னிக்கு சக்கரை கடை திறக்கலியா?”
”பால் பாக்கெட் வேணூம்! இவன் இப்படி வரலேன்னா என்னா பண்றது?”
ரொம்ப நாழி ஆகிவிட்டதே என்று அப்பாவே என்னைத் தேடிக்கொண்டு கடைக்கு வந்துவிட்டார்.
“சாஸ்திரிகள் வந்துட்டா! இன்னும வெத்தல வாங்கல?”
”கடையே திறக்கலப்பா!”
அந்த நேரம் சக்கரை மோட்டார் சைக்கிளில் வந்து இறங்கினான்.
“அப்பாடா வந்தியா? என்ன இவ்ளோ லேட்டு?”
“உன்ன நம்பி பால் சொல்லிருக்கேன்! நீ இப்படி லேட் பண்ணினா எப்படி? வேலைக்கி போவ வாணாவா?”
”சக்கர! அல்லாரும் காத்துக்கினு இருக்காய்ங்க ப்பா! சீக்கிரமா குட்தனுப்பு!”
டல்லாஸ் கடை சமோசா ஆசாமி சத்தமாகச் சொன்னார்.
சக்கரை ஒன்றும் பேசவில்லை. மௌனமாக கடை திறந்து முதலில் பால் கொடுத்தனுப்பினான்.
கடைசியில் நானும் அப்பாவும் வெத்தலை வாங்கினோம். சக்கரை மறுபடி கடையை மூட ஆரமித்தான்.
“என்ன! இன்னிக்கி அவ்வளவுதானா?”
“ஆமா சார்! இன்னி விடியக் காலம் அப்பா போய்ட்டாரு! இன்னமே போய்த்தான் ஆக வேண்டிய காரியம் பாக்கணும்.!”
***********************************************************************************
சிறுகதைப் போட்டி பரிசு விவரங்கள் :
4 சிறுகதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு
5000 ரூபாய்
3000 ரூபாய்
2000 ரூபாய்
1000 ரூபாய்
எனப் பணப் பரிசுகள் வழங்கப்படும்
மேலும் 4 சிறுகதைகள் புத்தகப் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு எழுத்தாளர். திரு. அ. முத்துலிங்கம் அவர்கள் எழுதிய படைப்பு பரிசாக வழங்கப்படும். இது தவிர பிரசுரத்துக்குரிய சிறுகதைகள் என 4 சிறுகதைகள் தேர்ந்தெடுக்கப் பட்டு சிறப்பு பரிசாக திருமதி. சுபஸ்ரீ மோகன் எழுதிய ‘சீனா அண்ணன் தேசம்’ புத்தகம் பரிசாக வழங்கப்படும்.
சிறுகதைகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி :
சினிமா பார்வை – ஹரிஷ் கணபதி
“நீங்க சொன்ன கதை அருமையா இருக்கு. சூப்பர் ஸ்கிரிப்ட். ஆனா நீங்க இன்னும் வளரும் இயக்குநர் தான். ஸ்டூடியோ காரன் கிட்ட உங்க பேர சொல்லி படத்த விக்க முடியாது. படத்துக்கு பணமும் கிடைக்காது. ஆனா இந்த கதை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. என்ன பண்ணலாம்?”
“அந்தப் பெரிய ஹீரோ கிட்ட ஒரு அப்பாய்ன்ட்மென்ட் மட்டும் வாங்கிடலாம் சார் எப்படியாவது. டாக்ஸி டிரைவர், ரேஜிங் புல்னு அடுத்தடுத்து மெகா ஹிட் அடிச்சிருக்கார். அவருக்கு கதை சொல்றேன். எப்படியாவது அவருக்கு புடிச்சிட்டா அவரை யூஸ் பண்ணியே படத்தை நகர்த்திடலாம். இதை எப்படியாவது பண்ணிடணும் சார். இந்தப் படம் என்னோட கனவு. சினிமாவில் என்னுடைய தொடக்கம்”
அந்த நடிகருக்குக் கதை பிடித்தது. பிராஜெக்டோடு தன்னை முழுவதுமாக இணைத்துக் கொண்டார். முதலிலிருந்தே ஆர்வமாக இருந்தார். தொழிற்சாலைகள் நிறைந்த ஒரு சிறுநகரத்தைச் சேர்ந்த சாமானிய இளைஞர்கள் / நண்பர்கள் மூன்று பேர் அமெரிக்க ராணுவத்தில் சேர்கிறார்கள். வியட்நாமுக்கு அனுப்பி வைக்கப் படுகிறார்கள். வியட்நாம் போர் அவர்கள் வாழ்க்கையை எப்படிப் புரட்டிப் போடுகிறது? மூவரும் என்ன கதிக்கு ஆளாகிறார்கள்? போருக்குப் பிறகான அவர்கள் வாழ்க்கை என்ன? இது தான் கதை.
படத்துக்கு ஏகப்பட்ட சிக்கல்கள். முக்கியமான சிக்கல் பட்ஜெட் எகிறியது. முதலில் போடப்பட்ட பட்ஜெட்டை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகம் செலவு பிடித்தது. புது இயக்குனர் மேல் அங்கொன்றும் இங்கொன்றுமாய் அதிருப்திக் குரல்களும் சிறு புகார்களும். தயாரிப்பாளர் பொறுத்துக் கொண்டார். படம் முடிந்து வெளிவந்தது. யாருமே எதிர்பாராத அளவு வெற்றி. திரை ஆர்வலர்களும் விமர்சகர்களும் ரசிக ஜனங்களும் படத்தைக் கொண்டாடினார்கள்.
ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டு சிறந்த படம், சிறந்த இயக்குனர் உட்பட ஐந்து விருதுகள். இன்றைக்கும் அமெரிக்காவின் முக்கியமான படங்கள் என்று பட்டியலிட்டால் அந்தப் பட்டியலில் இந்தப் படம் இடம் பெற்றிருக்கிறது. படத்தை ஓரிரு முறைகள் பார்த்தவன் என்கிற முறையில் இந்தப் படம் பற்றியே ஒரு முழு வியாசம் தனியாக எழுதுமளவு அனுபவங்களும் எண்ணங்களும் தகவல்களும் கொட்டிக் கிடக்கின்றன. நிற்க. இந்த வியாசம் இந்தப் படம் பற்றியல்ல.
படத்துக்குப் பிறகான சம்பவங்கள் பற்றியே. இந்தப் படம் தந்த வெற்றியால் இயக்குநர் நவீன அமெரிக்க சினிமாவின் அடுத்த விடிவெள்ளி என்று வர்ஷிக்கப்பட்டார். அப்போது பிரபலமாக இருந்த, மிகப் பெரிய ஹாலிவுட் ஸ்டூடியோவான யுனைட்ட் ஆர்டிஸ்ட்ஸ், தங்களுடைய அடுத்த படத்தை அந்த இயக்குநரை வைத்து எடுக்க முடிவு செய்து அவரை அணுகினார்கள்.
அவர் வைத்தது ஒரே ஒரு நிபந்தனை. படப்பிடிப்பில் ஸ்டூடியோ தலையீடு இருக்கக் கூடாது. தனக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட வேண்டும் என்பது தான் அது. ஸ்டூடியோ நிர்வாகிகள் ஒப்புக் கொள்ள, ஒரு பிரம்மாண்ட பட்ஜெட் முடிவு செய்யப்பட்டு முழு கட்டுப்பாடும் இயக்குநர் கையில் கொடுக்கப்பட்டது.
அதற்குப் பின் நடந்தது தான் வரலாறு. ஷூட்டிங் நினைத்த போதெல்லாம் நிறுத்தி வைக்கப் பட்டது. இயக்குநர் ஸ்பாட்டுக்கு வந்து விட்டு தீவிர சிந்தனையில் அமர்ந்திருந்து விட்டு ஒன்றுமே எடுக்காமல் திரும்பிப் போன சம்பவங்களும் நடந்தது. ஸ்க்ரிப்டில் தான் எழுதினாற் போல் ஒரு மேகம் ஷாட்டுக்குள் வர வேண்டும் என்று அதற்காக இரண்டு நாட்கள் ஒன்றையுமே படமெடுக்காமல் காத்துக் கிடந்த சம்பவங்கள் எல்லாம் செய்திகளாகின.
ஏகப்பட்ட பேர் இயக்குநரின் இந்த மாதிரி நடவடிக்கைகளைப் பொறுக்க முடியாமல் பாதியிலேயே படத்திலிருந்து கழன்று கொண்டார்கள். படத்துக்காக போடப்பட்ட செட் ஒன்றில் ஒரு தெருவின் அகலம் தான் ஸ்க்ரிப்டில் எழுதியது போல் இல்லை என்பதற்காக, அதை மாற்றியமைத்து அட்ஜஸ்ட் செய்யாமல், மொத்த செட்டையும் கிழித்தெறிந்து விட்டு புது செட் நிர்மாணிக்கச் சொன்ன தகவல்களும் உண்டு. ஸ்டூடியோ ஆரம்பத்தில் கொடுத்த பட்ஜெட்டே அந்தக் காலகட்டப் படங்களுக்கு பிரம்மாண்டம். ஆனால் இங்கோ அதையெல்லாம் ஜெட் வேகத்தில் தாண்டிப் போய்க் கொண்டிருந்தது செலவுகள். பொறுத்துப் பார்த்த ஸ்டூடியோ நிர்வாகிகள் சீக்கிரம் படத்தை முடிக்கச் சொல்லி இயக்குநருக்கு அழுத்தம் கொடுக்கத் துவங்கினார்கள்.
ஒரு வழியாகப் படத்தை முடித்து ஸ்டூடியோ அதிகாரிகளுக்கு இயக்குநர் திரையிட்டுக் காட்டிய பர்ஸ்ட் காப்பியின் நீளம் கிட்டத் தட்ட ஐந்தரை மணி நேரங்கள். தயவு தாட்சண்யமே இல்லாமல் ஸ்டூடியோ அதிகாரிகள் படத்தை நிராகரித்தனர். ஒழுங்காக படத்தை வெளியிடுவதற்குத் தகுந்தாற் போல் மூன்று மணி நேரங்களாக எடிட் பண்ணச் சொல்லி உத்தரவு. அதற்காக ஒரு எடிட்டர் நியமிக்கப்பட்டார். அவருடனும் இயக்குநருக்கு ஏகப்பட்ட பிரச்னை. இது என் படைப்பு. இதிலிருந்து ஒரு காட்சியைக் கூட என் அனுமதி இல்லாமல் வெட்ட விட மாட்டேன் என்று ஏக ரகளை. எல்லாப் பிரச்னைகளையும் தாண்டி கடைசியில் மூன்றரை மணி நேரம் ஓடுகிறாற் போல் எடிட் செய்யப்பட்டு ஒரு வழியாக ஸ்டூடியோ நிர்வாகிகளால் ஏற்றுக் கொள்ளப் பட்டு படம் ரிலீஸ் செய்யப்பட்டது.
ப்ரிவ்யூ ஷோவிலேயே அதிர்ச்சி. பாதிப் படத்துக்கு மேல் பாதிப் பேரைக் காணவில்லை. படம் வெளியாகி ஓடத் துவங்கிய தியேட்டர்கள் காற்று வாங்கின. விமர்சகர்களும் திரை ஆர்வலர்களும் படத்தைக் கழுவியூற்றிக் காய்ச்சி எடுத்தனர். ஒரே வரியில் சொன்னால் படம் படுத்து விட்டது. இன்னும் சிலர் ஒரு படி மேலே போய் இயக்குநர் முதல் படத்துக்கு வாங்கிய ஆஸ்கர் அவருக்குச் சொந்தமானதே அல்ல. இல்லையென்றால் இவ்வளவு கண்றாவியாக ஒரு படத்தை எடுத்திருப்பாரா. அந்த விருதைத் திரும்ப பெற வேண்டும் என்கிற அளவுக்குப் பேசினார்கள்.
ஸ்டூடியோவுக்கு எதிர்பாராத, சமாளிக்க முடியாத அளவு நஷ்டம். கிட்டத் தட்ட திவால். மஞ்சள் நோட்டீஸ் கொடுக்கும் நிலைமை. இன்னொரு பெரிய ஸ்டூடியோவிடம் அடி மாட்டு ரேட்டுக்கு விலை போனது.
இந்தப் படத்தின் பிரம்மாண்டத் தோல்வி, ஹாலிவுட்டின் படமெடுக்கும் முறையையே மாற்றியமைத்தது. அது வரை இயக்குநர்களுக்குக் கட்டற்ற சுதந்திரம் வழங்கிக் கொண்டிருந்த முறை போய் முழுக்கட்டுப்பாடும் ஸ்டூடியோ வசம் வைத்துக் கொள்ளும் முறை வந்தது. இன்றளவும் அந்த முறை தான் பின்பற்றப் படுகிறது.
இதற்குப் பிறகு அந்த இயக்குநரின் சினிமா வாழ்க்கையே கேள்விக்குறி ஆகி விட்டது. பல வருஷங்களுக்குத் தலையெடுக்கவே முடியவில்லை. அதற்குப் பின் முயற்சி செய்து எடுத்த சில படங்களும் தடம் தெரியாமல் காணாமல் போய் விட்டன.
******************************************************************************************
இந்தத் தகவல்களெல்லாம் விக்கிபீடியாவில் துழாவினால் கிடைக்கக் கூடும். ஆனால் இந்த இரண்டு படங்களையுமே பார்த்த பின்பும் இந்த கதைக்குப் பின்னாலிருக்கும் கதைகளைப் படித்த பின்பும் எனக்குத் தோன்றியது. ஒரு மிகச் சிறந்த படைப்பாளியாக வந்திருக்க வேண்டிய ஒரு மனிதன் தன்னை திறமையாக சந்தைப்படுத்த தெரியாததாலும், சின்னச் சின்ன சமரசங்களுக்குக் கூட வளைந்து கொடுக்காததாலும் வாழ்க்கையைத் தொலைத்து விட்டான்.
உலகமே கொண்டாடிய முதல் படத்தை எடுத்தவனுக்கு தன் அடுத்த படத்தில் தன் முதல் படத்தையே முந்திக் காட்ட வேண்டும் என்கிற வெறி இருந்திருக்காதா? நிச்சயம் இருந்திருக்கும். எங்கேயோ.... எங்கேயோ ஒரு சின்ன சறுக்கல் அல்லது ஒரு சின்னப் பிடிவாதத்திலிருந்து துவங்கியிருக்கலாம் இது. தன் கலை மேலும் திறமை மேலும் அதீதக் காதலும் தன்னம்பிக்கையும் கொண்டிருப்பது கூட ஒரு கலைஞனை அழிவுக்குக் கொண்டு செல்லும் என்பதற்கான உதாரணமாக இந்தக் கலைஞனின் கதையைக் கொள்ளலாமா?
ஒரே படத்தில் புகழின் உச்சத்தையும் வெற்றியின் அபாரச் சுவையையும் கண்டு கொண்ட பின் , மீண்டும் ஒரே படத்தில் அதல பாதாளத்தில் வீழ்ந்து தலையெடுக்க முடியாமல் போனதோடு, தன் திறமையையே சந்தேகிக்கும் விமர்சனங்களை எதிர்கொண்ட போது அந்தக் கலைஞன் எப்படிப்பட்ட வலிகளை சுமந்திருப்பான்? ஒவ்வொரு முறை இந்தப் படங்களில் ஏதாவதொன்றைப் பார்க்கும் போதும் பல பல கேள்விகளும் புரிதல்களும் இயக்குநரின் எண்ண ஓட்டம் மீதான பிரமிப்பும் ஏற்பட்டபடியே இருக்கின்றன.
இரண்டாவது படத்தின் வரலாறு காணாத தோல்விக்குச் சில வருடங்கள் கழித்து ஒரு பேட்டியில் அந்தப் படத்தின் தோல்வி வாழ்க்கையை எப்படி பாதித்தது என்ற கேள்விக்கு அந்தக் கலைஞன் இப்படிப் பதில் சொன்னான்.
“It was really a great trauma, as everyone knows. Since then, I've been unable to make any movie that I've wanted to make. I've been making the best of what is available."
எவ்வளவு வலி மிகுந்த வார்த்தைகள்....!!!
******************************************************************************
சிறுகதைப் போட்டி.
ஒரு தலைப்பு அதற்கு மூன்று விதமான பார்வைகள். ஆம் மூன்று பேர் மூன்று பார்வைகள். சிறுகதையில் நம் பார்வை அந்த கோணத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும்.
தலைப்பு :
சமீபத்தில் பத்திரிகைகளில் வந்த செய்தி :
சமீபத்தில் பத்திரிகைகளில் வந்த செய்தி :
பாராளுமன்ற கேண்ட்டினில் நமது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சலுகை விலை உணவுகள். அதற்காக அரசாங்கம் வருடம் தோறும் ஒதுக்கும் பல கோடி ருபாய் பணம்.
மேலே குறிப்பிட்ட தலைப்பைக் கொண்டு மூன்று விதமான பார்வைகளில் நீங்கள் ஒரு பார்வை தேர்ந்தெடுத்து சிறுகதை எழுதி அனுப்புங்கள். ஒருவரே அனைத்து விதமான பார்வைகளிலும் சிறுகதை எழுதி அனுப்பலாம்.
பார்வை 1 : வேலைக்கு போகும் நடுத்தரவர்க்க பெண்மணியின் பார்வை
பார்வை 2 : கிராமத்தில் விவசாயம் செய்யும் நடுத்தர வயதுடைய மனிதனின் (சுமார் 45 வயது மதிக்கத்தக்க விவசாயி) பார்வை
பார்வை 3 : சமூகத்தின் ஏளனப் பார்வைக்கு மத்தியிலும் தன் அங்கீகாரத்திற்கு விடாது போராடும் ஒரு திருநங்கையின் பார்வை.
சிறுகதைகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 28/08/2015
சிறுகதைகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி :
பசுமை (புரட்சி) முயற்சி - சீ ராஜேந்திரன்
வாங்க மாடியில் தோட்டம் அமைப்போம்
எல்லோருக்கும் வணக்கமுங்க. இன்றைய காலகட்டங்களில் விவசாயம் என்பது அரிதாகிவிட்டது. விவாசய நிலங்களை இழந்து துயருவோர் எண்ணிக்கை வளர்ந்துகொண்டுதான் இருக்கிறது. விளைநிலங்களும் தனது நிலைமாறி இரசாயன உரங்களுக்கும் வேதியல் பூச்சிகொல்லிகளுக்கும் அடிமைப்பட்டு விளைவித்து கொண்டிகின்றன என்பது உண்மையே. நாமளும் விவசாயம் செய்யலாமே. “காணி நிலம் வேண்டும் அதில் நம் கைப்பட காய்கறி பயிரிட்டு பறித்துண்ண வேண்டும்” இதற்கு தானுங்க நமது மாடியில் தோட்டம்.
அட என்னங்க நீங்கள் கேக்கும் கேள்வி என் காதில் விழத்தான் செய்யுது ‘ஒண்ட வந்த பிடாரிய ஊர் பிடாரி ஓட்டுச்சாம் அந்த கதையாவுல்ல இருக்குன்னு”. இருக்குற நிலத்தை வித்துட்டு இங்க வந்து ஒதுங்குனா எப்படி விவசாயம் பண்ணுறது. இருக்கும் இடத்திலயும் விவசாயம் பண்ணலாமுங்க.. மாடி மற்றும் பால்கனியில் ஏன் வீட்டில் சூரிய ஒளி நன்றாக விழுமிடத்திலும்... அட இடம் கிடைச்சுருச்சு அப்புறம் என்ன ஆரம்பிக்க வேண்டியதுதானே. ஓ.. எப்படியா நமக்குத்தான் ஒண்ணும் தெரியாதேன்னு யோசனையா? கவலை வேண்டம். எனக்கு தெரிந்ததை இங்கே சொல்லுறேங்க.
தேவையான பொருட்களை பாப்போமா.
மண்ணு:
மண் என்றால் செம்மண் தான் வேண்டும் என்றில்லை வேறு மண்ணையும் பயன்படுத்தலாம். விவசாய நிலங்களில் உள்ள மண், மரங்களின் கீழே உள்ள மண் என நமக்கு பக்கத்துல என்ன மண்ணு கிடைக்குதோ பயன்படுத்தலாம். பூமியின் மேல் மட்டத்தில் ஒரு அடி ஆழத்தில் உள்ள மண்ணை முடிந்தவரை பயன்படுத்தலாம்.
மட்கக்கூடிய கழிவுகள் :
மரம் செடி என தாவரங்களின் கழிவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்போம். மரங்களில் இருந்து விழும் இலைகளை சேகரிப்போம். தேங்காய் மட்டை நார் கழிவு, காய்ந்த இலை தழைகள், காய்கறி கழிவுகள், பூஜை அறையின் பூக்கள், அருகிலுள்ள டீக்கடைகளில் கிடைக்கும் டீ, காபித் தூள், பழக்கடைகளில் கிடைக்கும் பழக்கழிவுகள் என நம்மால் சேகரிக்க இயன்றதை சேகரிக்கலாம்.
செடி வளர்க்கும் அடித்தளம்:
வீட்டில் சூரிய வெளிச்சம் கிடைக்கக்கூடிய எல்லா இடங்களையும் பயன்படுத்தலாம். அதற்காக நிரந்தரமான அடித்தளம் வேண்டும் அதாவது உறுதியான மண்ணாலான தொட்டிகள், சிமெண்ட் தொட்டிகள், பெயிண்ட் டப்பா போன்ற பிளாஸ்டிக் டப்பாக்கள். அவை இல்லையெனில் காய்கறி வளர்ப்பு பைகள், மட்காத மண் நிரப்பக்கூடிய எந்த பொருளை வேண்டுமென்றாலும் நாம் பயன்படுத்தலாம்.
பலகைகள் :
நம்முடைய காய்கறி வளர்க்கும் தொட்டி (அ) பைகளை நேரடியாக தரையில் வைக்காமல் தரைக்கும் நம் தொட்டிக்கும் இடையே ஒரு பொருளை வைக்க வேண்டும். மரப்பலகைகள், தேங்காய் மட்டைகள் இவை இல்லையெனில் செங்கல், தர்மா கோல் அட்டை போன்றவற்றை பயன்படுத்தலாம்.
கால்நடை கழிவுகள், தொழு உரம் அல்லது மண்புழு உரம்.
சரிங்க இதை எப்படி எவ்வாறு உபயோகப் படுத்தனும்னு பாக்கலாமா... வாங்க
சாண கரைசல (நாம வீட்டுக்கு வாசல் தெளிப்போமுல்லையா அந்த பக்குவம். இப்போ எங்க தெளிக்கிறோம்? வெறும் தண்ணிய தானே தெளிக்கிறோம்) நாம சேகரிச்ச மட்கக்கூடிய கழிவுகளைப் போட்டு ஒரு வாரத்திற்கு ஊற விடுங்க. அது பாட்டுக்கு ஊரிட்டு இருக்கட்டும். அப்போ அப்போ கொஞ்சம் கிண்டிவிடுங்க. அதுக்குள்ள மற்ற பொருளையெல்லாம் சேகரிங்க.
இப்போ மண் கலவைய பார்ப்போமா :
தேங்காய் மட்டை நார்கழிவு, மண்ணு, மண்புழு உரம் இதை 2:1:1 விகிதத்தில் ஒன்னா கலங்க. இப்போ நமக்கு தேவையான மண்ணு கெடச்சுருச்சு. நாம சாண கரைசல்ல ஊரவச்சுருக்கோமே மக்கிய இலை, அதையும் சேர்த்து கிளருங்க.
காய்கறி வளர்ப்பு பையில் மொதல்ல கொஞ்சம் தேங்காய் மட்டைய அடுக்குங்க. அதுக்கு மேல நாம கலந்து வச்சுருக்குற கலவைய போடுங்க.. அவ்ளோ தாங்க நமக்கு தேவையானது தயார். இனியென்ன பயிர் செய்ய வேண்டியது தானே...
அட என்னங்க சரி சரி... எப்படி நடணும் எப்படி தண்ணீர் விடுறதுன்னு தானே.. அதையும் பாக்கலாமா.. அவரை, வெண்டை போன்று கொஞ்சம் பெரிய விதைகளை 1 – 1½ இஞ்ச் ஆழத்தில் இடலாம். கத்தரி, தக்காளி, கீரை போன்ற சிறிய விதைகளை கொஞ்சம் கிளறி விட்டு தூவி விட்டு மூடி விட்டால் போதும். ½ இஞ்ச் அளவு (பிடி கரணை மாதிரி கிழங்கு) விதை வகைகளை இன்னும் ஆழத்தில் நட வேண்டும்.
3 – 4 இஞ்ச் அளவுள்ள விதைகளை விதைக்கும் போது மனக் கணக்கு வைத்து இன்னும் சற்று ஆழமாக விதைக்க வேண்டியது தான். தண்ணீர் அதிகம் விடவேண்டாம். மாலையில் ஒருமுறை கலையில் ஒருமுறை ஆரம்ப காலத்தில் தேவைங்க. அதுவும் வெயில் அதிகம் இருந்தால் மட்டும். மண் ஈரப்பதமாக இருந்தால் போதும். முதல் முறை முயற்சிப்பவர்கள் கீரையை வளர்க்கலாம். பின்னால் விருப்பபட்ட காய் கனிகளை வளர்க்கலாம். சும்மா தூக்கி எறியும் புதினா தண்டுகள், வெந்தயம் மல்லி விதை (இரண்டாக உடைத்து) தூவுங்க, அதுக்கு மேல கொஞ்சம் நாம் கலந்த கலவைய போடுங்க. அவ்வளவு தாங்க. உங்க வீட்டுலயும் தோட்டம் வந்துருச்சுல்ல.
பின் குறிப்பு :
தனி வீட்டில் வசிப்பவர்கள் தான் வீட்டின் மொட்டை மாடியில் தோட்டம் வைக்க முடியும் என்பதில்லை. நகரங்களில் அப்பார்ட்மெண்ட்டில் வசிப்போரும் அழகாக இதைச் செய்யலாம்.
நண்பர்கள் அப்பார்ட்மெண்ட்டில் வசிப்பவர்கள் எனில் தங்கள் குடியிருப்பில் உள்ள association நபர்களுடன் தொடர்பு கொண்டு எடுத்துப் பேசி இதைப் புரிய வைக்கலாம்.
அவ்வாறு செயல் படுத்துவதால் ‘விளையும்’ அனுகூலங்கள் அதிகமே. மொட்டை மாடி இடமும் அதிகம். ஆதலால் பல் வேறு வகை காய், கனிகள், கீரை வகைகள் எனப் பயிரிட முடியும். குடியுருப்பில் வசிப்போர் விளைச்சலின் போது காய் கனி வகைகளைப் பகிர்ந்து கொள்ள முடியும்.
செயற்கை உரம் இல்லை. இயற்கையான முறையில் பயிரிடப்படுவதால் தேக ஆரோக்கியத்திற்கும் உகந்தது.
முக்கியமாக விலை வாசி? நகர்ப்புறங்களில் கீரை – 1 கட்டு 20 ரூபாய், தக்காளி 1 கிலோ 30 ருபாய் மற்ற காய் வகைகள் கிலோ 4௦ முதல் 80 ரூபாய் என்னும் நிலையில் இது அனைவருக்கும் ஒரு ‘வரப்பிரசாதமே’
சிறிய அளவில் ஒரு வித்தியாசமான இயற்கையான முறையில் ஒரு ‘பசுமைப் புரட்சிக்கு’ நாமும் நம்மால் முடிந்த ‘விதையை’ விதைக்கலாம்.
நட்பு சூழ் உலகு – கமலி பன்னீர் செல்வம்
தாய் மகன் என்னும் நண்பர்கள்
மனிதர்கள் மிகவும் சுயநலமானவர்கள். என்ன அன்யோன்யமான உறவுகளிலும் நட்புகளிலும் சுயநலத்தின் சிறுபுள்ளி தெரிந்தோ தெரியாமலோ ஒளிந்தே இருக்கும். இந்த புள்ளியின் அளவு மிகவும் சிறியதாக இருக்கும் உறவு எது என்றால் அது பெரும்பாலும் தாய் மகன் உறவும், தந்தை மகள் உறவும் மட்டுமே.
தாய்க்கும் சேய்க்கும் இருக்கும் பிணைப்பு இயற்கையானது, மிருகங்களுக்கு கூட தம் குட்டி மீது அதீத பாசம் இருக்கும் என்று சொன்னாலும் தம் குட்டி இரை தேடும் காலம் வரை தான் அவற்றின் பாச பிணைப்பு. அதன்பின் அவரவர் வழி. ஆனால் தாய் மகன் பாச பிணைப்பு இறக்கும் வரை தொடரும் பந்தமாக தான் இருக்கிறது. அப்படி இருக்க அந்த உறவை அதீத அன்புக்குள்ளும், தியாகத்திற்குள்ளும் நுழைத்து, நம்மை தியாக செம்மலாக முன்னிறுத்தி கிட்டதட்ட ஒரு அறுக்க முடியா கை கால் விலங்காக அப்படியே அறுத்தாலும் மிகப்பெரும் குற்ற உணர்வுக்குள் தள்ளி... என்று ஒரு அழகான உறவை அதீத சிக்கலாக்குகிறோம் என்று தோன்றுகிறது.
அம்மா என்ற கிரீடத்தை எப்போதும் சுமந்து கொண்டிருக்காமல் குழந்தை வளர தொடங்கும்போது அவர்கள் உலகத்துக்குள் கொஞ்சம் பிரவேசித்து பார்த்தால் வாழ்வின் பல அற்புதமான தருணங்களை நாம் மீண்டும் ருசிக்க தொடங்குவோம். நான் அம்மா, அவன் விளையாடும் போது கண்டிப்பேன் என்று இல்லாமல் அவனுடன் சேர்ந்து விளையாட தொடங்க அவனுக்கு அம்மா என்ற உணர்வை தாண்டி அந்த உறவில் உள்ள தோழமையும் புரிய தொடங்கும். தாய்மையோ அம்மா என்ற உணர்வோ இந்த உலகுக்கு பெருமைக்குரியது என்பதை விட ஒரு குழந்தைக்கு மிக பாதுகாப்பு என்ற ரீதியில் அணுக இன்னும் இருவருக்குமிடையே உறவில் ஆழம் அதிகரிக்கும்.
குழந்தைகள் சிறுவயதில் இருக்கும்போதே நாம் அவர்களை நெருங்கி நட்பாக்கி கொண்டால் மட்டுமே அவர்களுடன் இறுதி வரை நட்பை தொடர முடியும். ஆரம்பத்தில் அதீத செல்லமும் கண்டிப்பும் காட்டிவிட்டு பின் அவனோடு நட்பை தொடர ஆசைப்பட்டால் ஏமாற்றமே மிஞ்சும். அதீத செல்லம் உங்களை ஒரு கற்பக விருட்சமாகவும் அதீத கண்டிப்பு உங்களை அவர்களின் உலகத்தில் இருந்து தூரவும் வைத்துவிட கூடும்.
அவர்கள் நம்மிடம் எல்லாம் பகிர சிறுவயதில் இருந்தே நாம் அவர்களிடம் எல்லாம் பகிர தொடங்கிவிட வேண்டும்.. வீட்டில் வரவு செலவு, நம் குடும்ப பழக்க வழக்கங்கள் இவை எல்லாம் அழகாக தினப்படி வாழ்க்கையில் சில அவர்களுக்கு சொல்லியும் சில அவர்களுக்கு புரிவது போல நாமும் நடந்து கொண்டாலே அவர்களுக்கு தானாக எதை செய்ய வேண்டும், எதை செய்ய கூடாது என்பது தெரிய தொடங்கிவிடும். என்ன ஒன்று அவர்கள் நல்ல பழக்க வழக்கங்களை கற்று கொள்ள நாமும் கொஞ்சம் நல்ல பழக்க வழக்கங்களை கடைப்பிடிக்க முயற்சிக்க வேண்டும்.
மேலே சொன்னவை அனைத்தும் என் சொந்த அனுபவமே. என் பிள்ளைகளுக்கு நான் நல்ல தோழியாக இருக்க வேண்டும் என்று அவர்கள் சிறு வயதில் இருக்கும்போதே முடிவு செய்து இன்று வரை அப்படியே தொடர்கிறேன். எந்த ஒரு விஷயமும் தயங்காமல் என்னிடம் பகிரும் அளவு தோழமையை வளர்த்து கொண்டிருக்கிறேன். அவர்களுடன் கேம்ஸ் விளையாட சண்டை இடுவேன், போட்டிகளில் விட்டு கொடுக்காமல் விளையாடுவோம். என் நண்பர்கள் பற்றி என் பிள்ளைகளிடம் என்னால் பகிர்ந்து கொள்ள முடிந்திருக்கிறது. அவர்களின் தோழிகள், நண்பர்கள் பற்றி சொல்லி இருக்கிறர்கள். இன்று எங்களுக்குள் அம்மா பிள்ளை சென்டிமென்ட்டை விட நல்ல தோழமை தான் அதிகம் இருக்கிறது.
அம்மா என்ற கிரீடத்தை சுமப்பது பெருமையாக இருந்தாலும் கொஞ்சம் கனமாக இருக்கிறது. அது என் பிள்ளை துவண்டு என் தோளில் சாயும் போது அவனுக்கு இடைஞ்சலாக இருக்கிறது. நண்பனாக அவனை தேற்றவே எனக்கு அதிக ஆசை என்பதால் கிரீடம் உலகுக்கு மட்டுமே.
சிறுகதை – நிர்மலா கணேஷ்
அம்மா வீட்டு வேப்ப மரம்
அது ஒரு விசுவாமில்லா இரவாகவே தோன்றியது திவ்யாவுக்கு. கொஞ்சம் மனசு விட்டு அழுதால் தேவலை ஆனால் அழுவதற்கு அப்படி ஒன்றும் ஒத்துக்கொள்ள வில்லை. ஒரு பெரும் மூச்சின் மூலம் மட்டும் அழுகையை அடக்கி விடுவது என்பது சிரமம் தான் என்றாலும் வெறும் அழுகையை வெளிப்படுத்தி விடுவதை விட அப்பா அம்மாவிடம் சொல்லி அந்த "வேப்பமரத்துக்கு" ஒரு வாழ்வு கொடுத்தால் பரவாயில்லை என்றே நினைத்தாள்.
"வேப்பமரம்" என்று நினைத்தவுடன் ஏனோ பழைய நாட்கள் கண் முன்னே வந்தது.
திவ்யாவுக்கு அப்போது எட்டு வயது. முதல் முதலாக சொந்த வீடு கட்ட ஆரம்பித்து இருந்தார்கள். ஒரு விடுமுறை நாளன்று வீடு கட்டும் இடத்துக்கு சென்ற போது நிறைய முட்செடிகளுக்கு நடுவில் அது கண்ணில் பட்டது.
திவ்யா "அப்பா இங்க பாருங்க ஒரு வேப்பமரம் வருது"
ஆயா “அட ஆமா வீட்டுல வேப்பமரம் இருந்தா நல்லது. மொதமொதல்ல புள்ள கண்ணுக்கு பற்றுக்கு வெட்டி விட்ராதே"
ஆயா சொன்ன போது சாதாரணமாகவே தெரிஞ்சுது. ஆனா அதன் பின் ஒரு நாள் எதேச்சையா மரத்த (செடிய ) பிடிச்சு விளையாண்டுட்டு இருந்தப்போ ஒரு பச்ச பாம்பு அதன் கிளைல இருந்தத நான் கவனிக்கல. அத தொட போனப்ப செடி கொஞ்சம் அசைஞ்சு எதையோ உணர்த்தியது போல நினைப்பு. பாத்தா பாம்பு. ஐயோ செடி மட்டும் அசையலேன்னா என்ன ஆகி இருக்கும் அப்ப தான் அது எனக்காகவே வளரப் போற மரம் மாதிரி இருந்துச்சு.
அப்புறம் நாங்களும் வளர வளர அந்த செடியும் வளர்ந்து மரமாகி வீட்டுக்கு ஒரு அடையாளமாவே மாறிப் போச்சு.
தெரு முக்குல வீடு. வீட்டு ஓரத்துல இருந்த அந்த மரத்துக்கு கீழ நிறைய கதைகள் காணலாம்.
மதியம் சாப்பாட்டு நேரம் எப்பவுமே ஒரு பத்து பேர் இருப்பாங்க. அதோட நிழலுல நிறைய கேரக்டர்கள் வந்து போகும். சண்டை காரங்க, தோழமைகளுக்காக காத்திருப்பவங்க, பொழுது போகாம வெட்டி பேச்சு பேசறவங்க, தன்னுடைய ஜோடிக்காக காத்திருக்கும் இளசுகள்னு அந்த மரத்துக்கு கீழ இருக்கும் கல்லு எப்பவும் யாராயாது சுமந்து கொண்டே இருக்கும்.
பள்ளி கூட லீவுல அந்த மரத்துக் கீழ கல்லு மேல உக்காந்து வீதிய (சைட்) பாக்கறதுல அப்படி ஒரு சந்தோசம் இருக்கும்.
மறுபடியும் வீடு கட்ட வேண்டி ஆசையா வளத்த மரத்த வெட்ட வேண்டிய சூழல் வந்துடுச்சு. ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. அந்த மரம் ஞாபகம் காலம் முழுக்க இருக்கணும்னு நினைச்சேன் அதான் இப்படி அழுகை.
ஒரு வழியா அப்பா அம்மாகிட்ட சொல்லி, அத வெட்டி வீட்டுக்கு ஜன்னல் செஞ்சுட்டோம்.
இப்ப அந்த ஜன்னல பாத்தா மனசுல அந்த காத்து வீசற மாறி இருக்கு.
கொஞ்ச வருஷம் கழிச்சு ::::
கல்யாணத்துக்கு அப்புறம் மாமியார் வீட்ல ஒரு கொய்யா மரம் இருந்துச்சு. அது நான் வந்தப்புறம் தான் காய்க்கவே ஆரம்பிச்சுது. அந்த பழங்களை பெரும்பாலும் நானே சாப்பிட்டு ரெண்டு பசங்களும் வயித்துல வளந்தாங்க. அதையும் வெட்ட வேண்டிய சூழல் வந்துச்சு. ஆனா வேப்பமர அளவுக்கு துக்கம் வரல.
ஒரு வேள இது தா பொறந்த (மர) வீட்டுப் பாசமா இருக்குமோ!!!
இப்பலாம் எங்கேயும் வீட்ல இப்டி பெரிய வேர் விடுற மரம் நடுவதுமில்லை. அந்த மரங்களின் பாசம் மனதில் வேர் விடுவதுமில்லை.
என்றும் சுயத்துடன் – பால கணேசன்
பார்வைகள் பலவிதம்
ஒரு ஜோடி செருப்பு என்று ஒரு சிறுகதை. ஒரு நடுத்தரக் குடும்பத்து இளம்பெண் பேருந்து நிறுத்தத்தில் வேலைக்கு செல்வதற்காக நின்று கொண்டிருக்கும் தருணத்தில் அந்த நிறுத்தத்தின் சுவர் ஓரத்தில் இடது கால் செருப்பு மட்டும் சற்றே வார் அறுந்த ஒரு ஜோடி செருப்பை காண்கிறாள். அது ஒரு பெண் அணியத்தக்கது. விலை உயர்ந்த செருப்பு அது என்பது பார்த்தவுடனே புரிகிறது. மனதிற்குள் ஒரு கோபம். பணக்காரி ஒருத்தி இலேசாக வார் அறுந்ததிற்கே தூக்கி எறிந்துவிட்ட செருப்பு அது என கோபம் கொள்கிறாள். தன் கால்களில் இருக்கும் ஊக்கு குத்தப்பட்ட, ஏகப்பட்ட முறை பஞ்சர் ஆன செருப்பை பார்த்ததும் இன்னும் கோபம் தலைக்கேறுகிறது. சாயங்காலம் வரை அந்த கோபம் தணியவில்லை. தன் தந்தையிடம் இந்த விஷயத்தை சொல்லி ஆறுதல் தேடலாம் என்கிற நோக்கோடு வீட்டுக்குள் நுழைகிறாள். தந்தை தாயிடம் சொல்லிக்கொண்டிருக்கிறார்...
"காலையில ஏழரை மணிவாக்குல தடியனுங்க ஒரு பொண்ணை கார்ல பலவந்தமா இழுத்துக்கிட்டு போயிருக்கானுங்க. அந்த பொண்ணு ரொம்ப போராடி இருக்கா. சம்பவம் எங்க நடந்தது தெரியுமோ? நம்ம பொண்ணு தெனமும் பஸ் ஏறுற அதே பஸ் ஸ்டாப்புல. காலம் கெட்டுப்போச்சி கோத.. அவளையும் பத்திரமா இருக்க சொல்லணும்."
அந்த செருப்பு அங்கே கிடந்ததற்கான காரணம் அவளுக்கு புரியத் தொடங்கியது.
பட்டுக்கோட்டை பிரபாகர் எழுதிய இந்த சிறுகதை எனக்கு ஆயுசுக்கும் மறக்காது. எல்லா நன்மைக்கும், தீமைக்கும் பலநூறு கோணங்கள் உண்டு. "அந்த ஓநாயோட பார்வையில இருந்து பார்த்தா நியாயமா தெரியலாம்." என்கிற கமலின் ஹேராம் பட வசனம்தான் நினைவுக்கு வருகிறது. இது ஏன் அப்படி என்கிற சிந்தனையின் விளைவே இந்த சிறு கட்டுரை.
ஐந்துவிரலும் ஒன்றாக இருப்பதில்லை. எளிமையான உதாரணம். ஆனால் ஐந்துமே ஒரு கையில்தான் இருக்கிறது... இல்லையா? இதுதான் சூட்சுமம்.
மனிதனின் பிறப்பிடம், அவன் வாழும் சூழ்நிலை, அவனை சுற்றி இருக்கும் மனிதர்கள், அவன் கற்கும் கல்வி, அவன் பார்க்கும் தொழில் என பலதரப்பட்ட காரணிகள் ஒரு தனிப்பட்ட மனிதனின் சிந்தனையில் புகுந்து அவனின் இயல்பான எண்ணங்களையே மாற்றும் வல்லமையை கொண்டிருக்கின்றன. இந்த சிந்தனை பல்வேறான விளைவுகளை இறுதியில் அவன் பிறந்த இடத்திற்கே பதிலுக்கு தருகின்றன. முதலில் நமக்கு ஒரு சம்பவத்தை சொல்பவரின் கண்களும் எண்ணமுமே நம் கண்கள் மற்றும் எண்ணமுமாக மாறிவிடுகின்றன. ஒரு மனிதனை நேசிப்பதற்கும், வெறுப்பதற்கும் இதுவே காரணமாகவும் அமைந்துவிடுகின்றன. எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும் என்றெல்லாம் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பே சொல்லப்பட்டுவிட்டாலும் கூட அதனால் இன்றும் நிகழ்ந்ததாய் தெரியவில்லை.
தலைமுறை இடைவெளியும், அடிப்படை வசதிகளும் ஒவ்வொரு மனிதனின் எண்ணத்திலும் முக்கியப்பங்கு வகிக்கிறது. ஆண் பெண் நட்பு சாத்தியமாய் இருக்கும் காலகட்டத்தில் ஒரு பிற்போக்கு ஆசாமியோ அல்லது வயதில் மூப்படைந்தவரோ அதை பார்க்கும் பார்வை வேறுமாதிரி இருக்கும். பல பிரச்சினைகளுக்கும் கூட காரணமாய் அமையும். அதேபோல் அடிப்படை வசதிகள் கூட கிடைக்காத ஒருவன் ஒரு சம்பவத்தைப் பார்க்கும் விதமும், எல்லாம் கிடைக்கப்பெற்ற ஒருவன் அதேவிஷயத்தை பார்ப்பதற்கும் அதிக வேறுபாடு உண்டு. இதில் இருவரது பார்வையுமே தவறாக இருக்ககூடிய வாய்ப்புகளும் நிறைய உண்டு. ஆனால் அந்த இடத்தில் பெரும்பான்மை எந்தப்பக்கம் இருக்கிறதோ அல்லது எந்தப்பக்கம் பலம் வாய்ந்ததோ அந்தப் பக்கத்திற்கே வெற்றியும் கிடைக்கிறது. அவர்கள் பார்வையே நியாயம் என்றும் நிலைநிறுத்தப்படுகிறது.
அந்தந்த நேரத்து உணர்ச்சிகளுக்கும் இந்த பார்வை தீர்மானத்தில் முக்கிய பங்கு உண்டு. நம் உள்மனம் வருத்தத்தில் தோய்ந்து இருக்கும்பொழுதில் காணும் யாவும் நம் வெறுப்புக்கு உரியதாய் தோன்றும்.
கோபத்தில் கனன்றுகொண்டு இருக்கும் தருணத்தில் அந்த சம்பவத்தையே உன் கோபம் நாசமாக்கிவிடும்.
ஒரு குழந்தையோடு விளையாடிக்கொண்டிருக்கையில் நீ பார்க்கும் சம்பவம் அந்த குழந்தையை பாதிக்கக்கூடாது என்கிற எண்ணத்தை முதலில் விதைத்து அதற்கேற்றவாறு அங்கே உன்னை பேசவோ அல்லது விளைவுகள் புரியவோ வைக்கும். முழுக்க முழுக்க மகிழ்ச்சியில் திளைத்திருக்கும் நேரத்தில் எல்லா சம்பவமும் எளிமையானதாகவே தோன்றும்.
இவையெல்லாம் ஒரே மனிதனின் பல்வேறு உணர்ச்சிகளின் போது நிகழ்வது. இதுவே இந்த ஒவ்வொரு உணர்ச்சியும் ஒவ்வொரு தனிப்பட்ட மனிதனிடம் ஒரேநேரத்தில் இருக்கும் தருணத்தில் நடக்கும் சம்பவத்தை எப்படி அவர்கள் பார்ப்பார்கள்? எப்படியெல்லாம் விளக்குவார்கள்? எப்படியெல்லாம் எதிர்வினை புரிவார்கள்? இதுதான் சூட்சமம்.
சினிமாவையே எடுத்துக்கொள்வோம். சிலருக்கு சினிமா வெறும் பொழுதுபோக்கு. அதைப்பார்ப்பதோடு சரி. அதனால் அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை.
இன்னும் சிலருக்கு அது மூன்றுவேளை சாப்பாடு போல. அவர்களின் அந்த நாளைய மனநிலையை அவர்கள் அன்று பார்க்கும் சினிமாதான் முடிவுசெய்யும்.
இன்னும் சிலருக்கு சினிமா சமூகத்தை கெடுக்கவந்த ஒரு சாத்தான். எல்லா பிரச்சினைகளும் சினிமாவில் இருந்தே தொடங்குவதாக வாதிப்பார்கள்.
இன்னும் சிலருக்கு சினிமா ஒரு அறிவுக்களஞ்சியம். என் நண்பர் ஒருவர் சினிமா பார்த்தே கற்றுக்கொண்ட விஷயங்கள் ஏராளம். உலகை பயமில்லாமல் எதிர்கொள்ள சினிமா அவருக்கு உதவியதாக சொல்வார்.
அந்த ஒரு ஜோடி செருப்பும், சினிமாவும் அங்கேயேதான் இருக்கிறது.
மனிதர்கள் தினமும் அதை கடந்து போகிறார்கள்.
**************************************************************************************
நண்பர்கள் தங்களது படைப்புகளை நம் அகல் மின்னிதழுக்கு அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி :
MP’s கிச்சன் ஸ்பெஷல்
உருளைக் கிழங்கு ஹல்வா
உருளைக்கிழங்கைக் கொண்டு பல்வேறு விதமான உணவுக்கு குறிப்புகள் (காரம்) இருக்க சற்று வித்தியாசமாய் ஒரு இனிப்பு பதார்த்தம்.
தேவையான பொருட்கள் :
1 கப் - வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு
3 டேபிள்ஸ்பூன் - நெய்
1/2 கப் - பால்
1/2 to 3/4 கப் - சர்க்கரை
ஒரு சிட்டிகை - ஏலப்பொடி
ஒரு சிட்டிகை - கேசரி கலர்
முந்திரிப்பருப்பு அலங்கரிக்க
குக்கர் அல்லது மைக்ரோவேவ் அவனில் உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்துக்கொள்ளவும். இது நன்றாக கெட்டியான பதமாக இருத்தல் அவசியம். அதனால் வேக வைக்கும் போது தண்ணீர் சேர்ப்பதை தவிர்த்து விடவும்.
ஒரு வாணலியில் நெய் சேர்த்து முந்திரிப்பருப்பை பொன்னிறமாக வறுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
நெய்யில் வேகவைத்த உருளைக்கிழங்கை நன்றாக வதக்கி, 5-8 நிமிடங்கள் வரை கிளறி விடவும். பிறகு பாலை சேர்த்து, பால் ஒரு கொதி வந்ததும் சர்க்கரை மற்றும் கேசரி கலரை சேர்க்கவும். நன்றாக கிளறவும். அல்வா வாணலியில் ஒட்டாமல் வரும் வரை கிளறி, அடுப்பை அணைத்து விடவும். ஏலப்பொடி மற்றும் வறுத்து வைத்துள்ள முந்திரியை சேர்த்தால் சுவையான உருளைக் கிழங்கு ஹல்வா தயார்.
ஓவர் டூ காத்தவராயன்
கண்ணாடி முன் நின்று கையையும் காலையும் ஆட்டிக் கொண்டிருந்தார் காத்தவராயன். கன்னம் கேப்டன் போல் துடித்துக் கொண்டிருந்தது. கண்கள் சிவந்திருந்தன. ஆனால் வாய் மட்டும் எக்கச்சக்கமாய் சிரித்தபடி எதையோ பேசிக் கொண்டிருந்தது.
என்னவோ ஏதோ என்று பயந்து போன நான் அவரைத் தாங்கிப் பிடிப்பதற்காக ஓடீப் போனேன். சட்டென்று திரும்பி என்னை ஒரு புழுவைப் போல பார்த்தவர், “என்ன” என்று பார்வையாலேயே கேட்டார்.
“குருவே. ஆர் யு ஆல்ரைட்? என்ன பிரச்னை?” என்றேன்.
உதட்டை ஒரு மாதிரி கொனஷ்டையாய் சுளித்தார் ஒரு பக்கமாய். ஏளனச் சிரிப்பாம்.
“என்னைத் தயார்படுத்திக் கொண்டிருக்கிறேன் தம்பி”
“எதுக்கு?”
“எனக்கு ஒரு திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது தம்பி” என்றார் என்னைப் பார்க்காமல் கண்ணாடியைப் பார்த்து சிவாஜி மாதிரி புருவத்தைத் தூக்கியபடி.
நான் ஜெர்க் அடித்தை கண்டு கொள்ளாமல் புருவத்தை வளைத்து வளைத்துப் பார்த்தபடியே இருந்தார்.
“ஜெயம் ரவி மாதிரி, விக்ராந்த் மாதிரி வர வாழ்த்துக்கள் குருவே” என்றேன் மனசைத் தேற்றிக் கொண்டு.
“இவர்களெல்லாம் யார்?” என்றார்.
“இவங்கள்லாம் தமிழ் சினிமா நடிகர்கள் குருவே” என்றேன்.
மீண்டும் என்னை டீக்கடையில் கழுவாத கிளாசைப் பார்ப்பது போல் பார்த்தவர் “சொல்வது தான் சொல்கிறாய். ஒரு புழக்கோவ் போல என்றோ ஒரு ங்க்கிசிபார்மன் போல என்றோ ரய்ஸ் பத்தாய்ஸ் போல என்றோ சொல்லலாமல்லவா” என்றார்.
“இதெல்லாம் எந்த ஓட்டல்ல கிடைக்கும்?”
முறைத்தவர், “இதெல்லாம் உலகின் உன்னத நடிகர்கள் பெயர்கள். லத்தீன் அமெரிக்க கலைஞர்கள். உனக்கெங்கே தெரியப் போகிறது” என்றார்.
“சரி அத விடுங்க குருவே. என்ன படம்? யார் படம்? விவரம் சொல்லுங்க” என்று பேச்சை மாற்றினேன்.
“புதிய இயக்குநர். அவரிடம் ஒரு தீ தெரிகிறது. எனக்கு சிறிய வேடம் தான். ஐந்து நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு. ஆனால் மிகுந்த முக்கியத்துவம் உள்ள பாத்திரம்” என்றார்.
“எங்கே ஷூட்டிங்கு? என்ன மேட்டர்?” என்றேன்.
“இருளில் நடக்கும் விஷயங்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வரும் போராளிகளின் கதை தம்பி. அதனால் பெரும்பாலான காட்சிகள் இரவில் தான் எடுக்கப்படுமாம். அதனால் இரவில் மட்டுமே படப்பிடிப்பு. மொத்தப் பணத்தையும் முதல் நாளே கொடுத்து விடுவார்களாம்” என்றார்.
“லேசாக சந்தேகம் தோன்ற, கூட யார் நடிக்கிறாங்க குருவே?” என்றேன்.
உடனே கண்கள் மினுக் மினுக் என்று எல் ஈ டி பல்பு போல் மின்ன “பெண் போராளியாக ரவா ஸ்ரீ என்கிற நடிகை நடிக்கிறாராம். மிகுந்த திறமையுள்ளவராம். நானும் அவரும் சேர்ந்து ஒரு புரட்சிப் பாடல் காட்சியில் தோன்றுகிறோம்” என்றார் நெஞ்சை நிமிர்த்தி.
குபுக்கென்று சிரித்த என்னைப் பார்த்து “என்ன” என்பது போல் பார்த்தார்.
அந்த ரவாஸ்ரீ பதினோரு மணிக் காட்சிப் படங்களின் புகழ் பெற்ற நடிகை என்கிற உண்மையை சொல்லாமல் பொங்கிப் பொங்கி வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு “வாழ்த்துக்கள் குருவே” என்று மனசார வாழ்த்தி விட்டு குருவின் பாதம் பணிந்து வெளியேறினேன்.
சற்று நேரம் கழித்து பார்க்கும் போது சட்டையைக் கழற்றி விட்டு கண்ணாடி முன் நின்று நெஞ்செலும்பை முறுக்கி முஷ்டியை மடக்கிக் கொண்டிருந்தார்.
VV CARRIERS
Always Customer Centric
The Firm’s specialization is transportation of Full Truck Loads, ODC consignments and operations through Multi-modal services. We have a fleet of 20 trucks mounted with Containers which operate for transportation of high-value cargo.
We understands customer’s specific requirements and suggests innovative and tailor made solutions as the core team has the complete know-how and expertise to move goods of unconventional nature, goods that are required special care and attention.
- Professionally managed organisation
- Robust Infrastructure
- We are always ready to provide service for long periods with well established Companies
- We can mobilize our vehicles in any part of the Country
- We can provide any number of vehicles as per requirement, with skilled Drivers
- 20 own trucks mounted with containers & 200 attached trucks
- Drivers are provided with mobile phones
- Capability of handling any volumes and heavy machinery
- Providing relocation services (Home/Office) to all over country.
We are waiting for an opportunity to provide the best service.
Please communicate us:
VV Carriers
Old No. 106- B, New No. 219,
BMF Complex, Angappa Naicken Street,
Chennai – 600 001
Phone: 044 42032300
அயல் தேசத் தேர்தல் களம் – இலங்கையிலிருந்து தர்ஷனா
என்னதான் இலங்கையின் முன்னாள் அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சே சிரிப்பது போல் வெளியே காட்டிக் கொண்டாலும் தோல்வி தந்த ‘சவக்களை’ அவர் முகத்தில் அப்பட்டமாகவே தெரிகிறது.
ஓட்டுப்போட்டவர்களை ஓட்டாண்டிகளாக்கி அபிவிருத்தி என்கிற போர்வையில் அபரிதமான சுரண்டல்களைச் செய்கின்ற குலத் தொழிலாம் அரசியலுக்கு இவர் புதியவரல்லர். தமிழ் மக்களிடையேயான பிரச்சினைகளை அரசு என்கிற முறையில் தேசிய ரீதியில் அணுகி நியாயப்பூர்வமான தீர்வுகளைத் தருவேன் என்று பலமுறை வாக்குறுதிகளை அளித்துவிட்டு நாட்டிற்குள் நிலவும் நான்மதங்களையும், இரு மொழிகளையும், பேதங்களை தொடர்ந்து வைத்திருக்கும் கருவிகளாக மட்டுமே பயன்படுத்திக் கடைசிவரை தமிழருக்கான எந்தவொரு தீர்வையும் முன்வைக்காமல் நயவஞ்சகமான முறையில் ஏமாற்றும் வித்தையை இவர் நன்கறிவார். தமிழர்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வை முன்வைப்பது ஒருபுறம் இருக்கட்டும். தீர்வை எட்டுவதற்கான ஆரம்பப்படிகளை நோக்கியேனும் அசையத்தானும் இடமளிக்கவில்லை. மிக நீண்ட காலமாக பகிரங்கமாகவே அவர் இந்த வஞ்சனையை செய்து வந்தார். இறுதிப் போரை நாம் தான் முடிவுக்கு கொண்டு வந்தோம் எனக் கூறிக் கொண்டு தேசத்தின் காவலர்களாகத் தம்மை நாமகரணம் சூட்டிக் கொண்டவர்கள், மிகவும் அசிங்கமான முறையில் சகிக்க முடியாதவாறு இனத்துக்குள் இனமாக ஆழத்துக்குள் ஒடுக்கப்பட்ட ஓரினம் தன்னை வற்புறுத்தப்பட்ட அரசியல் சிந்தனை, பிரதிமைகளுக்குள் அடக்கிவிடலாம் எனத் தொடர்ச்சியாக கனவு கண்டு வந்தனர். ஆனாலும் ஒரு கட்டத்தில் விழிப்படைந்த இந்த தேசத்தின் புதல்வர்கள் இனப்பாகுபாடுகளைக் களைந்து, மொழி பேதங்களையும் கடந்து சுரண்டலும் அநீதியும் மிகுந்த சமுதாயத்தை ஒழிக்கவும், புதிய ஒளிமிக்க சமுதாயத்தை தோற்றுவிக்கவும், இன்றைய பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் நாளைய நல்வாழ்விற்கு பலமான உத்திரவாதம் அளிக்கவும் மேலும் ஊழல் செய்வோரைக் கடுமையாக தண்டிக்கும் சட்டங்களுக்கு அழுத்தமும் அங்கீகாரமும் அளிக்கவே கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய அதிபர் திரு. மைத்திரி பால சிறிசேனாவுக்கு ஆதரவு வழங்கினர் என்பதனை நாம் வெளியரங்கமாகப் புரிந்து கொள்ள முடியும்.
இப்போது மீண்டும் ஒரு தேர்தல் :
திடுக்கிடும் திருப்பங்களாலும் அடுத்து என்ன நிகழுமோ என்பதை எதிர்வு கூறவியலாத அரசியல் நிலைமைகளாலும் உலக அரங்கில் மிகுந்த எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ள இத்தேர்தலில் இம்முறை மக்களில் வாக்குப்பதிவு வீதம் இன்னமும் கணிசமாக அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமதர்ம சமுதாயம் மலர வன்முறை தேவையில்லை. அனைவருக்கும் கல்வியும் உழைப்புமே போதுமானது என்கிற கர்மவீரர் காமராஜரின் கூற்றை பொய்ப்பிக்கும் விதமாக இலங்கைத் தேர்தலில் புலிப் புராணங்களையும், போர் வெற்றிகளையும் காட்டி பீரங்கிப் பரப்புரைகளுடன் களமிறங்கியிருக்கிறது மகிந்தவின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி. மக்கள் வரிப்பணத்தை கொள்ளையடித்து சொகுசாய் பவனி வந்த ஊழல் பெருச்சாளிகளை வீட்டுக்கு அனுப்பும் நோக்கோடு மக்களின் ஆணையைக் கோரி களமிறங்கியிருக்கிறது நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி. இதே சமயம் செப்டம்பர் மாதம் வெளியாக இருக்கும் இலங்கைக்கு எதிரான போர் குற்ற விசாரணை அறிக்கையை முழுமையாக நடைமுறைப் படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதுடன் தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கு திம்புக் கோட்பாடுகளின் அடிப்படையில் தீர்வு அமைய வேண்டும் என்பதை முன்னிறுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இலங்கையில் பிரத்தியேகமாக வட கிழக்கு மாகாணங்களில் போட்டியிடவுள்ளது.
கடந்த 26 ஆம் திகதி நள்ளிரவில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, நாடாளுமன்றப் பொதுத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகியது. எதிர்பார்த்ததைப் போலவே இம்முறையும் கட்சித் தாவல்கள், வாக்குவாதங்கள் என்பன ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் ஐக்கிய தேசியக்கட்சிகளுக்கிடையில் பரஸ்பரம் நிகழ்ந்து கொண்டுதானிருக்கின்றன. அதிலும் சு.கவின் தலைமைப் பதவி தொடர்பிலான சர்ச்சை இன்னமும் தீர்ந்தபாடில்லை.
ஏற்கனவே ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனா சுதந்திரக்கட்சியின் தலைவராக இருப்பது அக்கட்சியின் பெரும்பாலானவர்களுக்கு (மகிந்த விசுவாசிகளுக்கு) உடன்பாடில்லை. சொல்லப்போனால் அவரைக் கட்சியின் தலைவர் என்ற ரீதியிலின்றி ஜனாதிபதி என்றளவில்தான் அவரை நடிப்பும் நாடகமுமாக மதித்து வந்தனர். இப்படியானதொரு சமயத்தில் தான் மைத்திரி பால சிறிசேனா பொது மக்களுக்கு ஆற்றிய உரை சு.க மத்தியில் பெரும் புயலையே கிளப்பிவிட்டிருக்கிறது. ஊழல் பேர்வழியான மகிந்தவை தேர்தலில் போட்டியிட வைப்பதற்கு மைத்திரிக்கு சிறிதளவும் விருப்பம் இல்லை. ஏனினில் தவறியும் கூட மகிந்த பிரதமரானால் தனக்கு என்ன கதி நேரும் என்பதை அவர் நன்கறிவார். எனவே அவர் வெளிப்படையாக, தான் மகிந்தவிற்கு வேட்புமனு வழங்க சம்மதித்திருக்கவில்லையென்றும், அது தன்னை மீறி கட்சியினர் செய்து கொண்ட முடிவு என்றும் கூறியதைத் தொடர்ந்து சு.கவினர் மைத்திரிக்கு எதிராக கொதித்தெழுந்துள்ளனர். சு.கவின் தலைவர், கட்சியின் தர்மத்திற்கு முரணாக ஐ.தே.கவுக்கு மறைமுக ஆதரவளிப்பதால் அவர் கட்சித் தலைமைப் பொறுப்பிலிருந்து விலக வேண்டும் என்றும் கோஷங்கள் வலுப்பெற்றிருக்கின்றன. இதுவரை காலமும் கடந்த 1௦௦ நாள் தேசிய அரசின் அமைச்சர்களாகப் பதவி வகித்த சு.கவின் முக்கிய உறுப்பினர்கள் தமது அமைச்சுப் பொறுப்புகளைத் துறந்துள்ளனர். மைத்திரியும் கட்சியின் தலைமைப் பதவியை தூக்கியெறிய சித்தமாக உள்ளார் என்பது தெரிகிறது. இருந்தும் அவ்வாறு செய்தால் அது மகிந்த மீளவும் தலையெடுக்க வழியமைக்கும் என்பதால் புயலுக்கு முன்னுள்ள அமைதியைப் போல மெளனமாக உள்ளார்.
அதேவேளை மைத்திரி தனது உரையில் மகிந்தவின் நயவஞ்சக சதித்திட்டம் ஒன்றையும் அம்பலப்படுத்தியுள்ளார். அதாவது நாடாளுமன்றத்தில் ஏற்கனவே பெரும்பான்மையைக் கொண்டுள்ள ஐ.ம.சு.கூவின் உறுப்பினர்களின் ஆதரவோடு இடைக்காலத் தேசிய அரசின் பிரதமர் ரணிலுக்கெதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்து நிறைவேற்றுவதன் மூலம் அவரை அப்பதவியிலிருந்து அகற்றுவதோடு சு.கவின் தேசியப்பட்டியல் எம்.பி ஒருவரைப் பதவி விலகச் செய்து அந்த இடத்தில் மகிந்தவை நியமித்து அவரையே பின்பு பிரதமர் ஆக்குவது என்பதே அந்த திட்டமாகும். அதனால்தான் ரணிலைப் பாதுகாக்கவே நாடாளுமன்றத்தைக் கலைத்ததாகவும் கூறித் தனது உரைமூலம் மகிந்தவுக்கு சாட்டையடி வழங்கியுள்ளார். இது மகிந்த தரப்புக்கு பெருத்த வீழ்ச்சியையும் அவமானத்தையும் கொடுத்திருப்பதால் மகிந்த கொதித்துப் போய் ஆக்ரோஷமாக இருப்பதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆக மொத்தத்தில் ஊழல் விசாரணைகள் பற்றி மகிந்த தரப்பினர் பயப்படும் அதே நேரம் அவர் பிரதமரானால் என்னவாகுமோ என்று மறுதரப்பினரும் அஞ்சுகிறார்கள். ரணில் வந்தால் ராஜபக்சே குடும்பத்திற்கு எதிராக சாட்டப்பட்டிருக்கும் ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் உள்ளிட்ட 7௦௦௦ திற்கும் மேற்பட்ட குற்றசாட்டுக்கள் விசாரணைக்கு வரும். அதே போல இவர்கள் போர் குற்றங்களுக்கும் சாத்தியம் குறைவாக இருப்பினும் பொறுப்பு கூற வேண்டிய நிலை வரலாம். மாறாக மகிந்த பிரதமராக வந்தால் 19 ஆம் திருத்தம் நீக்கப்பட்டு 18 மீளவும் நடைமுறைப்படுத்தப்படலாம். தற்போதுள்ள பிரதம
நீதியரசரை நீக்கி மொஹான் பீரிஸ் அப்பதவிக்கு மீண்டும் கொண்டு வரப் படலாம். மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுண மகேந்திரன் திறைசேரி முறிகள் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு விசாரிக்கப் படுவார். இதில் ரணிலுக்குத் தொடர்புண்டு என்றும் நிரூபிக்கப் படலாம். ஜே.வி.பி தலைவர் அநுர குமார திஸாநாயக்கவின் குடியுரிமை பறிக்கப்படலாம். கட்சி தாவிய அமைச்சர்களான ராஜித மற்றும் சம்பிக்க ரணவக்க போன்ற அனைவரின் மீதும் தேசத்துரோக வழக்குகள் பதியப்படலாம். ஏன் இந்தியாவின் மானியங்கள் மற்றும் உதவிகள் முழு அளவில் நிறுத்தப்பட்டு சீனத் துறைமுக நகரம் போன்ற பல நகரங்கள் எழுப்பப்படலாம். அனைத்துமே ஆகஸ்ட் 17 மக்களில் கைகளில்தான் தங்கியிருக்கிறது. ஆக வெல்லப்போவது போர் வெற்றியா அல்லது ஊழல் விசாரணைகளா என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
தமிழர் தரப்புகளே :
விரும்பியோ விரும்பாமலோ நாடாளுமன்றத்தில் தமிழர்களுக்கு இப்போது ஒற்றுமை மிக்க பெரும்பான்மை அவசியம் ஆதலால் தமிழர்கள் தங்கள் வாக்குகளை தவறாது தெளிந்து சிந்தித்துப் பிரயோகிக்க வேண்டும் என்பதில் ஐயமின்று. யதார்த்தவாதத்தில் மிகப் பெரிய தவறு என்னவெனில் தமிழ்த் தலைமைகள் அரசியல் விசாரங்களில் காளைக்கண் கொண்டு ஆராய்ந்து முடிவெடுக்கத் தவறுவதாகும். அத்தோடு தேர்தல் காலங்களில் தமிழர்களுக்குப் பொறுமை மிகுந்த அவசியம் என்பதனையும் மனதிலுறுத்தி செயற்படவேண்டும். இம்முறை தேர்தலில் பல புதிய கட்சிகள், சுயேட்சைகள் மக்களை குழப்பவென்றே களத்தில் இறக்கிவிடப்பட்டிருப்பதால் மக்கள் பிரச்சாரங்களுக்கு அடிபடாமல் எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது மிகப் பிரதானமாகும்.
ஓ! மைத்ரி இது உங்களுக்கான செய்தியாகும்
தமிழர்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வினை ஒரே நாளில் எட்டிப் பிடித்துவிட முடியாதென்பதை நாம் நன்கறிவோம். இருப்பினும் பல ஆண்டுகாலமாகத் தனது சொந்த அரசாங்கத்தாலேயே வஞ்சிக்கப்பட்டு வந்த ஒரு இனத்தின் நியாயப் பூர்வமான அரசியல் கோரிக்கைகளை மிக மந்த கதியில் மூடு மந்திரமாக தேக்கநிலையில் விடுதலென்பதை யாரும் விரும்பார் என்பதைத் தாங்கள் நன்கு அறிவீர்கள். தமிழர்களின் பெறுமானங்கள், நாட்டு மக்களின் பிரயாசை, இப்போதுள்ள சர்வதேச சூழமைவு இவைகளைத் தக்க முறையில் பயன்படுத்தி இலங்கையில் சிறுபான்மை மக்களுக்கான நல்லதோர் தீர்வொன்றினை வழங்கிட இன்னமும் உங்களுக்கு காலம் கடந்துவிடவில்லை. மகிந்தவை அடியொற்றி அவர் பாணியில் தமிழர்கள் தீர்வை இழுத்தடிப்பது சரியல்லவே. ஒரு இனத்தை அல்லது சமூகத்தை ஒடுக்க தேசிய பாதுகாப்பைப் பயன்படுத்தக் கூடாது என அதுரவும், இனப்பிரச்சினைக்கு தற்போதுள்ள அரசமைப்பு மூலமாக தீர்வை கானா முடியாது மாறாகப் புதிய அரசமைப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என தற்போதைய வெளியுறவுத் துறை அமைச்சர் மங்களவும் கூறியிருப்பதானது ஒருவகையில் ஆறுதலைத் தருகிறது. நான் ஏன் இதனைக் கூறுகிறேன் என்றால் வரலாற்றில் எந்தவொரு இடத்திலும் இதுவரை சிங்களத் தலைவர்கள் எவரிடமும் 1௦௦% பெருந்தன்மை மருந்துக்கும் காண இயலவில்லை. “பெருந்தன்மை” இந்த எண்ணம் மட்டும் நடைமுறை சாத்தியமாக இருந்திருக்குமானால் பல இழப்புகளை தமிழர்கள் சந்திக்க நேர்ந்திருக்காது. இப்போது போன்றில்லாது போரொழிந்த சமத்துவ சமுதாயம் என்றோ மலர்ந்திருக்கும்.
அண்ணாச்சி (மளிகை) கடை – துவரம் பருப்பு
அப்பாவுக்கு சொந்த ஊர் தூத்துக்குடி பக்கம் சிறு கிராமம். அப்பாவுடைய 14-வது வயதில் அவருடைய அக்காள் கணவர் திருப்பூரில் ஆரம்பித்த மளிகை கடைக்கு உதவியாக இருக்க படிப்பை நிறுத்தி என் அத்தைக்கு சீதனமாக அப்பாவை கொடுத்தனுப்பிவிட்டனர்.
அந்தக் காலத்தில் எல்லாம் அப்படித்தானே ஒவ்வொருவருக்கும் ஏது தனித்தனி வாழ்க்கை?
ஆறு குழந்தை பிறந்தால் முதல் குழந்தையை பள்ளிக்கே அனுப்பாமல் எட்டு வயதிலேயே மீதி ஐந்து குழந்தைக்கும் தாயாக்கி வளர்க்க வைத்து விடுவர். இப்போதெல்லாம் நான்காவது படிக்கும் குழந்தை வீட்டில் தனக்கென்று தனி அறை கேட்கிறது.
ஆறு குழந்தை பிறந்தால் முதல் குழந்தையை பள்ளிக்கே அனுப்பாமல் எட்டு வயதிலேயே மீதி ஐந்து குழந்தைக்கும் தாயாக்கி வளர்க்க வைத்து விடுவர். இப்போதெல்லாம் நான்காவது படிக்கும் குழந்தை வீட்டில் தனக்கென்று தனி அறை கேட்கிறது.
நாற்பது வருடம் ஓடிவிட்டது. ஒரு ரூபாய் கூட சம்பளம் இல்லாமல் 15 வருடம் வேலை செய்து, கல்யாணத்திற்குப் பிறகு தனியே கடை வைத்து, எங்கள் மூவரையும் கல்லூரி வரை படிக்க வைத்து, சொந்த வீடு வாசல் என்று மளிகை கடை எங்களை நன்றாகவே வைத்துள்ளது.
பி.எஸ்சி படித்தும் 6000 ரூபாய் சம்பளத்திற்கு இரவு பதினோரு மணி வரை பனியன் கம்பெனிகள் வேலை வாங்கியதால் நானும் கடந்த மூன்று வருடமாக மளிகை கடையிலேயே உட்கார்ந்து விட்டேன்.
உலகிலேயே எனக்கு மிக பிடித்ததும் பிடிக்காததும் 'மளிகைக் கடை' தான்.
காலையில் அரக்க பறக்க எழுந்து குளித்து ரெடியாகி சிக்னலில் அல்லல்பட்டு வண்டி பஞ்சரானதுக்கெல்லாம் பயந்து பர்மிஷன் போடும் டென்ஷன் மளிகை கடையில் இல்லை என்றாலும் ஊர் உறங்கும் அதிகாலையில் எழுந்து மார்க்கெட் செல்ல வேண்டுமே?
காலை டிபன் 11 மணிக்கு, மதிய சாப்பாடு 4 மணிக்கு, இரவு சாப்பிடவே தோணாது தூக்கம் கண்ண சொக்கும். கடை அடைத்துவிட்டு படுத்தவுடன் யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்கும். எழுந்து திறந்தால் "ரெண்டு ரூபாய்க்கு நூர்சேட் பீடி" என்று தெரிந்தவர் பல்லிளிப்பார். கடையும் வீடும் ஒன்றாக இருப்பது சௌகரியமாக இருந்தாலும் இந்த விஷயத்தில் அசௌகர்யம்.
ஆஃபிஸ் வேலையில் என்னதான் மாடு மாதிரி வேலை செய்து அடுத்தவனுக்கு சம்பாதித்து கொடுத்தாலும் வாரத்தில் ஒருநாள் ஓய்வு கிடைக்கும். மளிகை கடையில் காய்ச்சலுக்கு கூட லீவ் விட முடியாது. நம்மை திட்ட யாரும் இல்லை என்றாலும் நமக்கே கெட்டுப் போகும் பொருட்களை வைத்துக் கொண்டு கடையைப் பூட்டத் தோணாது. தீபாவளி பொங்கல் எல்லாம் மளிகை கடைக்காரனுக்கு இல்லவே இல்லை.
மளிகை கடை நடத்துவதில் முக்கியமான விஷயம் வீட்டில் உள்ள பெண்களின் ஒத்துழைப்பு கண்டிப்பாக தேவை. கணவரின் தொழிலைப் புரிந்து கொண்டு உதவியாக இருக்க வேண்டும். இதனாலேயே பலபேர் மளிகை கடைக்காரனுக்கு பெண் கொடுப்பதில்லை. சிக்கனம், உழைப்பு, சின்னச் சின்ன என்ஜாய்மெண்ட்டுகளை தியாகம் செய்ய தயாராய் இருப்பது, கெட்ட பழக்க வழக்கங்கள் இல்லாமல் இருப்பது, தனி மனித ஒழுக்கத்தை பின்பற்றுவது, வாடிக்கையாளரிடம் எரிந்து விழாமல் அதே சமயம் பண விஷயத்தில் உஷாராய் இருக்கும் பட்சத்தில் மளிகை கடை நம்மை கைவிடாது.
எந்தத் தொழிலாக இருந்தாலும் வாடிக்கையாளரின் ஒரே எதிர்பார்ப்பு விலை தான். மளிகை கடை மட்டும் விதிவிலக்கா என்ன? தங்கம் ஒரு பவுன் 20,000/- என்றால் யாரும் அதை கடைக்குச் சென்று 10,000/- க்கு கேட்பதில்லை. ஆனால் இங்கு மட்டும் இஞ்சி கிலோ 30 ரூபாய் இருந்தாலும் சரி 150 ரூபாய் ஆனாலும் சரி அதே ஒரு ரூபாய்க்கு தான் கேப்பாங்க. விலையில்லா கருவேப்பிலை போட்டால் தான் நம் மக்களுக்கு குழம்பு ருசிக்கும். அவர்களின் மனநிலை புரிகிறது. சம்பளத்தின் பெரும்பகுதி சமையலுக்கே போகுதே என்கிற ஆதங்கம் ஆனால் மளிகை கடைக்காரர்களின் நிலையையும் கொஞ்சமாவது புரிந்து கொள்ள வேண்டும் என்பது ‘என் மிகப்பெரிய பேராசை’.
திருப்பூர் மாதிரி ஊர்களில் பெண்களும் சமைத்து வைத்துவிட்டு வேலைக்குச் செல்வர் என்பதால் காக்க வைக்காமல் முடிந்தளவு வேகமாக கொடுக்க வேண்டும் இல்லன்னா பக்கத்து கடைக்குப் போயிருவாங்க. மொதல்ல வர்றவங்களுக்கு மொதல்ல தரனும் இல்லன்னா எப்படி எனக்கப்பறம் வந்தவங்களுக்கு கொடுக்கலாம்னு சண்டைதான். என்னதான் செய்தாலும் வேலை இல்லை என்று கெஞ்சி கடனை வாங்கி வைத்துவிட்டு வேறு கடைக்கு செல்லும் ‘நல்லவர்களும்’ இருக்கத்தான் செய்கிறார்கள்.
நாணயம் உள்ளவர்களை கண்டறிய மட்டும் எக்ஸ்ட்ராவா மூணு மூளையை கொடு இறைவா..!!!
அன்னப் பார்வை – ம. தொல்காப்பியன்
காக்கா முட்டை: ஆவண யதார்த்தத்தின் அழகியல்
எப்படி தொடங்குவது என்று தெரியவில்லை. இந்த திண்டாட்டத்தைத் தருவதுதான் ஒரு நல்ல படைப்புக்கான முதல் அறிகுறி என்று கருதுகிறேன். ஒரு நல்ல படைப்பு, எண்ணிப்பார்க்க ஒரு அழகான அனுபவமாக இருக்கக்கூடும் ஆனால் விவரிக்க ஒருவித திணறலை கொடுக்க வேண்டும். உள்ளத்தின் நின்றுகொண்டு கலாபூர்வமான உணர்ச்சிகளைப் பெருக்குவதாகவும் அதே நேரத்தில் மற்றவர்க்கு எடுத்துச்சொல்ல சிரமமாகவும் அது தோன்ற வேண்டும். இது சினிமாவின் ஒரு பண்பு.
ஆனால் எடுத்த எடுப்பிலேயே காக்கா முட்டையின் ஒரு வரிக்கதையை படத்தைப் பார்க்கும் எவராலும் சொல்லிவிட முடிகிறது. அதே நேரத்தில் அதில் என்ன இருக்கிறது என்று தன்னைத் தானே வெறுமை உணர்வோடு கேட்டுக்கொள்ளவும் வைத்து விடுகிறது. காக்கா முட்டையில் ஒரு ரசிகன் வியந்து போற்றும் அளவுக்கு அப்படி என்னதான் இருக்கிறது? இந்த கேள்விக்கான பதிலைப் பெறுவதில்தான் அத்தனைபேரும் திணறலை சந்திக்கிறார்கள். பதிலைத் தேடிப் பெறுவதற்குப் பதிலாக அதன் இயக்குநரை ஏசிவிட்டு அல்லது வானுயரப் புகழ்ந்து விட்டு அடங்கிப்போய் விடுகிறார்கள். சோவென்று உயரும் சத்தங்களின் ஊடே தங்களது கைகளையும் உயர்த்திக் காட்டி விட்டு கூட்டத்தோடு கூட்டமாகக் கலந்து விடுகிறார்கள். காக்காமுட்டை விமர்சகனை இப்படித்தான் இம்சித்துக்கொண்டிருக்கிறது. நான் ஓர் உயர்தர சினிமா ரசிகனின் பரிதாப நிலையைப் பற்றிக் கூறுகிறேன்.
வேறொரு ரசிகக்கூட்டம் இருக்கிறது. காக்கா முட்டை ஒரு சாதாரன படம். சண்டையும் குத்துப் பாட்டும் இல்லை என்றால் அது ஒரு உலக சினிமா ஆகி விடுமா? இந்தியர்களுக்கு வேண்டுமானால் அது ஒரு சாகசமாக இருக்கலாம். ஆனால் உலக சினிமாவோடு ஒப்பிட காக்கா முட்டை தகுதியானது இல்லை என்பார்கள் அந்த வகையினர்.
இந்த இரண்டு வகையினர்களின் மன நிலையைக் குறித்தும் பரிசீலிக்க நான் தகுந்த ஒரு தளத்திலிருந்து அவர்களைப் பார்க்க வேண்டும்.
நல்ல சினிமாவைப் பற்றிப் பேச்சு எழும்போதெல்லாம் ஒருவரின் எண்ணம் எங்கே செல்கிறது? இங்கு ஒரு கருத்து நிலவுகிறது. பாலுமகேந்திராவைப் பற்றிப் பேசும்போது ஒவ்வொருவரும் தங்களது மூளையைவிட, அறிவை விட ஆட்டு மந்தையின் தன்மையைப் பின்பற்றுவதில்தான் ஆர்வம் காட்டுகிறார்கள். சினிமா என்றால் அது பாலு மகேந்திரா எடுப்பதுதான். நல்ல இயக்குனர் என்றால் அது பாலு மகேந்திராதான் என்ற முன்தீர்மானங்களை சுமந்து திரிபவர்கள் இங்கு ஏராளம். கலைஞர்கள் அவர்களின் தகுதி சார்ந்து போற்றப்பட வேண்டும். ஒரு கலையை முன்னெடுத்துச் செல்வதில் அல்லது ஒரு கலையை அடையாளப் படுத்திக் கொள்வதில் எந்த ஒரு தனி நபரின் அல்லது நிறுவனத்தின் சிந்தனைப் போக்குகளும் குறுக்கே நிற்கக் கூடாது என்பது எனது கருத்து. பாலுமகேந்திரா பெரும்பான்மையான இளைஞர்களின் சினிமா சிந்தனைகளை பின்னோக்கி இழுத்தபடி இருக்கிறாரோ என்று நான் கவலைப்படுகிறேன்.
தமிழ் சினிமாவில் பாலுமகேந்திராவின் தாக்கம் என்பது என்ன? என்னைப் பொருத்தவரையில் ஒரு இயக்குநராய் அவர் ஒன்றுமே சாதித்துவிடவில்லை என்பேன். நல்ல சினிமா குறித்து அவர் பேசிய அளவுக்கு எதையும் செய்து காட்டிவிடவில்லை. வெற்றிமாறன் போன்ற அவரது மாணவர்களை உருவாக்கியவர் என்ற அளவில்தான் பாலுமகேந்திராவின் முக்கியத்துவத்தை நான் மதிப்பிட முன்வருவேன்.
பாலு மகேந்திராவின் ‘மூன்றாம் பிறை’ குறித்த கொண்டாட்டங்கள் இன்னும் தீர்ந்தபாடில்லை. அந்த படத்தின் இறுதிக் காட்சியைப் பார்த்து விட்டு வானுக்கும் பூமிக்கும் குதித்தவர்களில் நானும் ஒருவன்தான். சாதாரண ஒருவன் அல்ல அந்தப் படத்தை எனக்குத் தெரிந்த ஒவ்வொருவரின் கவனத்துக்கும் எடுத்துச் செல்லும் ஒரு தூதுவனாகவே திகழ்ந்தேன். இந்த எனது பிரச்சாரகன் வேலை ஒரு கட்டத்தில் தனது விரைப்பை இழந்து தளர்ந்து விட்டது. ஏனெனில் அப்போதுதான் நான் சிவாஜி கணேசனின் ‘எங்கிருந்தோ வந்தாள்’ படத்தைப் பார்க்க நேர்ந்தேன்.
ஒரு படத்தின் முக்கிய இறுதிக்காட்சியை எடுத்து பாலு மகேந்திரா தனது படத்தின் உயிர்நாடியான அம்சமாகக் கையாண்டிருப்பதை மட்டுமே நான் சாடவில்லை. மூன்றாம் பிறையின் நாயக பாத்திரத்தின் வடிமைப்பே குறையுடையது. முன்னுக்குப் பின் முரண்கள் உடையது. புனைவு எதார்த்தம் அற்றது.
நாயகன் ஊட்டியில் ஒரு பள்ளி ஆசிரியன். நல்லவன். உத்தமன். நேர்மையானவன். எந்த ஒழுக்கக் கேடுகளும் இல்லாதவன். அத்தகைய ஒருவன் சென்னைக்கு தனது நண்பனைக் காண வந்திருக்கும்போது நண்பனின் அழைப்பை ஏற்று சிவப்பு விளக்கு பகுதிக்கு செல்கிறான். கட்டணம் செலுத்தி பெண்ணை அனுபவிப்பது அவனது நோக்கம். இது எப்படி சாத்தியம்? ஒரு பள்ளி ஆசிரியன், ஒழுக்கக் கேடுகளை செய்வதில் முன்பின் பயிற்ச்சி அற்றவன், கட்டணம் செலுத்தி பெண்னை வாடகைக்கு எடுக்கும் அளவுக்கு எப்படித் துணிவான்? வேறு வகையில் பார்த்தாலும், ஒரு நல்லவனை அத்தகைய சிந்தனைகள் அற்றவனை நண்பன் ஒருவன் எப்படி சட்டென சிவப்பு விளக்குப் பகுதிக்கு அழைப்பான்? ஆனாலும் இது நடக்கிறது ஏன்?
ஏனெனில் நாயகியை நாயகன் சந்தித்தே ஆக வேண்டுமே. அங்கு நாயகி இருப்பது இயக்குனருக்குத் தெரியும். அவர்தான் நாயகனை சென்னை வரை அழைத்து வந்திருக்கிறார். அவனை எப்படியாவது அங்கே அனுப்ப வேண்டும். அதனால் நண்பனை ஒரு ஸ்த்ரீ லோலனாகக் காட்டி நாயகனை வேண்டா வெறுப்பாக அவனுடன் அனுப்பி வைக்கிறார். நாயகன் புதியவன் என்று சொல்லி புது வரவு ஒன்றை கேட்டுப் பெற்றுத் தருகிறான் நண்பன். இப்படி புது வரவாக வந்து சேருகிறாள் நாயகி. இங்கும் ஒரு லாஜிக் இடிக்கிறது. புதியவன், அனுபவம் அற்றவன் என்றால் பழைய, அனுபவசாலி பெண்தானே தேவைப்படுவாள்? இங்கே புனைவு இருக்கிறது. எதார்த்தம் இல்லை.
எப்படியோ கதை சொல்லியின் மன உருவம் நமக்கு எளிதாக புலப்படுகிறது. அது இயல்புக்கு மாறாக கதையை செயற்கையாகக் கட்டுகிறது, பின்னுகிறது என்பது பளிச்சென வெளிப்படுகிறது.
‘சினிமா என்பது படம்பிடிக்கப்பட்ட ஓர் உலகம்’ என்று வரையறுக்கும்போது ‘சினிமா ஒரு செயற்கை உலகம்’ என்பதையும் அந்த வரையறை நிறுவுவதை நான் அவதானிக்க தவறவில்லை.. ஆம் செயற்கை உலகம்தான். செயற்கையாய் இருந்தாலும் அது ஓர் உலகம் என்பதை மறுக்க முடியாது. எனவே ஒரு உலகத்துக்கு உரிய அத்துணை எதார்த்தமும் உண்மைத் தன்மையும் இந்த செயற்கை உலகத்துக்கும் உண்டு. பாத்திரத்தின் சுபாவத்தில் உள்ள எதார்த்தம்தான் அந்த பாத்திரத்தின் உண்மைத் தன்மையை நிறுவுகிறது.. இங்கே நாயகனிடம் ஒரு நிலைத்த கேரக்டர் இல்லை. நம்பகத்தன்மை இல்லை. சம்பவங்களை உருவாக்குவதில் பாத்திரங்களின் சுபாவங்கள் ஆற்றும் பங்களிப்புகளில் உரிய இயல்பொழுக்கம் இல்லை. எனவே கதை சொல்லியால் அது ‘செய்யப்பட்ட’ செயற்கை ஆயிற்று. அதனால் அது நாடகத் தன்மையை அடைந்து விடுகிறது... சினிமா என்ற தகுதியை இழந்து விட்டதால். பாலு மகேந்திரா ஒரு படைப்பாளி என்ற அந்தஸ்தை தவற விட்டுவிடுகிறார்.
பாலு மகேந்திரா குறித்து மேலும் ஒரு வார்த்தை இங்கே குறிப்பிட வேண்டியது அவசியமாகிறது. ஒரு படைப்பு இரண்டு இடங்களில் வினை புரிகிறது. அந்த வினைதான் ஒரு சினிமாவால் ஒரு தனி நபர் அல்லது ஒரு சமூகம் பெறக்கூடிய நன்மை என்பது எனது கருத்து. ஒரு படைப்பு பார்வையாளனையும் அதே நேரத்தில் படைப்பாளியையும் வளர்த்து எடுக்கிறது. சினிமா என்ற படைப்பின் காட்சிப் படிவங்கள் பார்வையாளனின் புரிந்து கொள்ளும் ஆற்றலை விரிவுபடுத்துகிறது. இந்த விரிவுபடுத்துதலின் துணைக்கொண்டுதான் அவன் தான் வாழும் உலகத்தின் வளர்ந்து செல்லும் சூழ்னிலைகளைப் சரியாகப் புரிந்து கொள்ளவம் அனுபவங்களை செம்மையாக நடைமுறைப்படுத்தவும் விழைகிறான். மனிதனின் புரிந்து கொள்ளும் ஆற்றலின் மீதானா சினிமாவின் தாக்கமானது இன்றைய அதி நவீன அறிவியல் சமுதாயத்தைப் படைப்பதில் அளப்பரிய சாதனையை நிகழ்த்தி உள்ளது. பல்லாயிரம் ஆண்டுகளாக தட்டுத் தடுமாறிக்கொண்டிருந்த மனித சமூகம் சினிமா அறிமுகமான பின்தான் தாண்டுகால் போட்டு முன்னேறத் தொடங்கியது: மலர்ந்திருக்கும் இன்றைய நவீன சமுதாயம் சினிமா உணர்வு நமக்கு அளித்த கொடை.
அதே வேளையில் படைப்பாளியும் கற்றுக்கொள்கிறான். கடந்த படைப்பின் அனுபவங்கள் அவனை புதிய படைப்பை மேலும் மெருகுடன் படைக்கத் தூண்டுகிறது. பார்வையாளனின் புரிந்து கொள்ளும் ஆற்றலை மேலும் விரிவுபடுத்தும் வகையில் நுட்பமான காட்சிப் படிமங்கள் மூலம் கதை சொல்லும் யுக்தியைக் கையாள்வதில் படைப்பாளி முன்னேறுகிறார்.. இது சரியானால் பாலு மகேந்திரா ஒரு படைப்பாளி என்ற அளவில் என்ன கற்றுக்கொண்டார்? அவர் தனது ஆரம்ப கட்ட நிலையில் இருந்து சற்றும் வளரவே இல்லை என்பதுதான் உண்மை. தன்னை வளர்த்துக்கொண்டதற்கான எந்த அறிகுறியும் அவரிடம் தென்படவில்லை.
அவர் அமைக்கும் கேமெரா கோணங்கள் ஒரே மாதிரியானவை. அவர் அறிமுகப் படுத்தும் நாயகிகளின் உருவங்கள் ஒரே படித்தானவை. சொந்த வாழ்வில் அவருக்குப் பிடித்த ஒரே மாதிரியான பெண் முகங்களையே அவர் சினிமாவிலும் பயன்படுத்தினார். அவருடைய நாயகிகள் உடுத்தும் ஆடையின் பாணி மாறவே இல்லை. அவரது நாயகிகளின் சுபாவங்களும் மாறியதில்லை. காட்சிகளின் நீளங்கள் ஏற்படுத்தும் சலிப்பு மாறவே இல்லை. ஷாட்கள் கொடுக்கும் அலுப்பு மாறவே இல்லை. அவரது காட்சி அமைப்புகள் கொடுக்கும் மெதுத்தன்மை (SLOWNESS) கடைசிவரை மாறவே இல்லை. இன்னும் நிறைய சொல்லலாம். மொத்தத்தில் அவருடைய படங்கள் சலிப்பூட்டல்களின் களஞ்சியங்களாகத் திகழ்கின்றன. இவருடைய பாணி பின்பற்றத் தக்கதா? சினிமாக்கள் மசாலா நாடகங்களாக வெளி வந்துகொண்டிருந்த காலத்தில் வேண்டுமானால் பாலு மகேந்திராவின் சினிமா ஒரு முன் மாதிரியாக இருந்திருக்கலாம். இன்றைக்கு நமது சினிமா சிந்தனையாளர்கள் பாலு மகேந்திராவை கடந்து செல்ல வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகிறது.
இந்த வகையில் இன்றைய இளைஞர்கள் பாலுமகேந்திராவை அல்ல வெற்றி மாறன் பா.ரஞ்சித், அட்லி, கார்த்திக் சுப்புராஜ் போன்ற புதிய தலைமுறை இயக்குனர்களை முன் மாதிரியாகக் கொண்டு தங்களது சினிமா பார்வைகளை அமைத்துக்கொள்ள வேண்டும். இந்த வரிசையை மேலும் செம்மைப்படுத்த வந்திருப்பவர்தான் இயக்குனர் மணிகண்டன். காக்கா முட்டையை இவர்களின் கண் கொண்டுதான் பார்க்க வேண்டும். வெற்றிமாறனின், பா.ரஞ்சித்தின் சிந்தனைப்போக்கில் திரைப்படங்களைப் பார்க்கப் பழகிக்கொண்டால்தான் இன்றைய நவீன திரைப்படப் போக்குகளை புரிந்து கொள்ளவம் ரசிக்கவும் அதை உருவாக்கவும் நமது இளைஞர்களுக்கு சாத்தியப்படும்.
இயக்குநர் மணிகண்டனை ஒரு முகநூல் பதிவர் சத்யஜித் ரேயோடு ஒப்பிட்டு எழுதி இருந்த போது எனது ரத்தம் கொதித்து விட்டது. ஒரு எளிய மனிதனாய் எனது பொறாமைகள் ஒன்று சேர்ந்து அவருக்கு எதிராய் பேசவும், எழுதவும் துடித்தன. படம் பார்க்க வேண்டியதுதான் எனக்கு முன் இருந்த ஒரே வேலை. படம் பார்த்தபோது, கதை சொல்லியின் மனதை என்னால் படிக்க நேர்ந்த போது நான் அவரோடு ஒன்றி விட்டேன். மிக எளிய குரலில் முக எளிய நயத்தில் மிக எளிய விவரணைகளை அந்தக் கதை சொல்லியிடம் நான் கண்டேன். அந்தக் கதை சொல்லியிடம் இருந்த நேர்மை என்னை அசத்தி விட்டது. அந்த கதை சொல்லியிடம் இருந்த பொறுப்புணர்ச்சி என்னைக் கவர்ந்து விட்டது. அந்தக் கதை சொல்லியிடம் இருந்த தீர்மானம் என்னை அடித்துப்போட்டு விட்டது. இவை எல்லாம் சேர்ந்து அமைந்த அந்தக் கதை சொல்லியின் கச்சிதமான வெளிப்பாடு அத்தனை ரசிகர்களையும் அறிவு ஜீவிகளையும் அசரடித்து விட்டது. அந்தக் கதை சொல்லியின் மனம்தான் எனது விமர்சக தளம்.
மூத்திரத் துணியைப் பார்த்தவிட்ட அம்மா திட்டும்போது இரண்டு சிறுவர்களும் குடிசைப்பகுதிக்குள் புகுந்து செல்வார்கள். அப்போது கேமிரா மேலே எழுந்து அந்த குடிசைப்பகுதியின் அமைவிடத்தை தெளிவாக வரையறுத்துக் காண்பிக்கும் அந்த நொடியில் கதை சொல்லியின் மன நிலை எனக்கு பளிச்சென விளங்கிப் போனது. நான் படித்துவிட்டேன் அவரை.
கதை சொல்லியின் போக்கை உருவகப்படுத்திக் காட்டினால், பைக் ஓட்டும் ஒரு வாலிபர், பின் இருக்கையில் அமர்ந்திருக்கும் சிறுமி ஒருத்திக்கு ஊரை சுற்றிக்காட்டும் பொறுப்புணர்ச்சியோடு கதை சொல்லி மென்மையாக பாரவையாளனைக் கையாண்டிருக்கிறார். ஒரு வாகன ஓட்டி தனது பயணிக்கு எந்த பயண துன்பமும் நேராமல் அதே நேரத்தில் பாதுகாப்பாக, குறித்த நேரத்தில், குறித்த இடத்திற்கு கொண்டு சேர்த்து விடும் பொறுப்புணர்ச்சியோடு இந்த கதை சொல்லியின் மனம் இயங்குவதை நான் காண்கிறேன்.
ஆனால் இங்கு என்ன நடக்கிறது? இங்கே பல வாகன ஓட்டிகள் அவர்களது பொறுப்புகளை மறந்து விடுகிறார்கள். பயணிகள் தங்களிடம் மாட்டிக் கொண்டது போன்ற மன உணர்வைக் கொண்டிருக்கிறார்கள். தங்கள் திறமையைக் காட்டுவதற்காக வாகனத்தில் அதிவேக பாய்ச்சலைக் காட்டுகிறார்கள்.
பயணிகளிடம் கைதட்டலையும் பாராட்டுகளையும் எதிர்பார்த்து வாகனத்தை மேலும் கீழுமாக விரட்டியும் அந்தரத்தில் பறந்தும் படு பயங்கர சாகசத்தை செய்கிறார்கள். பயணியைப் பற்றி கவலைபடுவதில்லை. பயணிகளின் பாதுகாப்பு உணர்ச்சியை குலைத்து பயண இன்பத்தை அனுபவிக்க விடாமல் செய்து விடுகிறார்கள். மிரண்டு போன பயணிகள் வேறு வழி இன்றி அமைதி காத்து விட்டு வெளியே வந்து காரி உமிழ்கிறார்கள். இதுதானே நடக்கிறது.
பெருவாரியான ரசிக கூட்டத்தை கையாள்வதில் ஒரு குறைந்தபட்ச கண்ணியத்தைக் கூட காட்ட மறுக்கும் திரைப்பட இயக்குனர்கள் மத்தியில் பார்வையாளனை மதித்து, கைகோர்த்து, ஓர் அனுபவத்தை நோக்கி அன்பொழுக அழைத்துச் செல்லும் ஒரு வேறுபட்ட இயக்குனரை காக்கா முட்டையில் நாம் பார்க்கிறோம்.
ஒவ்வொரு பிடிப்பும் (ஷாட்) தெளிவாக இருக்கிறது. ஒவ்வொரு காட்சியும் கச்சிதமாக விளங்குகிறது. ஒவ்வொரு நிகழ்ச்சியும் நேர்க்கோடு மாறாமல் முன்னேறிச் செல்கிறது. விழுந்த மழைநீர் ஒன்றுசேர்ந்து பள்ளத்தை நோக்கி விரைவதைப்போல காட்சிகளும் சம்பவங்களும் இயல்பாய் முரண்பாடுகள் இன்றி செல்கின்றன. முதல் பிடிப்பிலிருந்து கடைசி காட்சி வரை பார்வையாளனுக்கு அனைத்தும் தெளிவாகப் புரிகிறது. தமிழ் திரைப்பட வரலாற்றில் இந்த அளவுக்கு தெளிவான கேமிரா செயல்பாடுகள் அமைந்த வேறொரு படத்தை நான் இதுவரைப் பார்த்ததே இல்லை.
இந்த எளிமைதான் காக்காமுட்டையின் தனிச் சிறப்பு. இயக்குனர் தனது புத்திசாலித்தனத்தையும் அறிவுக்கூர்மையயும் காட்டுவதாற்காக எந்தவித அநாகரீக ஆர்ப்பாட்டங்களுக்கும் இங்கே இடம் அளிக்கப்படவில்லை. இவை எல்லாம் சரி. காக்காமுட்டையில் அப்படி என்ன இருக்கிறது என்ற கேள்விக்கு வருவோம்.
மணி கண்டன் ஓர் உலகத்தைக் காட்டுகிறார். அதி நவீன உலகத்துக்கு வெகு அருகிலேயே இருக்கும் அழுக்கர்களின் உலகம் அது. ஒரு புள்ளியில் இருந்து மேல் நோக்கி விரையும் ஒரு வெளிச்ச உலகத்தையும் அதே புள்ளியில் இருந்து கீழ் நோக்கி தொங்கியபடி தவித்துக்கொண்டிருக்கும் இன்னொரு கருப்பு உலகத்தையும் நம் முன் நிறுத்தி இந்த இரு நிலைகள் பற்றி நாம் எடுக்கப்போகும் முடிவுகளில் மாற்றத்தைக் கோருகிறார். நமக்குள் ஓர் அகச் சலனத்தை விளைவிக்க விழைகிறார். இந்த கோணத்தில் பாருங்கள். இயங்கும் இரு உலகங்களுக்கு இடையே நசுங்கிக் கொண்டிருக்கும் மனிதத்தன்மையை பார்வையாளன் தன்னை அறியாமலேயே உணர்ந்து கொள்ளச் செய்திருக்கிறார் இயக்குனர்.
சொல்லப்படும் சூழ்நிலையில் பார்வையாளனை அசத்திவிட வேண்டும் என்பதற்காக கார சார கேள்விகளாயும் அசத்தும் பதில்களாயும், கொந்தளிக்கும் வசனங்களாயும், நெஞ்சைப் பிழியும் பிண்ணனி இசையாயும், பேரிடிகளை முழங்க விட்டு பார்வையாளனின் புலன்களைப் புண்படுத்தாமல் அவனது புரிந்து கொள்ளும் ஆற்றலுக்கு மதிப்பளித்து, அவை நோகாத வண்ணம், ஒன்றைச் சொல்லி பிறிதொரு விவாதத்தை அவனுக்குள் மூட்டி விட்டிருக்கிறார் இயக்குனர்.
இப்படித்தான் காக்கா முட்டையைப் பார்க்க வேண்டும். இப்படிப் பார்த்தால்தான் காக்கா முட்டையில் இருப்பவை எல்லாம் நமது கண்களுக்கும் அறிவுக்கும் அது ஓர் அர்த்தப் புதையல் என்பது புலப்படும். ஒன்றைச் சொல்லி சொல்லப்படாமல் விட்ட ஒன்றின் மீது வாசகனின் சிந்தனையைக் கிளர்த்தி விடுவது இலக்கிய வகைகளில் ஒன்று. அந்த பாணியைத்தான் காக்காமுட்டையில் இயக்குனர் மணிகண்டன் கையாண்டிருக்கிறார்.
அப்படி என்றால் காக்கா முட்டை ஒரு ‘இலக்கியச் சினிமா’ ஆகிறதா? இலக்கிய சினிமா கிடக்கட்டும். முதலில் காக்கா முட்டையில் சினிமா இருக்கிறதா? இந்த கேள்வி உங்களுக்கு எரிச்சல் ஊட்டலாம். நான் எனது கேள்வியைக் கைவிடப் போவதில்லை. எனது சந்தேகத்தை தீர்த்துக்கொள்ள முதல் கட்டமாக ஒரு ஆவணப் படத்திற்கும் சினிமாவிற்கும் உள்ள வேறுபாடு என்ன என்பது பற்றிய தெளிவை நான் பெற்றாக வேண்டும்.
(தொடர்ச்சி வரும் செப்டம்பர் மாத அகல் இதழில் வெளிவரும்)
************************************************************************************
நண்பர்கள் தங்கள் படைப்புகளை (கதை, கவிதை, கட்டுரை, துணுக்குகள், ஜோக்ஸ்) நம் அகலுக்கு அனுப்பலாம்.
நீங்கள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி :
குறும்படப் பரிந்துரை – ரஃபீக் ராஜா
பெரும்பாலும் நான் பார்க்கும் குறும்படங்கள் நண்பர்கள் பரிந்துரையின் அடிப்படையிலேயே பார்க்கப்பட்டவையாகும். ஏனெனில் யூடியூப் போன்ற காணொளி வலைதளங்களில் தமிழ் குறும்படம் என்று டைப் செய்தால் குறும்படம் என்ற பெயரில் ஏராளமான குப்பைகளே நிரம்பி வழிகின்றன. அது போன்ற மோசமான குறும்படங்களும் பலரது கடின உழைப்பால் உள்ளடங்கியது என்றாலும் மோசமான கதை மற்றும் சுவாரஸ்யம் இல்லாத கதாபத்திரத்தால் மனதை ஈர்க்காமலே கடந்து சென்று விடுகிறது.
சரி எத்தனை நாள் தான் பிறர் பரிந்துரைக்கும் படங்களையே பார்ப்பது? நாம் நம் நண்பர்களுக்கு எப்பொழுது நம்மை கவர்ந்த குறும்படங்களை பரிந்துரை செய்வது என வைராக்கியம்(?) கொண்டு யூடியூப்-இல் உலவிய பொழுது கண்ணில் பட்டது இடுக்கண் என்கிற குறும்படம்.
கதையின் ஒரே லொக்கேஷன் கோவில் வாசல் மட்டுமே. முக்கிய கதாபாத்திரம் இரண்டு முதியவர்கள். இருவருக்கும் கோவில் வாசல் தான் தொழில் செய்யும் இடம். ஒருவரது தொழில் தேங்காய் விற்பது, மற்றொரு முதியவரின் தொழில் பிச்சை எடுப்பது.
சுமார் 13 நிமிடங்கள் ஓடும் இந்த குறும்படத்தின் கதையை சீன் பை சீனாக விவரித்தால் புதிதாக பார்க்க விரும்பும் நண்பர்களின் சுவாரஸ்யத்தை வெகுவாக குறைத்து விடும் என்பதால் இப்குறும்படத்தின் சுருக்கத்தையும் என்னை கவர்ந்த காட்சிகளை மட்டும் குறிப்பிடுகிறேன்.
தேங்காய் விற்கும் முதியவர் சற்று அன்று சோகமாக காட்சியளிக்கிறார். கோவிலுக்கு வருபவர்களை பார்த்து கூவி கூவி தேங்காய் விற்பனை செய்தாலும் யாரும் அவரை சீண்டுவதாக இல்லை. அவ்வப்போது ஒரு மருந்து டானிக் அட்டையை எடுத்துப்பார்க்கிறார்.
கோவிலின் அருகில் பூ விற்கும் சிறுவன் நடமாடியபடியே பூ விற்பனை செய்கிறான். இதனால் அவனிடம் பூ அதிகமாக விற்பனையாவதை பார்க்கும் முதியவர் தானும் அந்த சிறுவன் கடைபிடிக்கும் யுக்கிதியை கையாண்டு நடமாடியபடியே தேங்காய் விற்பனை செய்கிறார். ஆனால் அப்படியும் அவரால் ஒரு தேங்காயை கூட விற்பனை செய்ய முடியவில்லை.
இதை அனைத்தையும் அந்த பிச்சைக்கார முதியவர் கவனித்தபடியே உள்ளார். இந்நிலையில் மிகவும் சோர்வுற்ற நிலையில் சாலையின் எதிர் பக்கம் தென்பட்ட ஒருவரிடம் தேங்காய் விற்க சாலையை கடக்கும் பொழுது எதிர்பாராதவிதமாக ஒரு கார் மோதி விபத்துக்குள்ளாகிறார். லேசான காயத்துடன் மயக்கமடையும் முதியவரை அருகில் இருப்பவர்கள் முகத்தில் தண்ணீர் தெளித்து அவர் தேங்காய் விற்ற பழைய இடத்தில் அமர வைக்கிறார்கள்.
மிகவும் பரிதாபமாக அமர்ந்திருக்கும் முதியவரிடம் அந்த பிச்சையெடுக்கும் முதியவர் வருகிறார். அவரை கனிவுடன் பார்த்து குடிப்பதற்கு தண்ணீர் கொடுக்கிறார். பின்பு அவரிடம் பிச்சையெடுக்கும் முதியவர், “நாம் தினமும் பார்த்து கொள்கிறோம். ஆனால் பேசியதில்லை. இன்று தான் பேசுவதற்கு சந்தர்ப்பம் அமைந்தது. காலை முதலே நீங்கள் பதற்றமாகவே இருக்கிறீர்கள். என்ன காரணம் தயங்காமல் என்னிடம் சொல்லுங்கள்” என்று கேட்கிறார்.
அதற்கு அந்த முதியவர், தம்பி! என் மனைவிக்கு நேற்று இரவு முதல் உடல் நிலை சரியில்லை. என்னிடம் அவளுக்கு மருந்து வாங்க கூட பணம் இல்லை. இந்த தேங்காய் அனைத்தையும் விற்றால் தான் மருந்து வாங்க முடியும். ஆனால் இன்று பார்த்து ஒரு தேங்காய் கூட விற்பனை ஆகவில்லை. எப்படி மருந்து வாங்கி அவளை நோயிலிருந்து காப்பாற்ற போகிறேன் என்று தெரியவில்லை” என்று தான் இயலாமையை நினைத்து முதியவர் கண்ணீர் வடிக்கிறார்.
உடனே அந்த பிச்சைக்காரர், அண்ணே! நீங்க கவலைப்படாதீங்க! எல்லா தேங்காயையும் நான் விற்று காட்டுகிறேன்!” என்று சொல்லி முதியவர் வைத்திருக்கும் எல்லா தேங்காயையும் அந்த கோவில் வாசலில் உடைக்கிறார்.
அதிர்ச்சியடையும் முதியவரை அமைதிப்படுத்தி உடைத்த அனைத்து சிதறு தேங்காய்களையும் சேகரித்து, “தான் கூறுவது போல் விற்பனை செய்யுங்கள்” என்று ஒரு யோசனை சொல்கிறார். (அது என்ன யோசனை என்று காணொளியில் பாருங்கள்)
யோசனைப்படி முதியவர் அனைத்து தேங்காய்களையும் விற்பனை செய்து விடுகிறார். அவர் மனைவிக்கு மருந்து வாங்குவதற்கான பணமும் சேர்ந்து விடுகிறது. விற்பனை முடித்து கிளம்பும் பொழுது அந்த பிச்சையெடுக்கும் முதியவரை நன்றியுடன் பார்க்கிறார். கிளம்பும்போது பிச்சைகாரர் தட்டில் 2 ரூபாய் போடும் பொழுது பிச்சையெடுக்கும் முதியவர் நிமிந்து அவரை புன்னகை செய்வதுடன் படம் நிறைவடைகிறது.
இந்த குறும்படத்தின் மிகப்பெரிய பலம் இரண்டு முதியவர்களின் நடிப்பு. அதிலும் தேங்காய் விற்பனை செய்யும் முதியவராக நடித்திருக்கும் லட்சுமணன் அவர்களின் நடிப்பு அருமை. பிச்சைகாரராக வரும் ரமணன் அவர்களும் சிறப்பான பங்களிப்பை செய்திருக்கிறார். குறிப்பாக பிச்சை போட வருபவர்களை கூட கவனிக்காமல், நிமிந்து பார்க்காமல் “நன்றி” மட்டும் சொல்லுவது மெலிதான சிரிப்பை வரவழைக்கிறது.
இயக்கம் ஹரிஹரன். இரண்டு கதாபாத்திரத்தை இயக்குனர் கையாண்ட விதம் பாராட்டுக்குரியது. இயல்பாகவே தேங்காய் விற்கும் முதியவர் மீது எழும் அனுதாபம் இந்த குறும்படம் எடுத்த நோக்கத்தின் வெற்றியை எளிதாக்குகிறது. வசனங்கள், கழுத்தை நெரிக்காத பின்னணி இசை, காட்சிகளை உறுத்தாத ஒளிப்பதிவு என 13 நிமிடங்கள் நகருவதே தெரியவில்லை. குறைந்த பட்ஜெட் மற்றும் குறைவான கதாபாத்திரம் கொண்டு குறும்படம் எடுக்க முனைவோர் இதை பார்த்து பல விஷயங்கள் கற்று கொள்ளலாம். மனிதனின் மெல்லிய உணர்வுகள் குறித்த குறும்படங்களை தேடித் தேடி ரசிப்பவர்கள் இதையும் தாராளமாக ரசிக்கலாம். இந்த குறும்படம் Norway tamil film festival-2013 மற்றும் World Premiere in Cannes film festival-2012 சர்வதேச விருதுகளை வாங்கியிருக்கிறது. குறும்படத்தின் லிங்க் கீழே:
வாசிப்பனுபவம் – குயலவன் அன்றில்
நஞ்சுண்டகாடு
ஈழ நாவல்களில் மிக முக்கியமான நாவல்களில் ஒன்று குணா கவியழகன் எழுதிய நஞ்சுண்ட காடு. குணா கவியழகன் விடுதலைப்புலிகள் அமைப்பில் போராளியாயிருந்தவர். 2௦௦4-ம் ஆண்டே ‘நஞ்சுண்ட காடு’ எழுதப்பட்டு இருமுறை விடுதலைப்புலிகளால் தடைசெய்யப்பட்டு, பின்னர் 2௦௦9-ல் முள்வேலி முகாமில் கவியழகன் அடைப்பட்டதால் தாமதப்பட்டு 2௦14-ல் அகல் வெளியீடாக வந்துள்ளது.
இது தான் இவரின் முதல் நாவல் என்று எளிதில் நம்பிவிடமுடியாத எழுத்து.
நஞ்சுண்டகாடு நாவல் முழுவதும் ஒருவிதத் துயர் விரவிக்கிடக்கிறது. வாழமுடியாத சூழலில் இருந்துக்கொண்டு விடிவை நோக்கி வாழ்வை நகர்த்திக் கொண்டிருக்கும் மக்களின் கதை. விடுதலைப்புலியாகப் பயிற்சி பெறும் இளைஞர்களின் கதையாய் ஆரம்பிக்கிறது நாவல். அவர்கள் அனுபவித்த இன்பதுன்பங்கள், சிறுசிறு சண்டைகள், பிரிவுகள் தியாயங்கள் என அனைத்தையும் பதிவு செய்கிறது. அவர்களின் குடும்பச்சூழல், இழந்த காதல் என ஒவ்வொரு போராளியின் கடந்தகாலக் கதைகள் மிகவும் துயர் மிகுந்தவை.
நாவலின் ஆரம்பத்திலேயே ஆசிரியர் சொல்லிவிடுகிறார். இது பொழுதைப் போக்க, உங்களை மகிழ்விக்க எழுதப்பட்ட ஒரு படைப்பல்லவென்று. ரத்தம், வலி வேதனை, சாவு, கொலை, போர் போன்றவற்றை வாழ்க்கை சூழலாய்க் கொண்ட ஒர் இனத்தின் கதையைப் பொழுதுபோக்காய் படித்து விட இயலாது. அதில் வாழத்தான் முடியும்.
“பொழுதைப்போக்கும் ஆர்வமுள்ள வாசகர்களே நீங்கள் போய்விடுங்கள். இந்தக் கதையில் பொழுதாப் போகும், கிடையவே கிடையாது. வார்த்தை ஜாலங்களை அள்ளிவிசிறும் வித்தையா கற்றேன் – கனவுலகின் கதை சொல்ல? இல்லையந்த வாழ்வைத்தான் கண்டேனா, கேட்டேனா? பாம்பின் விசமே காலநீட்சியில் திரட்சியுற்று திரட்சியுற்று இரத்தினம் ஆகிறதாம். விசமென்றா அழைத்தீர் அதை. இதுவும் வலிந்து வாழ்ந்த மாந்தனின் கதை. வலியென்றா காண்பீர்? இல்லை விசமென்றா சொல்வீர்? நானறியேன். நீரே அறிவீர் அதை. கதை சொல்லிப் போவதே என்கடன்."
கவியழகன் சுகுமார் என்ற மனிதனின் கதையாய் சொல்கிறார். சுகுமார் ஏழ்மைச்சூழலிருந்து இயக்கத்திற்கு வந்தவன். தத்துவார்த்தமாய்ப் பேசுபவன். அன்பும் பொறுமையும் பிறர் மீது கருணையும் கண்டவன். நண்பர்களுக்காகக் குற்றங்களை ஏற்றுத் தண்டனை பெறுபவன். நஞ்சுண்ட காட்டை வாசிக்கும் யாவர் மனதிலும் சுகுமாரும் அவன் அக்காவும் ஆழப்பதிந்து விடுவார்கள். அக்காவின் ஆசைகளை நிறைவேற்றுவதற்காக, அவன் கடினமாக உழைப்பதை படிக்கும் போது கனத்து விடுகிறது மனது. கற்பனை எந்த இடத்திலும் துருத்திக்கொண்டிருக்காமல், மிக யதார்த்தமான வாழ்க்கைப் பதிவுகளின் தொகுப்பே நஞ்சுண்ட காடு.
முதல் நாவல் போலல்லாது பயிற்சி அனுபவங்களை, போராளிகளின் குணங்களை, கதாபாத்திரங்களை வெகு நேர்த்தியாக அதே நேரம் சம்பவங்களை மெல்லிய நகைச்சுவை இழையோட சொல்கிறார். அதே வேளை ஒவ்வொரு போராளியும் பல்வேறுபட்ட குடும்ப, வாழ்க்கைப் பின்னணியில் இருந்து போராட வருகின்றனர் என்ற கதையையும் பதிவு செய்கிறார். நாவலின் பல இடங்களில் வரும் உரையாடல்கள் நம்மை மேற்கொண்டு செல்ல விடாமல் யோசிக்க வைப்பவை. அதன் தத்துவவிசாரங்கள் நம்மனதில் பல கேள்விகளை எழுப்புபவை.
நாவலில் பிற்பகுதியில், முகாமை விட்டு வந்து ஒன்றரை வருடம் போன பின்பு, கதைசொல்லி சுகுமாரின் குடும்பத்தைக் காணப் போகும் நிலையில், இதுவரை சுகுமார் சொன்ன கதைகளின் வாயிலாக அறிந்த அக்காவை நேரில் பார்க்கிறார். அக்கா உறவுகளை இழந்து, வறுமையில் உழன்று, நாதியற்று நிற்பதையும், சுகுமாரின் பெற்றோர், சகோதரர் அனைவரும் ஒருவர் பின் ஒருவராக உயிரிழக்க, அக்கா மாத்திரம் கதியற்று நிற்பதைக் கண்டு கதைசொல்லி நெஞ்சு குமுறுகிறது. அக்காவின் பிம்பம் துயரபிம்பமாய் நம் மனதில் பதிகிறது. படித்து முடித்தவுடன் மனசு கனத்து விடுகிறது.
நாவலிலிருந்து சில பகுதிகள் :
“வானத்தில் நிலவு ஏணை மாதிரித் தூங்குது. இதில் ஏறிப் படுக்க எத்தனை பேருக்குத் தெரியும்?”
ஆருக்கெண்டாலும் வானம் மனசுக்கு இதமான ஒரு விசயமில்லையா?
இளகின மனங்களுக்குத்தான் அப்பிடி. அதிக பணமுள்ளவர்களுக்கு அப்படியில்லை.
அவர்களுக்கு மனம் இளகிறதில்லை. மற்றவனை எட்ட இன்னும் பணம் போதாது என்ற கவலையவர்களுக்கு. அந்த முயற்சியில மனமிறகிற விடயங்களைப் பாக்கவோ கேக்கவோ, அவையளுக்கு அவகாசம் இருக்கிறதில்லை.
பொதுவா ஏழைகளுக்கு வானம் ஒரு கொடை தான். முதல்ல வயிறு நிறைய வேணும். வயிறு நிறையாட்டிக்கு உன்ரை ஏணை அதுகளுக்கு வெறும் சட்டியாகவோ, பிச்சைப் பாத்திரமாகவோ தான் தெரியும்”
”அப்பாக்கு இன்ன வேலையெண்டு இல்லை கூலிவேலைக்குப் போவார். சுருட்டு சுத்தப் போவார். மனிசன் குடியும். ஊரில செத்த வீடெண்டால் பட்டினத்தார் பாட்டுபடிக்க இவரைத்தான் கூப்பிடுகிறது. இப்ப அவருக்கு ஏலாது. பாரிசவாதத்தில கால் இழுத்திட்டுது. மூத்தது அக்கா. மற்றது அண்ணா. இரண்டு தம்பி சின்னாக்கள். அண்ணை பொறுப்பில்லாதவன். ஊர் சுத்துறதுதான் தொழில். நான் படிச்சுக்கொண்டிருந்தன். அம்மா சந்தையில காய்கறி வித்தா. கொஞ்ச வருமானம். சாப்பிடறதே பெரும்பாடு. அதில படிக்கிறதென்னெண்டு. நான் பின்நேரத்தில சைக்கிள் கடையில உதவிக்கு நிண்டன். வகுப்பில பத்துக்கும் இருவதுக்கும் இடையில வருவன். அதுக்கு மேல வர ஏலாது. பணமில்லை. ரீயூசனில்லை. பணமில்லை. அதால வீட்ட படிக்கவும் மனமில்லை. பணமில்லாததால் படிப்பு ஒரு பிரச்சினையாயுமில்லை. வீட்டில அதவிடப் பெரிய பிரச்சினைகள் முக்கியமானதாக இருந்திது.”
”நாலு பெடியளுக்கு ஒரேயொரு பொம்பிளைச் சகோதரம் அக்கா. அதால அக்காவிலதான் பாசம். அவளுக்கும் என்னில பாசம்தான். சைக்கிள் கடைக்காரன் தொடக்கத்தில முப்பதுரூபா தருவார். சொந்தமா உழச்சதில அதே பெரிய காசாதான் இருந்திது. தம்பியாக்களுக்கு கொப்பி பென்சில் எண்டு எதிலும் குறைவிடுறதில்லை. அம்மாட்டக் காசைக் குடுப்பன். கொஞ்சநஞ்சம் வாற சில்லறைக் காசை அக்காட்ட உண்டியலுக்க போடக் குடுப்பன். அதுக்கு உண்டியலுக்குப் போட காசு கொடுத்தா படு புழுகம். அது ஆறாம் வகுப்போட படிப்பைவிட்டுட்டு. அம்மா சந்தைக்குபோறதால சமையல் வீட்டலுவல் எல்லாம் அக்காதான். அக்கா கோழி வளத்திது. முட்டை விக்கும். எனக்கும் இரகசியம்மா அவிச்சுத்தரும். சிலவேளை அதை நான் இரகசியமா தம்பியாக்களுக்குப் பாதிப்பாதி குடுப்பன். என்ர உழைப்புப் பெரிய உழைப்பில்லை. ஆனாலும் இப்ப குடும்பத்தில மதியானச் சாப்பாடு, இரவுச்சாப்பாட்டுக்குப் பஞ்சமில்லை. காலமையில தம்பியாக்களுக்கு ஒவ்வொரு சங்கிலி பணிஸ் அக்கா குடுக்கும். ஆடு வளத்தம். ஆட்டுப்பாலில ஒரு தேத்தண்ணி. அதுதான் மற்றாக்களுக்குச் சாப்பாடு. பழசு ஏதாவது மிஞ்சியிருந்தால் அத குழைச்சு ஒரு திரணை தின்னுவம்.
”அக்காக்கு உண்டியலில காசு போடுறது ஒரு புழுகம் எனக்கு அதுகின்ர புழுகத்தப் பாக்கிறதில ஒரு புழுகம் சில்லறை குடுக்கிற நேரத்திலயெல்லாம் நினைப்பன்: தாள் காசா நூறு ஆயிரமா குடுக்கவேணுமெண்டு. இப்போதைக்கு இரண்டும் அஞ்சும்தான் குடுத்தன். உண்டியல் காசை அக்கா என்ன செய்யும்? இப்படி அடிக்கடி நான் நினைப்பன். ஆனாலும், எனக்குத் தெரியும்: அது ஒண்டில் எங்கட அம்மன் கோவில் திருவிழாவுக்காக. இல்லாட்டி தைப்பொங்கல் அண்டைக்கு வாற மருதடிபிள்ளையார் கோவில் தேருக்காக எண்டு. இந்த இரண்டும்தான் அக்கா புழுகமா எடுபடுற கொண்டாட்டம். அக்கா எடுப்பா வெளிக்கிடுற நாட்களும் இவை தான். எடுப்பென்றால் சும்மா இலேசுப்பட்ட எடுப்பில்லை. எக்கச் சக்கமான எடுப்பு. அக்கா வீட்டவிட்டு வெளியில வெளிக்கிடுற நாட்களும் அம்மன்கோவில் திருவிழாவும் மற்றது மருதடித்தேரும்தான். அக்காவைப் பொறுத்தவரை வெளியுலகமெண்டா அநேகமா இந்த இரண்டும்தான். இல்லாட்டிக்கு, அருமை பெருமையா எப்பையாவது இருந்திட்டு மானிப்பாய் ஆஸ்பித்திரிக்கு. இதவிட வெளியுலகம் இருந்ததா இல்லை. இதால இந்தத் திருவிழாவுக்கு வெளிக்கிடுறதெண்டால் வீட்டுல அக்காவின்ர அமளிதுமளி பெரிய திருவிழா…”
அவன்ர குரல் தணிந்தது. தழுதழுத்தது. கதைசொல்லிவந்த வேகமும் உற்சாகமும் இந்த இடத்தில நின்றுபோச்சு. எனக்கு மனதைப் பிசைந்தது. இருட்டில அவனது முகம் சரியாத் தெரியேல்லை. நிலவு மரக்கிளைகளுக்கிடையே ஆங்காங்கே விழுந்தது. ஆனாலும், அவன் அழுகிறான் என்று எனக்குத் தெரிந்தது. எனக்கும் தொண்டை கட்டுவதுபோல இருந்தது. நான் திரும்பிப் பார்த்தபடி மெளனமாயிருந்தேன். அவன் விறைப்பாய் மற்றப் பக்கம் திரும்பி வானத்தைப் பார்த்துக்கொண்டிருந்தான். பாதியில் உட்குழிந்திருந்த நிலவு வானத்தில் வெறும் சட்டியாய் மரக்கிளைகளுக்கிடையே தெரியாமற் தெரிந்தது.
அவன் தணிந்த குரலில் கதைத்தான். வார்த்தைக்கு வார்த்தை இடைவெளி விட்டுவிட்டுக் கதைத்தான். அந்த இடைவெளிக்குள் அகப்பட்டு அவஸ்தைப்பட்டு அவஸ்தைப்பட்டு வெளியே வந்தான். இரண்டு வார்த்தைகளுக்கிடயிலான மெளனத்தில் என் மனம் நசிந்தது. இது ஒரு வலி. பட்டால் மட்டும் புரியும் வலி.
நஞ்சுண்டகாடு வாசித்தே தீர வேண்டிய நாவல்.
அகல் பதிப்பகம்.
பக்கங்கள் 144.
விலை ரூ.135
ராஜ் ப்ரின்ஸ் பக்கம்
'அந்நியமாதல்'
அர்த்தம் என் வாழ்வில் இருந்தே பார்ப்போமா?
வழக்கமாக நான் அலுவலகம் செல்லும் சாலையில்
ஒரு பழைய கட்டிடத்தின் வெளியில் நடை பாதையில்
கிட்டத்தட்ட 15 வருடங்களாக ஒரு முதியவர் செருப்பு
தைத்துக்கொண்டு இருப்பார். எப்போதும் அவரை
கடக்கும் பொழுதெல்லாம் ஒரு மெல்லிய
புன்னகையை எனக்கு பரிசளித்து நான் கொஞ்சம்
வாகனத்தை நிதானப்படுத்தும் பொழுது என் கால்களை
பார்ப்பார்.
அவர் என் கால்களை பார்ப்பதற்கு காரணம் எனக்கு 15
வருடங்கள் முன்பு ஒரு சாலை விபத்தில் கால்களில்
ஒரு காம்பௌன்ட் ஃப்ராக்ச்சர் எனப்படும் ஒரு எலும்பு
முறிவு ஏற்பட்டு அறுவை சிகிச்சை நடந்ததை அவர்
அறிவார்.
மேலும் 'யூஸ் அண்ட் த்ரோ' கலாசாரத்தில்
ஊறிப்போனவன் என்பதால் இது வரை நான்
என் செருப்புகளை அவரிடம் தைக்கக் கொடுத்தது இல்லை.
அந்த குற்ற உணர்வுடன் தர்ம சங்கடத்துடன்
அவருடைய கண்களை சந்திக்காமல் நானும்
புன்னகைத்து விட்டு சென்று விடுவேன்.
புன்னகையின் வாயிலாக மட்டுமே நாங்கள் இது வரை
பேசிக்கொண்டு இருந்தோம்.
இன்று மதியம் அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு மதிய
உணவிற்கு செல்லும் போது வழக்கமாக அவர் அமர்ந்து
இருக்கும் இடத்தில் பிரம்மாண்டமான
பூதமொத்த பொக்லைன் எந்திரம் ஒன்று அந்த இடத்தை
ஆக்கிரமித்து இருந்தது.
அவர் இல்லை...
எங்கே போனார் அந்த முதியவர்? இனி எங்கே
போவார்? இனி என்ன செய்வார்?
எளியவர்களை ஓட ஓட வாழ்வின் எல்லைக்கு விரட்டி
அடித்து விட்டால் இனி அந்த எதிர்பார்ப்பில்லா
கள்ளமில்லா புன்னகைக்கு
நானும் எங்கேதான் போவேன்?
************************************************************************************
ஈரோடு கதிர் அவர்களின் ஒரு தரமான படைப்பு
‘கிளையிலிருந்து
வேர் வரை’
அற்புதமான கட்டுரைகள்
வாசிக்க நினைவுகளை சேமிக்க
பதிப்பகம் : Discovery Book Palace
****************************************************************************
நண்பர்கள் தங்களது படைப்புகளை நம் அகல் மின்னிதழுக்கு அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி :
தொடர்- சிவக்குமார் அசோகன்
ஜலஜாவின் டைரியிலிருந்து - 7
இதனிடம் கேட்கக் கூடாது என்று தான் இருந்தேன். படித்த எல்லாவற்றையும் டெலிட் செய்துவிட்டாலே... நான் பார்த்துவிட்டேன் என்று இது புரிந்து கொள்ளும். அந்த உறுத்தலே கூட போதும் என்று தான் நினைத்தேன். இருந்தாலும் இந்த விஷயத்தைப் பற்றி பேசும் போது அதன் மூஞ்சைப் பார்க்க வேண்டும் போல் இருந்தது.
என்ன பழக்கம் இது இவ்ளோ கேவலமா? ‘சாட்டிங் இப்படித் தான் பண்ணுவீங்களா’? என்று ஆரம்பித்ததுமே அதன் மூஞ்சி படு கலவரமாக மாறியது. பார்த்துட்டியா... ச்சும்மாடி.. ஜஸ்ட் ஃபன்! சீரியஸா எடுத்துக்காதே... என்று இது சொன்னதும் தான் எனக்கு கோபம் பற்றிக் கொண்டது.
''எதுங்க ஃபன்... யாரோ ஒரு பொம்பளையோட சைஸைக் கேட்கறதா..? டார்லிங் வேற... குட்டிமா வேற...' பேசிக்கொண்டிருக்கும் போதே இடைமறித்தது.
''ஜலஜா ஸ்டாப்... உனக்கு இது புரியாது?! இது ஜஸ்ட் ஒரு சாட் அவ்ளோ தான். அடல்ட் சாட் பண்ணாத ஆம்பளைங்களே உலகத்துல கிடையாது. நீ வானத்துக்கும் பூமிக்கும் குதிக்காதே... அவ கூட மேரீட்... சைன் அவுட் பண்ணும் போது அவளும் மறந்திடுவா... நானும் மறந்திடுவேன்.''
இதே சாட்டிங்கை நான் செய்தால் இது ஒத்துக்கொள்ளுமா தெரியாது, அது எனக்கு முக்கியமுமில்லை. 'நீங்க வேறனு நினைச்சேங்க' என்றேன். பாழாய்ப் போன கண்கள் உடனே குளம் கட்டியது. பொசுக்கென்று அழுவதை மட்டும் கடவுளே எனக்கு நிறுத்திவிடு. பிற்பாடு நினைத்தால் எனக்கே வெட்கமாயிருக்கிறது. இந்தக் காரியத்திற்கு அது தான் அழ வேண்டும். அதுவே குத்துக்கல்லாட்டம் இருக்கிறது. நான் ஏன்?
'அவனவன்... சாட்டிங்க்ல ஆரம்பிச்சு டேட்டிங்க் போய்... ரூம் புக் பண்ணிட்டு போய்ட்டு இருக்கானுக... நான் இது வரைக்கும் ஒரு பொம்பளைட்ட நம்பர் கூட ஷேர் பண்ணினது இல்லை தெரியுமா...? சும்மா டைம்பாஸுக்கு பண்ணா... பெரிசா அலட்டிக்குவே... முதல்ல என் ஐடியை நீ ஓப்பன் பண்ணினதே தப்பு... உன் டைரிய என்னிக்காவது நான் தொட்டிருக்கேனா..?'
ஐடி வேற டைரி வேறங்க... ‘தவிர நீங்க படிச்சே பார்த்தாலும் பெரிய ஷாக் ஒண்ணும் இருக்காது’ என்று சொல்லத்தான் நினைத்தேன். பேசி ஒன்றுமில்லை என்று விட்டுவிட்டேன். அதன் பிறகு நான் எதுவும் பேசவே இல்லை. சுத்தமாக தவறை உணரும் விதமாக இது பேசவில்லை. அதை விட இது தவறு என்ற எண்ணம் கூட இதனிடத்தில் இல்லை.
மனசு பூரா அழுக்கை வைத்துக் கொண்டு குளிக்கச் சென்றது. குளித்துவிட்டு வந்து கொட்டிக் கொண்டது... இதோ இந்த இரவில் இதைப் பற்றி தான் எழுதிக் கொண்டிருக்கிறேன் என்று கூட தெரியாமல் அல்லது தெரிந்தே காலைத் தூக்கிப் போடுகிறது.
பிள்ளையைக் கொண்டு சொச்ச வாழ்வை இதனுடன் கழிக்க வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கும் எனக்கு, இப்போதைக்கு இருக்கிற ஒரே ஆறுதல் இவரை 'அது... இது...’ என்று சொல்வதில் தான் கிடைக்கிறது.
மிருகத்தை பிறகு எப்படிச் சொல்வதாம்.
***********************************************************************************
நம் அகல் மின்னிதழில் SK. மகேஷ்வரன் எழுதும் ‘சஸ்பென்ஸ் த்ரில்லர் தொடர்’ வரும் செப்டம்பர் மாத இதழிலிருந்து ஆரம்பமாகிறது
வாழ்க்கைப் பயணம்
அனுபவங்கள்
அந்த மறக்க முடியாத காலைப் பொழுதும் அன்றைய நிகழ்வுகளும் இன்றும் என் நினைவில் நீங்காத ரணமாய்.
அப்போது எனக்கு 12 வயது. ஏழாவது வகுப்பில் படித்துக் கொண்டிருந்தேன். ஒரு வாரமாகவே எங்கள் குடியிருப்பு சார்ந்த பகுதி முழுதும் ஊரடங்கு உத்தரவு. சில நிமிடங்களுக்கு தளர்த்தப்படும் மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வரும். இப்படியே நாட்கள் கழிந்தன. ஒரு இரவில் அப்பா பாதுகாப்பு படையினரின் வாகனத்தில் துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்களுடன் வீடு திரும்பினார். அதன் பிறகு வேலைக்குப் போகவே இல்லை.
காலை வீட்டிற்கு வெளியே உள்ள சாக்கடையை பார்த்தால் மனம் அதிர்ந்து அலறினாலும் வாய் பேசாது பீதியில் உறையும். ஒரு பக்கம் மனிதத் தலையை பார்க்க நேரிடும். என்னைப் போல் இன்னொருத்தி அவள் வீட்டு வாசலில் அம்மனித உடலைப் பார்த்திருக்கக் கூடும். இப்போதும் அந்தக் காட்சியை மனம் அசை போட்டால் இருதயத் துடிப்பின் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாது. Isordil, Losartan எதனாலும் பலன் இல்லை.
உற்சாகமாய் இருந்த எனக்குப் பிடித்த என் அமைதியான மனித நகரம் அமைதியான பிண மயானமாய் போனதன் காரணம் எனக்குத் தெரியவில்லை.
என்னுடன் ஒரே வகுப்பில் படித்து வந்த என் ஸ்நேகிதன் இஸ்மாயிலும் அவனது குடும்பத்தாரும் தங்களது வீடு, உடமை, அவன் வீட்டில் பிரத்தியேகமான சுவையுடன் எங்கள் இனிப்பு வேட்கையை தனித்த ஃபஸிலி மாம்பழங்கள் நிரம்பிய மா மரம் என அனைத்தையும் ஒரு பகல் பொழுதில் ‘தவிக்க’ விட்டு தங்கள் உயிரைப் பாதுகாக்க ‘தவிப்புடன்’ பாதுகாப்பு படையினர் வாகனத்தில் எங்கோ சென்றனர். அவன் குடும்பத்தைப் போல் பல குடும்பங்கள்.
இந்த சூழலில் இஸ்மாயில் தான் படிக்க வைத்திருந்த என்னுடைய social science நோட்சை பாதுகாப்பாக அவர்கள் வீட்டு எலுமிச்சை மரத்தடியில் புதைத்து வைத்துவிட்டான். அவர்கள் குடும்பத்தார் எல்லோரும் உயிர் குறித்து பதற, இஸ்மாயிலின் நட்பு மனம் என் நோட்ஸ் குறித்து யாரிடமாவது சொல்ல வேண்டும் என பதறியுள்ளது. எங்கள் நண்பன் மோகனை அவன் கிளம்பும் தருணத்தில் பார்க்க அவனிடம் விஷயத்தை சொல்லி விட்டு, என்னிடம் மறக்காமல் சொல்லுமாறு கேட்டுக் கொண்டான். மன பாரம் குறைந்தவனாய் அவர்கள் வீட்டினருடன் அவன் புறப்பட்டுவிட்டான். அதன் பின் அவன் என்ன ஆனான்? இன்று வரை தெரியவில்லை. யாரிடமும் விசாரிக்கும் மனத் துணிவும் அப்போது என்னிடம் இல்லை.
இப்போதும் அவனை நினைக்கும் போதெல்லாம் மனதை என்னமோ செய்கிறது. தினமும் காலை கடவுளிடம் பிரார்த்தனை செய்யும் போது அவனும் அவன் குடும்பத்தாரும் நிம்மதியான அமைதியான வாழ்வை வாழ வேண்டும் என்றே வேண்டுகிறேன்.
என் அலமாரியில் பளபளப்பான காகிதங்கள் நிரம்பிய புத்தகங்கள், நவீன முறையில் பிரிண்ட் செய்யப் பட்ட நூல்கள், ஆகச் சிறந்த எழுத்தாளரின் படைப்புகள் என நிரம்பியிருந்தாலும், பழுப்பேறிய கிழிந்த காகிதங்கள் நிரம்பிய அந்த 51 வருடத்திற்கு முந்தைய notes தான் எனக்கு பொக்கிஷம். அதில் தான் அவனின் ஆத்மார்த்தமான ஸ்நேகிதத்தின் நறுமணமும் அவன் வீட்டு மண் வாசமும், எலுமிச்சை வாசமும் என் நாசிக்கு மட்டும் எட்டி மனம் முழுதும் வியாபித்திருக்கிறது. இன்று நான் 60 சொச்சம் வயது நிரம்பிய பெண்மணி. அனைவரிடம் சொல்லிக் கொள்வது நட்பை உணருங்கள். நட்பை அறிந்து கொள்ளுங்கள். நட்பை ஸ்வாசியுங்கள். நட்புடன் ஜீவித்திருங்கள். வாழும் காலம் கொஞ்சமே.
பின் குறிப்பு : 1964 ஆம் ஆண்டு நம் பக்கத்து நாட்டின் கிழக்குப் பகுதியில் திட்டமிட்டு அந்நாட்டு அரசாங்கமும் வன்முறையாளர்களும் ஒரு இனத்தினர் மீது தாக்குதல்களும் இனப்படுகொலைகளையும் அரங்கேற்ற, நம் நாடு அந்த மக்களை அகதிகளாக ஏற்றுக் கொண்டது. அதற்காக விசேஷ ரயில்கள் இயக்கப்பட அந்த ரயிலில் வந்த உருக்குலைந்த மக்களும் அதன் பின் நம் நாட்டின் கிழக்கு பகுதி மாநிலங்களில் நிகழ்ந்த மதக் கலவரங்களின் காலகட்டத்தில் வாழ்ந்த ஒரு பெண்மணியின் ரணமான பக்கம்.
No comments:
Post a Comment